ADVERTISEMENT

பிறந்தநாளை கொண்டாடாமல் பெயர் வைத்த நாளை கொண்டாடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..? - இடும்பாவனம் கார்த்திக் கேள்வி!

12:28 PM Nov 06, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுதொடர்பாக பேசியபோது தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் இதுதொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் வருமாறு, "நாம் இதில் குழம்புவதற்கு எதுவுமே இல்லை. அவர்கள்தான் தங்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஆளும் திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகிறது. இந்த ஐந்து மாத இடைவெளியில் ஜூலை மாதம் 18ஆம் தேதியும் வந்தது. அந்த நாளில் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைத்த தினத்தை கொண்டாடியிருக்கலாமே? ஏன் செய்யாமல், தற்போது அடுத்த வருடத்திலிருந்து கொண்டாடுவோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் நவம்பர் முதல் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாட இருக்கின்ற நிலையில், தமிழ்நாடு நாள் ஜூலை 1ஆம் தேதிதான் என்று அறிவித்ததில் உள்நோக்கம் இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

ஏட்டிக்குப் போட்டியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த மாதிரி அவர்களை செய்ய வைக்கிறது. தமிழ்நாடு நாள் என்று நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்றால், தமிழ்நாடு என்று அங்கீகரிக்கப்பட்ட நவம்பர் முதல் தேதிதான் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு என பெயர்வைக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் நாம் இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். பிறந்தநாளைக் கொண்டாடாமல் பெயர் வைத்த நாளைக் கொண்டாடச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது. இவர்கள் இவ்வாறு செய்வது அனைத்திற்கும் அரசியல் நோக்கம் இருக்கிறது. அண்ணா பெயர் வைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் இவ்வாறு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த தமிழ்நாடு நம்மிடம் வந்தபோது நாம் பல்வேறு நிலப்பகுதிகளை இழந்தோம். தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்தோம். இந்தப் பகுதிகளை எல்லாம் நாம் மீண்டும் மீட்போம் என்ற உறுதிமொழியை தற்போதைய தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டியதுதானே? ஏன் அதைச் சொல்ல மறுக்கிறார்கள். முல்லை பெரியாறு அணையை மீட்போம் என்று கேரளாவைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள், நீங்கள் பீர்மேடு, தேவிக்குளம் பகுதியை மீட்போம் என்று கூற ஏன் பயப்பட வேண்டும்.

திராவிடத்துக்கும் ஆரியத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது தாங்கள்தான் தமிழ் சமூகத்துக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்கள், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள், நாகரீகத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள் என்ற எண்ணத்தை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இவ்வாறு அனைத்தையும் திரிக்க முயல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் திராவிடம், திராவிடம் இல்லை என்றால் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை என்ற மனநிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டுக்கென்று கொடி வேண்டும் என்று கூறுகிறோம். கர்நாடகாவுக்குத் தனிக்கொடி உள்ளது. அதேபோன்று தமிழகத்துக்கும் கேட்கிறோம். ஆனால் முந்தைய கருணாநிதி ஆட்சியில் தனிக்கொடி என்று ஒன்றைக் கொண்டுவந்தார்கள். ஆனால் அதையும் இந்திரா காந்திக்கு பயந்து செயல்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். ஆனால், மாநிலத்தில் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை நாங்கள்தான் பெற்றுக்கொடுத்தோம் என்று இன்றைக்கு கூறுகிறார்கள். உங்களின் நோக்கம் அதுதானா? இவர்கள் தமிழக நலனுக்காக எதுவுமே செய்ய மாட்டார்கள். இவர்களைப் பெருமைப்படுத்தும் செயல்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT