Skip to main content

”நாங்க என்ன பேனர் வைத்து துதிபாடுகிறோமா, பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோமா?”  - ’நாம் தமிழர் கட்சி’ இடும்பாவனம் கார்த்திக்

kj

 

 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளில் ஒன்று நாம் தமிழர் கட்சியில் நடக்கும் உட்கட்சி மோதல்கள். அந்த கட்சியின் முக்கிய பிரபலமான பேராசிரியர் கல்யாண சுந்தரம், சீமானிசம் என்பது கட்சியின் கொள்கை அல்ல, பிரபாகரனிசமே கட்சியின் கொள்கை, ஒரு சினிமா ரசிகனின் மனோபாவம் கட்சிக்குள் அதிகரித்துள்ளது, தனிநபர் துதி பாடுதல் என்பது கட்சிக்கு நல்லதல்ல என்பது போன்ற அதிரடி கருத்துகளை தெரிவித்திருந்தார்.

 

மேலும் தான் 5 மாதங்களாக சீமானை சந்திக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இவர் கட்சி தொடர்பாகவும், சீமான் தொடர்பாகவும் தெரிவித்திருந்த சர்ச்சையான கருத்துகள் ஒருபுறம் சென்று கொண்டிருக்கையில் நாம் தமிழர் கட்சியின் மேலும் ஒரு பிரபலமான ராஜீவ் காந்தியும் கட்சியை விட்டு விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில், உள்கட்சி மோதல் பகிரங்கமாக வெளியே தெரிய என்ன காரணம் போன்ற முக்கியமான நம்முடைய கேள்விகளுக்கு அதிரடியான பதிலளித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக். அவரின் அதிரடியான பதில்கள்... 

 

நாம் தமிழர் கட்சியை பொறுத்தமட்டில் வளர்ந்துவரும் ஒரு கட்சி. தற்போதைய இளைஞர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற கட்சி. ஆனால் உட்கட்சியில் இருக்கும் பிரச்சனைகள் வெளியே அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இது எல்லா கட்சிகளிடமும் இருந்தாலும், நாம் தமிழர் கட்சியில் தலைவரிடம் பேச முடியவில்லை, கருத்துகளை முன்வைக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக எழுகின்றது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம் ஆகியோரின் வெளியேற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அண்ணன் சீமான் அவர்கள் இந்த கரோனா காலம் முழுவதும் கோவையில்தான் இருந்தார். அங்கிருந்து எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். கட்சியை வழிநடத்திக்கொண்டு இருந்தார். இவர் 5 மாதங்களாக அண்ணனை சந்திக்க முயன்றேன் என்கிறார், அதில் உண்மையில்லை. மேலும் நான் அண்ணன் வீட்டிற்கு சென்றும் அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறுகிறார். அவர் வீட்டிற்கு சென்ற யாரையும் அவர் சந்திக்காமல் இருந்தது இல்லை. உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தொடர்ந்து கூறி வருகிறார். அவர்தான் ஒரு யூ-ட்யூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கட்சியில் சினிமா மனப்பான்மை இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்படுபவர்களிடம் எல்லாம் நல்ல தொடர்பில் இருந்தார். வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கிருப்பவரிடம் கட்சியில் ஊழல் நடைபெறுகிறது போன்ற அவதூறுகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.

 

அவர் கூறியதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் ஒரு கடிதம் வெளியாகி இருந்ததே, அதுகுறித்து இதுவரை கண்டனம் தெரிவித்தாரா? அதில் என்ன தெரிவித்திருக்கிறார்கள், சீமான் அண்ணன் பிறந்த நாள் கொண்டாடுகிறார், கட்சியில் சீமானை தவிர வேறு யாரும் தெரியக்கூடாது என கட்சி தலைமை நினைக்கிறது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் இவர் கூறியது போல தெரிவித்துள்ளார்கள். நான் அதைக்கூறவில்லை என்றாலும் அந்த கருத்தில் எனக்கு பாதி உடன்பாடு இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மீதி பாதி கருத்துக்காவது அவர் கண்டனம் தெரிவித்துள்ளாரா, ஏன் அதுபற்றி பேச மறுக்கிறார்? அவர் அந்த நாளிதழில் கூறிய எதுவுமே உண்மையல்ல. ஒரு போதும் தனிமனித புகழ்ச்சி என்பது நாம் தமிழர் கட்சியில் அறவே கிடையாது. தனிமனித புகழ்ச்சி தேவையில்லை, தத்துவத்தை பற்றி பேசு என்றுதான் அண்ணன் எங்களிடம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

 

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நீ என்னை தலைமையேற்காதே, தத்துவத்தை தலைமையேற்று செயல்படு என்றுதான் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியில் நாங்கள் என்ன பேனர் வைத்து துதிபாடுகிறோமா அல்லது பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோமா, இது எதுவுமே நாங்கள் எப்போதும் செய்ததில்லை. இது எங்கள் கட்சியின் கொள்கை கிடையாது. புதிதாக வருபவர்கள் அவ்வாறு செய்தால் கூட அண்ணன் சீமான் அவர்களை கூப்பிட்டு கண்டிப்பார். அப்படி இருக்கையில் எங்கள் கட்சியில் என்ன சினிமா மனப்பான்மை இருப்பதை இவர் கண்டுப்பிடித்து விட்டார் என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் எதையாவது கூற வேண்டும் என்று சொல்வதாகத்தான் இதனை பார்க்க வேண்டும். எனவே கட்சியில் சீமானிசம் என்று இவர்கள் கூறுவது எல்லாம் வடிகட்டிய பொய். முகநூலில் சீமானிசம் என்ற பக்கத்தில் அண்ணன் பேசிய காணொளிகளை தொடர்ந்து வெளியிடுவோம். அதுவும் அவர் மண் சார்ந்து, மக்கள் சார்ந்து பேசிய காணொளிகளாக அது இருக்கும். அதைத்தாண்டி இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் இவர்கள் வெளியேறுவதற்காக கூறும் குற்றச்சாட்டாகவே பார்க்க வேண்டும்.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்