Skip to main content

“நான்தான் எம்.எல்.ஏ.!” -பங்கு கேட்ட சிங்கம்!

“திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் தொல்லை அதிகரிக்கும். திமுக ஊழல் கட்சி ; ரவுடிகள் கட்சி.” என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளாசுவார் அமைச்சர் செல்லூர் ராஜு. தர்மபுரியில் பெட்ரோல் குண்டு வீசி பேருந்துக்கு தீவைத்து,  வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய மூவரையும் உயிரோடு தீயில் கருகவைத்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் உள்ளிட்ட 31 பேரும் அதிமுகவினர்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுவார்கள்,  செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள். ‘எங்களை மாதிரி வீராதிவீரர்களை கட்சியில் வைத்துக்கொண்டு ஊழல், ரவுடி என்றெல்லாம் எப்படி பேசலாம்?’ என்று அத்தகைய அமைச்சர்களுக்கு உணர்த்துவதுபோல், சாகசப் பேச்சு வார்த்தை நடத்தி பிரபலமாகியிருக்கிறார்,  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒ.செ. அக்கனாபுரம் ராஜா. அப்படி அவர் என்ன பேசிவிட்டார் என்று பார்ப்போம்!

 

 "I am the MLA!"- The lion asked for share!

 

‘தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் என்பது ஏமாற்று திட்டமாக உள்ளது..’ என்று விவசாயிகள் தரப்பு குற்றம் சாட்டிவரும் நிலையில், குடிமராமத்து ஒப்பந்தப்பணியை செய்பவரிடமிருந்து,  உரிய பங்கு  தனக்கு வரவில்லை என்று பஞ்சாயத்து கிளார்க் ஒருவரிடம் மிரட்டலாகப் பேசியிருக்கிறார் அக்கனாபுரம் ராஜா. அவ்விருவரின் உரையாடல் இதோ - 

“மாப்ள..  எனக்கு ரூபா கொடுக்காம எந்த ஊரணியத் தொட்டாலும்.. அடி பிதுக்கிப்போடுவேன் மாப்ள..  என்னைப் பத்தி உனக்கு தெரியும். நான் போலீஸுன்னு பார்க்க மாட்டேன்.. எவனையும் பார்க்க மாட்டேன்..  நான்தான் எம்.எல்.ஏ.” 

“மாமா..  நாளைக்கு வேலை ஆரம்பிக்கும் போது குடுத்துருவோம் மாமா..”

“எவன் வந்து வேலைய தொடணும்னாலும் ரூபா கொடுத்துட்டுத்தான் தொடணும். அது எவனா இருந்தாலும் சரி. அடி வந்து பிதிக்கிருவேன் மாப்ள.. நீயா இருந்தாலும் சரி. உன்னையும் கேஸைக் கொடுத்து உள்ளதான் தூக்கிப்போட்டேன்.  அந்த ரவிகுமாரயும் உள்ள தூக்கிப்போட்டேன். என்ன பத்தி உனக்குத் தெரியும். நான் தான் எம்.எல்.ஏ.”

“சரிமாமா.. சரிமாமா.. சரிமாமா..”

 "I am the MLA!"- The lion asked for share!


“காலைல பணத்த கொடுத்துட்டு வேலையைத் தொடணும்..  இல்ல எவனாவது தொட்டா கைய ஒடிச்சிப்புடுவேன். வந்து கைய ரெண்டா வெட்டிபுடுவேன் எவனையும். நான்தான் ஊர் நாட்டாமை தெரியும்ல..” 

“மாமா நாளைக்கு காலைல வந்து பாத்துருவோம் மாமா..” 

“நீயா இருந்தாலும் சரி..  பெரிய ஜாதி எவனாச்சும் வேலைய தொட்டுட்டான்னா..  கைய ஒடிச்சிபுடுவேன். வந்து வெட்டியேபுடுவேன் ரெண்டா.. நான் கோடிகோடியா சம்பாத்தியம் பண்ணி வச்சிருக்கேன் பார்த்துக்க.. கார்த்தி ஒரு ஆளுக்கு பதில் சொல்லுறதுக்கு  இந்த ஊர்ல உலகத்துல ஆளே இல்ல. இந்த அக்கனாபுரத்துல.  என் மகனுக்கு பதில் சொல்ல ஆளு இருக்கா? அப்படி ஒருத்தன் பொறந்தத  நான் பார்த்தது இல்ல.. அடி வெட்டிப் பொசுக்கிப்புடுவான் அவன.. 
வேலையே தொடக் கூடாது.. ரூபா கொடுக்காம வேலையத் தொட்டீங்க.. கைய ஒடிச்சிபுடுவேன்..  எவனா இருந்தாலும் ஒடிச்சிபுடுவேன். அத தாண்டிருவியா நீயி? தாண்டிருவேன்னு சொல்லு.. இப்ப உன்னோட வீட்டுக்கே வர்றேன். அவனுக்கெல்லாம் இந்த ஊர்ல இடமே இல்ல. ராஜ்ஜியம் நடத்திக்கிட்டிருக்கேன்.. சிங்கம்..” 

“என்ன மாமா.. காலைல வேலை ஆரம்பிக்கும்போது வாங்கிக்கங்க மாமா..” 

