Skip to main content

அதிமுக, திமுக இடையே நெக் டூ நெக் போட்டி இருந்தால், தேர்தல் முடிவு வெளியாக காலதாமதம் ஏற்படும் - நக்கீரன் பிரகாஷ் பேட்டி!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

dh



தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. வாக்கு எண்ணும் மேஜை குறைக்கப்படுவதால் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாக காலதாமதம் ஆகலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் திட்டமிட்டப்படி வருமா, அதில் ஏதேனும் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறதா என்று பல்வேறு கேள்விகளை நக்கீரன் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் அவர்களிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

தமிழகத்தில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அன்று இரவுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவு முழுவதுமாக அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை மையம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. வாக்குப்பெட்டிகள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், தேவையற்ற வகையில் மனிதர்கள் நடமாட்டம், ட்ரோன்கள் பறப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையின்போது பங்கேற்கும் கட்சிகளின் முகவர்களுக்கு கரோனா சான்றிதழ் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது ஆணையத்தின் முடிவா? திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை 2ஆம் தேதி நடைபெறுமா? உங்களின் பார்வை இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறது?

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது ஒரே சீராக இல்லை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட இந்த மாவட்டங்களில்தான் பாதிப்பு என்பது அதிகமாக இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதும், மற்ற மாவட்டங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது நிச்சயம் வேறுபடும். இந்த முடிவுகள் பற்றி தமிழகம் முழுவதும் ஒரே சீரான கருத்து என்பதே இல்லை. இதில் நிறைய குழப்பங்கள் நிலவுகிறது. இதுதொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. இதுதொடர்பாக எது கேட்டாலும் டெல்லியை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் கைகாட்டுகிறார். இதுதொடர்பாக டெல்லி ஆணையமும் இதுவரை எதையும் கூறவில்லை. 

 

தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் கண்டெய்னர் செல்வது, ட்ரோன்கள் பறப்பது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் டாய்லெட் இல்லை என்று கூறி மொபைல் டாய்லெட்களைக் கொண்டு வருவது என பல்வேறு வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். மொத்தம் 14 மேஜைகள் போட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு மாற்றாக, பத்து மேஜை அமைத்து வாக்கு எண்ணப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிறது. வாக்கும் எண்ணும் அதிகாரிகள், மற்றும் முகவர்கள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது, பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் தமிழக தேர்தல் ஆணையமோ அல்லது டெல்லி தேர்தல் ஆணையமோ இதுவரை முறையாக அறிவிக்கவில்லை. 


இவை அனைத்துமே சிந்துபாத் கதையைப் போல இருக்கிறது. பூதம் வந்து, ஆற்றில் இறங்கி, கடலில் கலந்து, மரத்தில் மறைந்தது என்பதைப் போல்தான் ஆணையத்தின் நடவடிக்கைகள் இருக்கிறது. சத்தியபிரதா சாஹு போல ஒரு மர்ம கதை எழுத்தாளர் இதுவரை யாரும் தமிழகத்தில் தேர்தல் ஆணையராக இருந்தது இல்லை. வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. எல்லோரும் கரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அனைவருக்கு டெஸ்ட் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மேஜைகள் அதிகரிக்கப்பட்டால் நள்ளிரவுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு இடையே நெக் டூ நெக் போட்டி இருந்தால் தேர்தல் முடிவு வெளியாவதில் காலதாமதம் ஏற்படும், 2016ஆம் ஆண்டு போல அதிகாரிகள் தேர்தல் முடிவுகளில் விளையாட வாய்ப்பு ஏற்படும். ஒரு கட்சி வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து முன்னணியில் இருந்தால் தேர்தல் முடிவு விரைவில் தெரியவந்துவிடும். எல்லோரும் சாஹுவிடம் மனு அளிக்கிறார்கள். அந்த மனுவை அவர் என்ன செய்கிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. 

 

 

Next Story

11 புதுமுகங்கள் - வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 DMK released the list of 11 newcomers- candidates

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று நடைபெற இருக்கும் அந்த கூட்டத்தில் சென்னையில் மூன்று இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடும் பகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்ற பட்டியலும், அதேபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரடியாக தொகுதிகளுக்கு சென்று மக்கள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் கருத்துகளைக் கேட்டு அதன்படி தேர்தல் அறிக்கை தயாரித்திருப்பதாக அறிவித்திருந்தார். கனிமொழி சார்பில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கையும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வாசித்தார். அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், வடசென்னை-கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ.மணி, ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம்.செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ.ராசா, வேலூர் - கதிர் ஆனந்த்,கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண்நேரு, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 50 சதவீதத்திற்கும் மேல் 11 புதிய முகங்கள் போட்டியிடுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தர்மபுரி - ஆ.மணி, ஆரணி -தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், சேலம் - செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், கோவை - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி, பெரம்பலூர் - அருண் நேரு, தஞ்சாவூர் - முரசொலி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி - ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் புதுமுக வேட்பாளர்கள் ஆவர்.

தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜி.செல்வம், ஜெகத்ரட்சகன், சி.என்.அண்ணாதுரை, கதிர் ஆனந்த் ஆகியோர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது . தூத்துக்குடியில் கனிமொழி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசியில் ராணி ஸ்ரீ குமார் என மூன்று பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடிமட்ட தொண்டர்கள், ஒன்றிய செயலாளர்கள் இரண்டு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைவர்கள், இரண்டு மருத்துவர்கள், 19 பட்டதாரிகள், ஆறு வழக்கறிஞர்கள்  திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக - காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

இந்நிலையில். திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். இதனையடுத்து 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் மார்ச் 24 ஆம் தேதி தனது பரப்புரையைத் தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.