Skip to main content

ஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்! 

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தனது தற்கொலைக்கு முன்பு செல்போனில் எழுதிய கடிதம், சென்னை -மயி லாப்பூரிலுள்ள தமிழக அரசின் தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டது. "அந்தக் கடிதம், உண்மை தான்' என்று முதற்கட்ட முடிவை சொல்லியிருக்கிறது தடயவியல் ஆய்வுமையம். அக்கடிதத்தில்... ஐ.ஐ.டி. துணை பேராசிரியர் கள் மட்டுமல்ல சக மாணவிகள் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்துகொண்டிருக்கிறது ஏ.டி.ஜி.பி. ஈஸ்வரமூர்த்தி தலை மையிலான மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

 

IIT caseஇந்நிலையில்தான், 2019, டிசம்பர் 5-ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்த மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், தனது மகள் பாத்திமாவின் மரணத்தில் 12 விதமான சந்தேகங்கள் இருப்பதாக புகார் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து, அப்துல் லத்தீப்பிடம் நாம் கேட்டபோது... "முதலில், அமித்ஷா அவர்கள்தான் சந்தித்தார். அவருடன், 8 கேரள எம்.பி.க்களும் இருந்தார்கள். அவர்களிடம் எனது மனக் குமுறலை வெளிப்படுத்தினேன். குறிப்பாக, ஒரு மர்ம மரணம் நிகழ்ந்த பிறகு அந்த இடத்திலுள்ள தடயங்கள் அழியாமல் பார்த்துக்கொண்டால்தான் விசாரணையில் உண்மையை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். அப்போதுதான், உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கமுடியும். ஆனால், கோட்டூர்புரம் காவல்நிலைய போலீஸாரின் செயல்கள், குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாக தடயங்களை அழிக்கும் விதமாக இருந்தன. மரணம் நிகழ்ந்த அறையைக்கூட பூட்டிவைக்கவில்லை. எது நடந்தாலும் அதுகுறித்து டைரியில் எழுதிவைக்கும் பழக்கம் பாத்திமாவுக்கு உண்டு. செல்போனில் மரண வாக்குமூலம் எழுதிவைத்திருந்தது போல, வேறு ஏதாவது டைரியிலும் தனது மரணத்துக்கான காரணத்தை எழுதி வைத்திருக்கலாம். நாங்கள் போய் பார்க்கும்போது அவளது அறையில் புத்தகங்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன.

போலீஸார், அறையை திறந்து வைத்திருந்ததால் அந்த தடயம் அழிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், மோப்ப நாய் பரிசோதனையோ கைரேகை பரிசோதனையோ முறையாக செய்யப்படவில்லை. பாத்திமா இறப்பதற்கு முந்தைய நாட்களில் மன வேதனையோடு இருந்த வீடியோ காட்சிகளையும் ஐ.ஐ.டி நிர்வாகத்திடமிருந்து போலீஸார் கைப்பற்றவில்லை. மரணம் நிகழ்ந்ததும் ஐ.ஐடி. நிர்வாகமே உடனடியாக போஸ்ட்மார்ட்டம் மற்றும் எம்பாமிங் செய்து சீக்கிரமாக அனுப்பிவைத்தது. இப்படி, பல்வேறு சந்தேகங்களை அமித்ஷாவிடம் சொன்னோம். கிட்டத்தட்ட, 20 நிமிடங்களுக்குமேல் பேசியவர்... "பெரிய இழப்புதான். மிக தீவிரமாக விசாரிக்கப் படவேண்டிய புகார்' என்றார்.


"ஏற்கனவே பாத்திமாவின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று 51 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு வலியுறுத்தியிருக்கிறார்கள். வெங்கையா நாயுடு தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது. பாத்திமாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் வேறு எந்த மாணவ-மாணவிகளுக்கும் இப்படி ஏற்படக்கூடாது. அதனால், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட இந்தியாவிலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் நடக்கும் மாணவர்களின் மரணம் குறித்து பொது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் என்று முடிவெடுத்து வைத்திருக்கிறோம்'’ என்றும் அமித்ஷா தெரிவித்தார். அதற்குப்பிறகு, பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பாத்திமா மரணத்தில் உள்ள சந்தேகங்களையும் கோட்டூர்புரம் காவல் நிலைய போலீஸார் தடயங்களை கைப்பற்றாதது குறித்தும் புகார் அளித்தோம்.


சி.சி.பி.க்கு விசாரணை மாறுவதற்கு 3 நாட் கள் ஆன நிலையில்... பல்வேறு தடயங்கள் இடைப்பட்ட நாட்களில் அழிக்கப்பட்டுவிட்டன. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சி.பி.ஐ. பொதுவிசாரணை செய்யும் என்று பிரதமர் அலுவலகத்தினர் தெரிவித்தார்களே தவிர என் மகளின் மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என்ற கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை. டெல்லியிலிருந்து நேராக சென்னை வந்து மீண்டும் மத்திய குற்றப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ஈஸ்வரமூர்த்தி சாரை சந்தித்து, "உங்கள் விசாரணையின் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது'’என்று சொன்னோம். அவரும், ‘"இரண்டு மாநிலங்கள் என்பது மட்டுமல்ல... மத்திய அரசிடமிருந்தும் இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கச் சொல்லி அழுத்தம் வருகிறது. இது எனக்கு சவாலான வழக்கு. முழுமையான விசாரணையை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம் என உறுதி அளித்தார்'' என்றார்.

அவரிடம் "துணை பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் தவிர்த்து மிலிண்ட் பிராமே, ஹேமச்சந்திர காரா உள்ளிட்ட பெயர்கள் அடங்கிய பாத்திமாவின் "சூஸைடு நோட்'’ பொய்யானது என்று சொல்கிறார்களே' என்று நாம் கேட்டபோது... "அது பொய்யானது அல்ல. சுதர்ஷன் பத்மநாபன், ஹேமச்சந்திர காரா, மிலிண்ட் பிராமே என மூன்று பெயர்களுமே பாத்திமாவின் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், 7 மாணவிகளின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. அனைவரிடமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது'' என்றார். நீதி அத்தனை எளிதாக கிடைத்து விடுமா ஐ.ஐ.டி.க்குள்!

 

CAB
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்