“பெரியசாமி வேலைய தொட்டுட்டானா? எனக்கு காசு கொடுக்காம வேலைய தொட்டுட்டான்னா கைய வெட்டிபுடுவேன் அந்தப் …… பயல. அவனயெல்லாம் வெட்டினா கேட்க நாதியில்ல மாப்ள..” என்று  சாதியை விமர்சித்தெல்லாம் பேசியிருக்கிறார் அக்கனாபுரம் ராஜா.

 

 "I am the MLA!"- The lion asked for share!

 

‘வார்த்தைக்கு வார்த்தை நான்தான் எம்.எல்.ஏ. என்கிறாரே ராஜா? அப்படியென்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்கு தொகுதியில் என்ன ரோல்?’  இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் நிலையில் ராஜா இல்லை. நமது லைனுக்கே அவர் வரவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபாவை தொடர்புகொண்டோம். வழக்கம்போல், அவருடைய கணவர் முத்தையாவே ‘அட்டெண்ட்’ பண்ணினார். “கொஞ்ச நேரத்தில் கூப்பிடுகிறேன்..” என்றவர், தொடர்ந்து நம்மைத் தவிர்த்தார். 

‘தன்னை எம்.எல்.ஏ. எனச்சொல்லும் துணிச்சல் ராஜாவுக்கு எப்படி வந்தது?’ அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். 

“ஊருக்குள் ‘ஒத்தக்கண் ராஜா’ என்பதே இவரது அடையாளம். ஆரம்பத்தில் சத்துணவு மையத்தில் வேலை.  2012-ல் இவரை வத்திராயிருப்பு அதிமுக ஒ.செ. ஆக்கினார் ஜெயலலிதா. அதன்பிறகு,  ஊருக்குள் இவரைப் பார்ப்பதே அபூர்வம். சென்னையில் தலைமைச் செயலகத்தையும், மாண்புமிகுக்களையும் சுற்றி வந்தார். அங்கே அப்படி என்ன வேலையென்று கேட்டுவிடாதீர்கள். வெளியில் சொல்ல முடியாத ரகசிய சேவையில் முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இப்போது, கட்சியில் பொறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், ஸ்கார்பியோ காரில்தான் தொகுதியை வலம் வருவார். சந்திரபிரபா எம்.எல்.ஏ.விடமும் அவருடைய கணவர் முத்தையாவிடமும் பசைபோல் ஒட்டிக்கொண்டார். பெர்சன்டேஜிலிருந்து சகலத்தையும் எம்.எல்.ஏ. பெயரைச் சொல்லி வசூலிப்பதற்கென்றே ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 10 பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த அக்கனாபுரம் ராஜா. இவரைப் போன்றவர்கள், வாங்கியது அனைத்தையும் அப்படியே கொண்டுபோய்ச் சேர்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.” என மிகையின்றி விவரித்தார்கள்.   

 "I am the MLA!"- The lion asked for share!


சாதி பெயரைச் சொல்லி அவதூறாகப் பேசியதாக குறிப்பிட்ட சமுதாயத்தினர் ராஜா மீதான புகாரோடு காவல் நிலையத்துக்குச் செல்ல.. போலீசார் அவர்களிடம்   ‘அவர் எந்த ஒப்பந்தகாரரைத் திட்டினாரோ, அவரே புகார் அளிக்க முன்வரவில்லை. நீங்கள் ஏன் தேவையில்லாமல் பிரச்சனையைப் பெரிதாக்குகின்றீர்கள்?’ என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். 

 

 "I am the MLA!"- The lion asked for share!

 

‘உடனே மன்னிப்பு கேள்!’ என்று கட்சியின் சீனியர்கள் நெருக்கடி தர, வாட்ஸ்-ஆப் மூலம் தனது வாய்ஸிலேயே,  குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு  விளக்கம் தந்திருக்கிறார் ராஜா. அதில் “நான் தங்கள் சமுதாயம் குறித்து தவறாகப் பேசியதாக வாட்ஸ்-அப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. நான் அவ்வாறு தவறாக எதுவும் பேசவில்லை. அரசியலில் எனக்குப் பிடிக்காத சில சக்திகள்தான்,  நான் பேசியதாக வாய்ஸ் செட்டப் செய்து,  எனக்கு கட்சியில் கிடைக்கவிருக்கின்ற  ஒன்றியச் செயலாளர் பதவியைத்  தடுப்பதற்காக இப்படி செய்துவிட்டார்கள்.  நான் கடந்த 40 ஆண்டுகளாக நமது சமுதாய மக்களிடம் அண்ணன் தம்பியாகப் பழகி வருகிறேன். அரசியலிலும் மக்கள் மத்தியிலும் எனக்கு கெட்ட பெயரை உருவாக்க நினைக்கிறார்கள்.  நான் அப்படி தவறுதலாகப் பேசியதாக அந்த சமுதாய மக்கள் நினைத்தால்,  என்னை  மன்னிக்கவேண்டும்.” என்று பேசி பதிவு செய்திருக்கிறார். 

‘இது என்னுடைய கையெழுத்து இல்லை’ என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்ன வரலாற்றுக்குச் சொந்தமானவர்கள் அக்கட்சியில் உண்டு. அதற்கு முன்னால், இந்த ராஜாவும் அவருடைய மன்னிப்பும் எம்மாத்திரம்?  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்