Skip to main content

பாஜக வச்சா குடுமி.. சிரைத்தால் மொட்டையா?

Published on 23/10/2017 | Edited on 23/10/2017
பாஜக வச்சா குடுமி... சிரைத்தால் மொட்டையா?



ஜிஎஸ்டி மட்டுமல்ல பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்பட எல்லா சட்டங்களிலும் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் கேலிக்கும் கிண்டலுக்கு ஆளாகி வருகின்றன.

அரசாங்கத்தின் முடிவுகளை விமர்சனம் செய்ய வாக்களித்த மக்களுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் உரிமை இல்லை என்பதுபோல மிரட்டப்படுகிறார்கள்.

மோடி அரசின் முடிவுகளால் பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச்  சந்தித்துள்ளது. இதைப்பற்றி பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்தார். பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை மானக்கேடாக விமர்சனம் செய்கிறது. பாஜகவின் முன்னாள் அமைச்சர் அருண்சோரி மிகக் கேவலமாக மோடியை தாக்குகிறார்.

ஆனால், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தால் மட்டும் பாஜகவினருக்கு உடம்பெல்லாம் எரிகிறது. அதாவது, பாஜகவினர்  தங்களுக்குள் விமர்சனம் செய்து கொள்ளலாம். அதையே எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தால் தப்பு என்கிற போக்கை பாஜக கடைப்பிடிக்கிறது.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு பாஜக அரசாங்கத்தில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால் காட்சி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களின் முதலாளிகள் மிரட்டப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால், தமிழகத்தில் பாஜகவின் மிரட்டல் உருட்டலுக்கு பயப்படாமல் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான குரல் வலுப்பெற்று வருவதும் பாஜகவின் பொய்ப் பிரச்சாரங்கள் முறியடிக்கப்படுவதும் அந்தக் கட்சியின் தலைவர்களை விரக்தியடையச் செய்துள்ளது.

தங்களுடைய செயல்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாமல் பாஜக தவிக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம், தென்னிந்தியா எப்போதும் கருத்துச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவித்து வந்திருக்கிறது. அதற்கு இடையூறு வந்தால் போராடித் தகர்த்திருக்கிறது.

பெரியார், அண்ணா, காமராஜ் போன்ற தலைவர்கள் ஏற்படுத்திய சுயமரியாதை விழிப்புணர்வு பாஜகவின் பிற்போக்கு பிரச்சாரங்களை முறியடிக்கும் ஆயுதமாக இங்கே பயன்படுத்தப்படுகிறது.

அதனால்தான், பாஜக தலைவர்கள் எந்த விஷ(ய)த்தை பரப்ப முயன்றாலும் அந்தக் கட்சியைத் தவிர மற்ற அனைவருமே இணைந்து அதை முறியடித்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட காமெடியாக்கி விடுகிறார்கள் என்பதே நிஜம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிடல் இந்தியா, தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா என்று மோடி அறிவித்த அனைத்து திட்டங்களுமே தமிழகத்தில் காமெடியாக்கப்பட்டு கலாய்க்கப்பட்டது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதன் பாதிப்புகள் தினமும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஜிஎஸ்டி அறிமுகத்தால் யாருக்கெல்லாம் பாதிப்பு, யாருக்கு லாபம் என்றெல்லாம் விரிவாக பேசப்பட்டே வருகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கியதிலிருந்து பல்வேறு துறையினரும் பணப்புழக்கம் இல்லாமல் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டி அறிமுகம் மேலும் மக்களை வாட்டி வதைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர். ஆனால், அவர்களை விவரமறியாதவர்கள் என்பதைப்போல பாஜக தலைவர்கள் கிண்டல் செய்தார்கள்.

இப்போது, ஜிஎஸ்டியால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய்த்துறை செயலாளரே சொல்லத் தொடங்கி இருக்கிறார்.

இதுதான் பூனை தனது குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் என்பது. நிலைமை இப்படி பேசச் சொல்லியிருக்கிறது. அதாவது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்திலோ சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு பாஜகவுக்கு ஆதரவான பனியாக்கள் மற்றும் பட்டேல் வகுப்பைச் சேர்ந்த வாக்களார்கள் பெரும்பாலும் வணிகர்கள் மற்றும் வட்டித் தொழில் செய்வோர் ஆவர். இவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜிஎஸ்டி வரி விதிப்பாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவேதான், மத்திய வருவாய்த்துறை செயலாளரை விட்டு அறிக்கை வெளியிடச்  செய்துள்ளது பாஜக என்கிறார்கள்.

ஏற்கெனவே பக்கத்து மாநிலங்களுக்கு இடையிலான வியாபாரத்துக்கு ஜிஎஸ்டியை தளர்த்தலாம் என்று பாஜக தலைவர்கள் யோசனை கூறியிருப்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

அவர்கள் நினைத்தால் நாடு முழுவதற்கும் ஒரே வரி என்பார்கள். அவர்களுக்கு தேவையென்றால் வாக்குகளுக்காக மாநிலத்துக்கு ஒரு வரி என்று தளர்த்துவார்கள்.

இதைத்தான் கிராமப்புறத்தில் வச்சாக் குடுமி... சிரைத்தால் மொட்டை என்று கிண்டலாக சொல்வார்கள்.

பாஜகவுக்கும் மோடிக்கும் இது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது.

-ஆதனூர் சோழன்




சார்ந்த செய்திகள்