Skip to main content

கோட்டைக்கு பாதுகாப்பு வேண்டாமா? இபிஎஸ், ஓபிஎஸ் கேள்வி (ஒரு கற்பனை பேட்டி)  

Published on 31/03/2018 | Edited on 31/03/2018

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதைத் தவிர்த்து, மத்திய மோடி அரசு தமிழகத்துக்கு மீண்டும் ஒரு முறை அல்வா கொடுத்துள்ள நிலையில், அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவு குறித்தும், அதிமுக போராட்டம் குறித்தும் இபிஎஸ், ஓபிஎஸ்சை சந்தித்துக் கேட்டோம். கோட்டையில் முதல்வரின் அறையில் எதிரெதிரே அமர்ந்திருந்த அவர்கள் நமது கேள்விகளுக்கு அளித்த பதில்கள்…

 

ops eps funny

 

நாம் : கடைசி நிமிடம் வரைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பாங்கன்னு எப்படி சார் நம்புனீங்க?

 

ஓபிஎஸ் : நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு அம்மா எங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்காங்க. அவுங்கள அடி பணிஞ்சு நம்பினதுக்கு பலனா முதல்வராவே ஆக்கலையா? இப்போவும் எங்கள் பதவிகளை காப்பாத்தனும்னா மோடியை நம்பித்தானே ஆகனும்.

 

இபிஎஸ் : மோடியை நம்பாம நாங்க இனி யாரை நம்ப முடியும்? அவரு எப்படியும் 2019 தேர்தல் வரைக்கும் பிரதமராத்தான் இருப்பாரு. அவரு இருக்கிற வரைக்குமாவது நாங்க பாதுகாப்பா இருக்கலாமில்லையா?

 

நாம் : மேலாண்மை வாரியம் அமையும்னு நம்புன ஒங்க நம்பிக்கை வீணாப் போச்சே சார்?

 

ஓபிஎஸ் : நிச்சயமா வீணாப் போகாது. மத்திய அரசுக்கு ஒரு வார்த்தையில் சந்தேகம் இருந்துருக்கு. அந்த வார்த்தைக்கு விளக்கம் கிடைச்சவுடனே எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துடும்.

 

இபிஎஸ் : நாங்களும் சும்மா இல்லையே. மோடியின் உத்தரவைப் பெற்று அவருக்கு எதிராவே உண்ணாவிரதம் அறிவிச்சிருக்கோம். அது இல்லாம, உச்சநீதிமன்றத்தை அவமதித்ததாக மத்திய அரசுமீது வழக்கு போட்டிருக்கோம்.

 

நாம் : உண்ணாவிரதப் போராட்டத்தை ஓபிஎஸ்தானே முதலில் அறிவித்தார். மோடியிடம் அனுமதி பெற்றது அவரா? நீங்களா?

 

இபிஎஸ் : ரெண்டுபேரும் சேர்ந்துதான் எந்த அனுமதியையும் வாங்குவோம். இதையும் ரெண்டுபேரும் சேர்ந்துதான் வாங்கினோம். ஆனா, அவரு முதல்ல பேசினதால, அவரு சொல்லிட்டாரு. அப்பவும், எனது அதிகாரத்தை காட்டுறதுக்காக தேதியை மாத்தி அறிவிக்கலையா?

 

நாம் : உண்ணாவிரதப் போராட்டத்துல நீங்க ரெண்டுபேரும் பங்கேற்கவில்லையே. அதுக்கு மோடி அனுமதி கொடுக்கலையா?

 

இபிஎஸ் : என்னா சார் நீங்க? அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்று எல்லோரும் உண்ணாவிரதத்துக்கு போய்ட்டா, கோட்டையை யார் காப்பாத்துறது? அதுமட்டுமில்லை. எங்கே போனாலும் நாங்க ரெண்டுபேரும் சேந்தே போகனும்னு மோடி சொல்லிருக்காரு. ஒருத்தர விட்டுட்டு ஒருத்தர் தனியா எதையும் செய்யக்கூடாதுன்னு சொல்லிருக்காரு.

 

நாம் : கடைசியா ஒரு கேள்வி சார். காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா அமையாதா சார்? மோடி ஏதாச்சும் சொல்லிருக்காரா?

 

இருவரும் : அட போங்க சார். அதையெல்லாம் கேட்டு அவரு கோபத்துக்கு ஆளாக நாங்க என்னா முட்டாளா? அவமதிப்பு வழக்கையே ரெண்டு அதிகாரிகள் மீதுதான் போட்டிருக்கோம். மோடிக்கும் மேலாண்மை வாரியத்துக்கும் சம்பந்தமே இல்லை.

 

இதைக் கேட்டதும் இடத்தைவிட்டு ஓட்டமெடுத்தோம் நாம்.