Skip to main content

எப்படி இருந்த ராதாகிருஷ்ணன் இப்படி ஆனார்? 'அவரா இவர்' என ஆச்சரியமும் அதிர்ச்சியும்! 

"அவரா இவர்' என ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகப் பார்க்கிறார்கள் மக்கள். 2004-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பொழுது தஞ்சாவூர் கலெக்டராக இருந்தார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பள்ளியில் தீ என்றவுடன் கலெக்டர் ஓடிவருகிறார். தீ விபத்து கும்பகோணம் நகரில் ஒரு பெரிய டிராஃபிக்ஜாமை உருவாக்கி விட, ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த பள்ளிக்கு கால்நடையாகவே ஓடிவருகிறார் ராதாகிருஷ்ணன். 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீயில் கருகி இறந்துவிட... அதன்பிறகு மீட்கப்பட்ட பிள்ளைகளில் ஒன்றுகூட உயிரிழக்காதபடி நடவடிக்கை மேற்கொண்டார் கலெக்டர். இந்த சம்பவம் அவரை புகழ்பெற வைக்கிறது.
 

iasஅதே 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று தமிழகமே அதுவரை கேட்டிராத சுனாமி தாக்குகிறது. ராதாகிருஷ்ணனை நாகை மாவட்டத்திற்கு சுனாமி பணிகளுக்காக அனுப்பி வைக்கிறது அரசு. அக்கரைப்பேட்டை என்கிற கிராமத்தை சுற்றியுள்ள ஏழு கிராமங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன. மறுபடியும் கால்நடையாகவே நான்கு கிலோமீட்டர் அக்கரைப்பேட்டை கடற்கரை கிராமங்களில் சுற்றித் திரிந்தார் ராதாகிருஷ்ணன். அரசுப் பணியாளர்களை வைத்து அந்த கடற்கரை கிராமங்களில் சிதறிக் கிடந்த 2600 உடல்களை நல்லடக்கம் செய்ய விரைவாக ஏற்பாடு செய்து கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து அந்த கிராமங்களின் மறுவாழ்வு, உறவுகளை இழந்தவர்களுக்கு மனரீதியான ஆறுதல் என அரசையும் தொண்டு நிறுவனத்தாரையும் அந்த பகுதி மக்களையும் ஒரு முக்கோணப் புள்ளியில் இணைத்து வேகமாக பணியாற்றினார். இதை பி.பி.சி. செய்தி நிறுவனம் லைவ்-ஆக ஒளிபரப்ப... ஐ.நா. சபையே ராதாகிருஷ்ணனை சந்திக்க முன்னாள் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டனை அனுப்பியது.

 

iasஅமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகள் எல்லாம் ராதாகிருஷ்ணன் சுனாமியின் சோகத்தை எப்படி எதிர்கொண்டார் என அவரை அழைத்துக் கேட்டன. நாகப் பட்டினம் மாவட்ட கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனை, ஐ.நா. சபையின் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண தலைவராக ஐ.நா. சபையே நியமித்தது. அதன்பிறகு 2012-ஆம் ஆண்டுதான் தமிழக பணிக்கு அவர் திரும்பினார். வந்தவரை சுகாதாரத்துறை செயலாளராக நியமித்து அழகு பார்த்தது தமிழக அரசு. 2015-ஆம் ஆண்டு சென்னை நகரை பெருவெள்ளம் தாக்கிய போதும் கடலூரையும் வெள்ளம் தாக்கியது. சென்னையிலும் கடலூரிலும் நிவாரண நடவடிக்கைகளில் பெரிதும் பங்கேற்று உதவினார் ராதாகிருஷ்ணன். யார் எந்த நேரத்தில் அழைத்தாலும் தொலைபேசியில் பேசும் வழக்கமுடைய ராதாகிருஷ்ணன் உதவி என்ற சொல்லுக்கு உதாரண புருஷனாகவே இருப்பார். புயல், வெள்ளத்திற்குப் பிறகு ஏற்படும் கொள்ளை நோய் தாக்காதபடி மக்களை பாதுகாத்ததில் இவரது சுகாதாரத்துறையின் பணிகள் முக்கியமானவை.

