Skip to main content

என்னை பா.ஜ.க.காரன் என்று சொன்னால்தான் கேவலமாக நினைப்பேன்! -இயக்குநர் கரு.பழனியப்பன் அதிரடி பேட்டி!

தன் சரவெடிப் பேச்சுகளால் திரையுலகிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஈர்க்கப்பட்டவர் இயக்குநர் கரு.பழனியப்பன். சமீபகாலமாக பா.ஜ.க., மோடி எதிர்ப்பை பல்வேறு மேடைகளில் அதிரடியாக பதிவுசெய்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் பிஸியாகி இருக்கும் வேளையில், தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களமிறங்கியிருக்கிறார். பரப்புரை களில் பரபரப்பாக இருந்தவரை நக்கீரனுக்காக சில கேள்விகளுடன் சந்தித்தோம்.

 

karu. palaniappanபா.ஜ.க. எதிர்ப்பு பேசிவந்த நீங்கள் தி.மு.க. ஆதரவு நிலைப்பாடை எடுத்திருப்பதற்கான அவசியம் என்ன?
கரு.பழனியப்பன்: பா.ஜ.க. எதிர்ப்பின் மூலமாக அவர்களின் திட்டங்கள், மோசமான செயல்பாடுகளைப் பேசிவந்தோம். அதனால், தேர்தல்காலம் வரும்பொழுது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டாமென்று நினைக்கிறோம். அப்படியானால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லவேண்டும் இல்லையா? களத்தில் பலர் இருந்தாலும், இந்தப் பாம்பை அடிப்பதற்கு இந்தக் கம்பு சரியென்று நான் நினைக்கிறேன். 

பா.ஜ.க. எதிர்ப்பை நேரடியாக அரசியல் களத்திற்கு வந்து பேச துணிவு வேண்டும் அல்லவா?
கரு.பழனியப்பன்: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் வாக்காளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு அம்மா, கார்ப்பரேட் அரசியல், மோடியின் திட்டங்களால் ஏற்பட்ட நஷ்டங்களைப் பற்றியெல்லாம் பேசுகிறார். ஆக, இது பரப்புரை மட்டுமல்ல. வாக்காளரின் முடிவோடு ஒத்துப்போகக்கூடிய பரஸ்பர உரையாடல்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஜெயிப்பதன் மூலம் தேசம் புனிதமாக மாறிவிடுமா? 
கரு.பழனியப்பன்: எல்லாமே சரியாகி விடாது. ஆனால், ஒருமுகப்பட்டால் குறைந்த பட்சம் பா.ஜ.க.வை முழுமையாக விரட்டிவிட முடியுமல்லவா? நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தருவோம் என்று ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அதைக் கொண்டு வந்ததே காங்கிரஸ்தான் எனக்கூறி பலரும் சிரித்தார்கள். ஆனால், தி.மு.க.வின் அறிவிப்பு காங்கிரஸ் அறிக்கையில் எதிரொலிக்கிறதே. இங்கு சொன்னால் அங்கு கேட்கும் நிலை இருக்கிறதே. எல்லோரையும் குறைசொல்லிக் கொண்டேதான் இருப்போம் என்றால், தேர்தலை நிறுத்திவிட்டு எல்லோரும் செத்துப்போய் விடலாமா?

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதே?
கரு.பழனியப்பன்: இந்த தேசத்தில் அடுத்த தலைமுறை என்னவாகும் என்பதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். சும்மா திரும்பத்திரும்ப 1957-ல் இருந்து ஆரம்பிக்கக்கூடாது. சாதியையே ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் வேளையில், மதத்தைக் கொண்டு பரப்புவது கேடில்லையா? இருபது வருடங்களுக்கு முன்பு எல்லா மதத்தவரும் இணக்கமாக வாழும் சூழல் இருந்தது. எல்லாப் படங்களிலும் இஸ்லாமியன் ஒருவன் நல்ல நண்பனாக இருக்கும் படங்கள் வருமளவுக்கு, அந்த இணக்கம் வாழ்க்கையாக இருந்தது. அப்படியொன்று இல்லாமல் போனதற்கு காரணமே பா.ஜ.க.வினர்தான். நாளை, உங்கள் மொழியிலும், கலாச்சாரத்திலும் கை வைப்பார்கள் என்பது விளங்கவில்லை உங்களுக்கு. 

நடுநிலையான இயக்குநர், பேச்சாளர் என்ற அடையாளத்தை இனி இழந்துவிடுவீர்களே?
கரு.பழனியப்பன்: நான் நடுநிலையானவனாக ஒருபோதும் இருந்ததில்லை. நடுநிலை என்பது தீமையின் பக்கம் நிற்பது என்பதை நம்புகிறவன் நான். எல்லோரும் நல்லவரே என்று நான் பேசியதே இல்லை.  

இனி உங்களைத் தி.மு.க.காரன் என்ற பிம்பத்துக்குள் அடைப்பார்களே?
கரு.பழனியப்பன்: அதனாலென்ன? என்னை பா.ஜ.க.காரன் என்று சொன்னால்தான் கேவலமாக நினைப்பேன். 

தற்சமயம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பேசுகிறீர்கள். ஒரு மாற்று அரசியலை முன்வைக்கும் காலம் வருமா? 
கரு.பழனியப்பன்: அது வரவேண்டுமென விரும்புகிறேன். இந்தியத் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சிறு கட்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதுதான் சரியும்கூட. ஆனால், தற்சமயம் நமக்குக் கிடைத்திருக்கும் குறைந்தபட்ச வாய்ப்பின் மூலம், எதிரியை விரட்டியடிப்பதற்கான வழியைத் தேடவேண்டும். தேர்தல் அறிவித்தபிறகு புரட்சி பேசக்கூடாது. மாற்று அரசியல் பேசுகிறவர்கள் தேர்தல் அறிவித்தபின்பே வாய் திறப்போம் என்றால், நோக்கம் வெற்றிபெறாது.  

இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கின்றனவே?
கரு.பழனியப்பன்: அதற்கான விடை மே 23-ல் தெரிந்துவிடும். ஒருவேளை நான் நினைத்தது நடக்காமல் போனால், இன்னும் தீவிரமாக இதைப்பற்றிப் பேசுவேன். இங்கு அ.தி.மு.க.வின் அருவருக்கத்தக்க ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியின் திட்டத்தினால் இறந்துபோன குடிமகளுக்கு இரங்கல்கூட சொல்லாமல் ஒரு முதல்வர் எப்படி இருக்கமுடியும்? அனைவரையும் உறையச் செய்திருக்கும் பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை நக்கீரன்கோபால் தனது பத்திரிகையின் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அதில் நடவடிக்கை எடுக்கவேண்டியது முதல்வரின் கடமை. அதைச் செய்யாமல் நக்கீரன்கோபாலை விசாரணை செய்கிறார்கள். இது அவரைப்போல உண்மையை வெளிக்கொண்டுவரத் துடிக்கும் பலருக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிரட்டல். அதனால்தான், செல்லும் இடங்களிலெல்லாம்  நக்கீரனைக் குறிப்பிட்டு பேசுகிறேன். கேட்பவர்கள் புரிந்திருக்கிறார்கள். 

-சந்திப்பு: ஃபெலிக்ஸ்

தொகுப்பு: -ச.ப.மதிவாணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்