Skip to main content

"34 வயதில் நான் எம்எல்ஏ... இதுவே பலருக்குத் தெரியாது; ஏனென்றால் நான் அரசியலில் படிப்படியாக உயர்ந்தவன்..." - எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 07/11/2022 | Edited on 08/11/2022

 

hk

 

எம்ஜிஆர் பெயரில் அறக்கட்டளை மற்றும் சினிமா நிறுவன துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, " எனக்கும் திரைத்துறைக்கும் வெகுதூரம். நான் திரையரங்கு சென்று படம் பார்த்து 25 ஆண்டுக் காலம் ஆகிறது. மற்றபடி தொலைக்காட்சியில் வருவதை நான் பார்த்திருக்கிறேன். பல திரைப்படத்தில் யார் நடிகர்கள் நடிகைகள் என்று கூட எனக்குத் தெரியாது. என்னுடைய மகன்கள் மற்றும் மனைவி அதில் வருபவர்களைப் பற்றி என்னிடம் கூறுவார்கள்.

 

இதை எதற்காக இங்குக் கூறுகிறேன் என்றால் அரசியலும் திரைத்துறையும் ஒன்றோடொன்று கலந்தது. இங்குப் பேசிய திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமானிய மனிதர் ஒருவர் முதல்வராக இங்கு வருவது அவ்வளவு எளிதல்ல என்று அவர் கூறினார். அது உண்மையும் கூட. திரைத்துறையில் வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதைப்போலத்தான் அரசியலில் வருவது என்றாலும் கஷ்டமான ஒன்று.

 

சிலருக்கு மட்டும்தான் அரசியலில் அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதனை நல்ல முறையில் நான் பயன்படுத்திக்கொண்டேன். மேலும் எஸ்ஏசி பேசும்போது ஏழை எளிய மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டும், அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று பேசினார். என்னுடைய தலைவர்களே ஏழை எளிய மக்களின் கொடையாகப் பிறந்திருக்கிறார்கள். பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் ஏழை மக்களுக்காகவே உழைத்தார். அவர்களின் பொருளாதாரம் உயர்ந்தது. படிப்பு உயர்ந்தது. மருத்துவம் அவர்களுக்கு வேண்டியது  கிடைத்தது. இன்னும் எத்தனையோ திட்டங்கள் அவர்களுக்கு எளிதாகக் கிடைக்க அவர் பாடுபட்டார். அதனைத் தொடர்ந்து புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா அதனை நிறைவேற்றிக் காட்டினார்கள். 

 

இன்னமும் சில செய்திகளைக் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த இரண்டு தலைவர்களுமே திரைத்துறையிலிருந்து வந்தவர்கள். வேறு எந்த இயக்கத்துக்கும் இந்தப் பெருமை இருக்காது. ஆகவே திரைத்துறையின் அடித்தளத்தை ஆதாரமாக வைத்து இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டு இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. வேறு எந்த இயக்கத்திற்கும் இந்தச் சிறப்பு கிடைக்காது. திரைத்துறையில் எளிதில் ஜொலித்துவிடலாம். இரண்டு படம் நன்றாக நடித்தால் போதும், நல்ல இயக்குநர்கள் நடிகர்களுக்கு இரண்டு படங்களைச் சிறப்பாகக் கொடுத்தால் அவர்கள் எளிதில் செல்வாக்குப் பெற்றுவிடுவார்கள். ஆனால் அரசியல் அப்படி எளிதாக இருக்காது. எத்தனை எத்தனை கடினங்களைக் கடந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியாது.

 

ரோட்டில் மக்களைச் சந்திக்க ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து, அதாவது ஏணியில் ஒவ்வொரு படிக்கட்டாய் எப்படி ஏறுகிறோமே அப்படி படிப்படியாக உயர்ந்து இந்த இடத்தைப் பிடித்துள்ளோம். காலையில் ஏறி மாலையில் முதல்வராகி விட முடியாது. கடுமையான உழைப்பு இருக்க வேண்டும். நிறையக் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டும். கடுமையாக நம்மை எதிர்க்கக் காத்திருப்பார்கள். எப்போது தவறு செய்வோம். நம்மை வீழ்த்தலாம் என்ற ஒற்றை நோக்கத்தில் நம்மை நோட்டமிட்டு வருவார்கள். அவர்களிடம் நாம் சிக்காமல் எந்தத் தவறும் செய்யாமல் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். சிறிது தவறு செய்தாலும் நம் எதிர்காலத்தை அது பாதிக்கும் பெரிய தவறாக மாறிவிடும். 

 

நான் 34 வயதில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டேன். இது பலபேருக்குத் தெரியாது. அந்த அளவிற்கு நான் அரசியலில் அமைதியாக இருந்தேன். ஆனால் என்னுடைய எடப்பாடி தொகுதியிலே எந்த மூலை முடக்குகளில் போய் கேட்டாலும் இந்த எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்களோடு இணைந்தே என்னுடைய இத்தனை வருட பணிகளை அமைத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 10 முறை அந்தப் பகுதியில் போட்டியிட்டுள்ளேன்.

 

7 முறை சட்டமன்றத்துக்கும், மூன்று முறை நாடாளுமன்றத்துக்கும் போட்டியிட்டுள்ளேன். ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றாலே அடுத்த முறை மக்களைச் சந்திக்க பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால் இப்போது கூட 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றியடைய வைத்துள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் என்னுடைய கடினமான உழைப்பு. அதை எப்போதும் இந்த மக்களுக்குத் தருவேன்" என்றார்.


 

 

Next Story

'எடப்பாடிக்கு அது கைவந்த கலை'-அமைச்சர் துரைமுருகன் பதில்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
'False silence is the art of Edappadi' - Minister Durai Murugan's answer

காவிரி விவகாரத்தில் தீர்ப்பினை மீறி கேரளாவோ, கர்நாடகாவோ செயல்பட்டால் அதை உறுதியாக தமிழக அரசு எதிர்க்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்குமாறு அதிமுகவின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி இதற்கு தமிழக அரசு  எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனமும் செய்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கள்ள மவுனம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை. தமிழக அரசு தமிழகத்திற்கு கிடைக்க கூடிய காவிரி நீர் உரிமையை சட்டரீதியாகவும் அதே போன்று தமிழகத்தின் உரிமை என்ற அடிப்படையிலும் நிச்சயமாக பெறுவோம்.  ஏற்கனவே இது தொடர்பாக நடைபெற்ற டெல்லி கூட்டத்திலும் தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது. தொடர்ந்து வலியுறுத்தக்கூடிய நடவடிக்கை மாநில அரசு எடுக்கும். கேரளா, கர்நாடக காவிரி வடிநிலத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கண்காணிக்க ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. எப்பொழுதும் போல தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைக்கக்கூடிய காவிரி நீர் கிடைப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கையும் மாநில அரசு செய்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.