 

Ilayaraja and Bharathiraja meetஅப்படிப்பட்ட அதிகாரி சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் முதலில் உள்ளானது அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்ற சமயத்தில்தான். முதல்வராக இருந்த ஜெ.வுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு என சுகாதாரத்துறை சொல்லாமல், அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதுபற்றி ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது "எனக்கு எதுவும் தெரியாது' என மீடியாக்களிடமிருந்து ஒதுங்கினார். ஆனால் "ஜெ. நன்றாக இருக்கிறார்' என எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அறிக்கை வாங்கி வெளியிட்டார்.


75 நாள் சிகிச்சை குறித்து எந்த விவரமும் மக்களுக்குத் தெரியாமல் ஜெ. மரணமடைந்து விட்டார். அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க ஆறுமுக சாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட் டது. "ஜெ.வுக்கு மரணத்தை விளைவிக்கும் நோய்கள் பற்றியும் அந்த நோய்க்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சைகள் பற்றியும் தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளரான ராதாகிருஷ்ணனுக்கு மிக நன்றாகத் தெரியும். அதைப் பற்றி ஒரு அறிக்கையை கூட ராதாகிருஷ்ணன் அளிக்கவில்லை'' என தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் சொன்னார்.

சசிகலா கணவர் நடராஜனுக்காக புதுக்கோட்டை யில் விபத்தில் சிக்கிய இளைஞர் மூளைச்சாவு அடைந்தார் என அறிவிக்கப்பட்டு அவரது உறுப்புகள் நடராஜனுக்கு தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டதும், ஓ.பி.எஸ். தம்பியின் சிகிச்சைக்காக ராணுவ ஹெலிகாப்டர் பயன் படுத்தப்பட்டதும் என சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை நோக்கி கேள்விகள் எழும்பின. ஆட்சியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளானதால் சிறந்த அதிகாரியின் பணித்திறன் சந்தேகத்திற்குள்ளானது.

 

Cognizantஜெ.வின் சிகிச்சை குறித்த சர்ச்சைகளில் ராதாகிருஷ்ணன் அப்பல்லோ பக்கமும் சசிகலா பக்கமும் நின்றார். அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சுஜித் ஆழ்குழாய்க் கிணற்றில் விழுந்தபோது மாநில பேரிடர்மீட்புத் துறையில் இருந்த ராதாகிருஷ்ணன் முதலில் அக்கறை காட்டவில்லை.

சுஜித் விழுந்த இடத்தில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், ராதாகிருஷ்ணன் வருவதை விரும்பவில்லை. நிலைமை சீரியஸ் ஆவதை தொடர்ந்து எடப்பாடியும் உதயகுமாரும்தான் ராதாகிருஷ்ணனை அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு நடந்த அனைத்துக் குழப்பத்திற்கும் அவரையே பொறுப்பாக்கினார்கள் என்கிறது தமிழக அரசு வட்டாரம்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் கேட்டோம். ""கும்பகோணம் தீவிபத்து, சுனாமி வெள்ளம் போன்றவை பேரிடர்கள். அதுபோலத்தான் சுஜித் மரணமும். இந்த சம்பவங்களில் எல்லாம் இழப்புகள் இருக்கின்றன. அந்த இழப்பு ஏற்படுத்தும் சோகம்தான் பெரியது. அந்த இழப்பை நினைக்கும்போது நாங்கள் எடுத்த நட வடிக்கைகளின் உண்மை புரியாமல் சிலர் குறை சொல்கிறார்கள். அதை நான் பெரிதாக நினைக்கவில்லை. முழு உண்மை தெரிய வரும்போது எனது நடவடிக்கையின் நியாயமும், நான் தவறு செய்யவில்லை என்பதும் தெரிய வரும்'' என்கிறார் உறுதியாக.


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்