Skip to main content

அதிமுக, திமுக இடையே நெக் டூ நெக் போட்டி இருந்தால், தேர்தல் முடிவு வெளியாக காலதாமதம் ஏற்படும் - நக்கீரன் பிரகாஷ் பேட்டி!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

dh



தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. வாக்கு எண்ணும் மேஜை குறைக்கப்படுவதால் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாக காலதாமதம் ஆகலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் திட்டமிட்டப்படி வருமா, அதில் ஏதேனும் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறதா என்று பல்வேறு கேள்விகளை நக்கீரன் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் அவர்களிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

தமிழகத்தில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அன்று இரவுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவு முழுவதுமாக அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை மையம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. வாக்குப்பெட்டிகள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், தேவையற்ற வகையில் மனிதர்கள் நடமாட்டம், ட்ரோன்கள் பறப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையின்போது பங்கேற்கும் கட்சிகளின் முகவர்களுக்கு கரோனா சான்றிதழ் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது ஆணையத்தின் முடிவா? திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை 2ஆம் தேதி நடைபெறுமா? உங்களின் பார்வை இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறது?

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது ஒரே சீராக இல்லை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட இந்த மாவட்டங்களில்தான் பாதிப்பு என்பது அதிகமாக இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதும், மற்ற மாவட்டங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது நிச்சயம் வேறுபடும். இந்த முடிவுகள் பற்றி தமிழகம் முழுவதும் ஒரே சீரான கருத்து என்பதே இல்லை. இதில் நிறைய குழப்பங்கள் நிலவுகிறது. இதுதொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. இதுதொடர்பாக எது கேட்டாலும் டெல்லியை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் கைகாட்டுகிறார். இதுதொடர்பாக டெல்லி ஆணையமும் இதுவரை எதையும் கூறவில்லை. 

 

தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் கண்டெய்னர் செல்வது, ட்ரோன்கள் பறப்பது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் டாய்லெட் இல்லை என்று கூறி மொபைல் டாய்லெட்களைக் கொண்டு வருவது என பல்வேறு வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். மொத்தம் 14 மேஜைகள் போட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு மாற்றாக, பத்து மேஜை அமைத்து வாக்கு எண்ணப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிறது. வாக்கும் எண்ணும் அதிகாரிகள், மற்றும் முகவர்கள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது, பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் தமிழக தேர்தல் ஆணையமோ அல்லது டெல்லி தேர்தல் ஆணையமோ இதுவரை முறையாக அறிவிக்கவில்லை. 


இவை அனைத்துமே சிந்துபாத் கதையைப் போல இருக்கிறது. பூதம் வந்து, ஆற்றில் இறங்கி, கடலில் கலந்து, மரத்தில் மறைந்தது என்பதைப் போல்தான் ஆணையத்தின் நடவடிக்கைகள் இருக்கிறது. சத்தியபிரதா சாஹு போல ஒரு மர்ம கதை எழுத்தாளர் இதுவரை யாரும் தமிழகத்தில் தேர்தல் ஆணையராக இருந்தது இல்லை. வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. எல்லோரும் கரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அனைவருக்கு டெஸ்ட் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மேஜைகள் அதிகரிக்கப்பட்டால் நள்ளிரவுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு இடையே நெக் டூ நெக் போட்டி இருந்தால் தேர்தல் முடிவு வெளியாவதில் காலதாமதம் ஏற்படும், 2016ஆம் ஆண்டு போல அதிகாரிகள் தேர்தல் முடிவுகளில் விளையாட வாய்ப்பு ஏற்படும். ஒரு கட்சி வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து முன்னணியில் இருந்தால் தேர்தல் முடிவு விரைவில் தெரியவந்துவிடும். எல்லோரும் சாஹுவிடம் மனு அளிக்கிறார்கள். அந்த மனுவை அவர் என்ன செய்கிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. 

 

 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.