Skip to main content

ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின் அதிரடிக்கு அணை போடும் டி.ஜி.பி.!

pon manickavel


 


"சிலைக் கடத்தலில் ஈடுபட்ட ஒருத்தரும் தப்ப முடியாது. எல்லோரையும் கைது செய்வேன்..” கடந்த 30-ம் தேதி மீசையை முறுக்கிவிட்டபடி இப்படிச் சொன்னார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல். அன்றைய தினம் அவர் பணி ஓய்வு பெற்றாலும், அவரது சேவை நாட்டுக்குத் தேவை என,   ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. 


தீர்ப்பை ஏற்றுக் கொண்ட பொன்.மாணிக்கவேல், தனக்கு அரசுத் தரப்பு எந்த நெருக்கடியும் அளிக்கவில்லை. ஆனால், அதிகாரிகள்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.  இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது 18 நாட்களிலேயே தெரிந்துவிட்டது. அதாவது, பொன்.மாணிக்கவேல் ரிட்டயர்டு ஆன பிறகு, எந்தப் பிரச்சனையும் இருக்காது என பலர் நம்பி இருந்தனர். ஆனால், அவர்களது நம்பிக்கை பொய்த்துப் போனதால், பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.


இந்நிலையில், விசாரணையைத் தீவிரப்படுத்திய பொன்.மாணிக்கவேல், இரண்டு நாட்களுக்கு முன் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளைக் கைது செய்தார். இது பலரது வயிற்றில் புளியை கரைத்தது.  அவருக்கு கீழே பணியாற்றும் காவலர்களை, பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக புகார் கொடுக்க வைத்து, இப்போது  நெருக்கடி கொடுக்கிறது ஆளுந்தரப்பு. மேலும் சில முக்கிய புள்ளிகள் இந்தச் சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  பொன்மாணிக்கவேலுக்கு எதிராக சிலைகடத்தல் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோ உள்ளிட்ட 13 காவல் அதிகாரிகள் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


 
புகாரில், தங்களை வேலை பார்க்கச் சொல்லி நெருக்கடி கொடுப்பதாகக் கூறியிருக்கின்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஐ.ஜி மீது புகார் தெரிவித்தது குறித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. 6 மாத பணிக்கு அழைத்துவிட்டு, 15 மாதங்களாக சிலைத் திருட்டு  தடுப்பு பிரிவில் வைத்திருப்பதாகவும், சொந்த ஊருக்கு இடமாறுதல் கோரி இருப்பதாகவும் தெரிவித்தனர். 


இதிலிருந்து நன்றாகவே தெரிகிறது, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த ஏற்பாடு என்பது. இடமாறுதல் வேண்டும் என்றால், அதற்கான காரணங்களைத் தெரிவித்து மேலதிகாரியிடம் மனு அளித்து, நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இதுதான் நடைமுறை. ஆனால், இடமாறுதல் கேட்டோம் என பிரஸ் மீட் வைத்துச் சொல்வது எல்லாம் தமிழக காவல் துறைக்கு புதிது. இதற்காகவே, பிரஸ் மீட் வைத்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், சிறிது நேரம் கழித்து வெளியான டிஜிபி அலுவலக செய்திக் குறிப்பில், பொன்மாணிக்கவேல்.  தங்களை சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வற்புறுத்துவதால் தங்களுக்கு பணி இடமாறுதல் வேண்டும் என்று 13 காவல் அதிகாரிகள் புகார் மனு அளித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே,  ஆக்டிவாக செயல்படும் ஐ.ஜிக்கு அணை போடும் பகீரத முயற்சியில் டிஜிபி ரூட்டில் இறங்கியிருக்கிறது தமிழக அரசு.!


பொன். மாணிக்கவேல் மீது ஏன் பாய்ச்சல்? 

கடந்த 28 ஆண்டுகளில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் 135 உலோகச் சிலைகள் உட்பட 313 சிலைகளை மட்டுமே மீட்டனர். ஆனால், பொன்.மாணிக்கவேல்,  தனது 7 ஆண்டு கால பணிக்காலத்தில், வரலாற்று சிறப்பு மிக்க ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகள் உள்ளிட்ட 201 உலோகச் சிலைகள், விருத்தகிரீஸ்வரர் உள்ளிட்ட 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள், 212 ஓவியங்கள் என மொத்தம் 1,146 வரலாற்று சிறப்பு மிக்க பொக்கிஷங்களை மீட்டுள்ளார். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர், தீனதயாளன் இந்து சமய அற நிலையத்துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால், இணை ஆணையர் கவிதா என 48 பேரை கைது செய்திருக்கிறார்.  


ஓ..! பணியில் வேகம் காட்டுகிறாரா பொன்.மாணிக்கவேல்! ஆளும்தரப்புக்கு கோபம் வரத்தானே செய்யும்!

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்