Skip to main content

தமிழர்களை வாழ விடமாட்டார் மோடி! -மிரட்டும் ஹைட்ரோகார்பன் பூதம்!!!

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
hydrocarbon

 

கூடங்குளம் அணு மின்நிலையம், நியுட்ரினோ ஆய்வுத் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு வரிசையில் தமிழகத்தைச் சுடுகாடாக்குவதற்கு மோடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம்! முன்பு நெடுவாசலில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தது. ஆனால், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகத் திட்டம் கைவிடப்பட்டது.
 

நிலத்துக்கும் நீருக்கும் ஆபத்து!

டெல்டா மாவட்டத்தைப் பாலைவனமாக்கும் இந்தத் திட்டம் தமிழகத்தில் மூன்று மண்டலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இவற்றில்,  இரண்டை ஒப்பந்தம் எடுத்திருக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமம். மற்றொரு இடத்தை ஒப்பந்தம் எடுத்திருப்பது மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான ஓஎன்ஜிசி.
 

ஹைட்ரஜன், கார்பன் ஆகிய இரு வேதிப்பொருள்கள் இணைந்த மீத்தேன், ஈத்தேன், புரோத்தேன், ஹெக்சேன், மண்ணெண்ணெய், பெட்ரோலியம் போன்ற 14 வகைக் கனிமங்கள் ஹைட்ரோகார்பன்கள் எனப்படுகின்றன. பூமிக்கடியில்  பாறை இடுக்குகளில் படிந்திருக்கும் இந்த எரிவாயுவை ஆழ்துளையிட்டு உறிஞ்சி எடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.  ஆனால், 6000 மீட்டர் வரை துளையிடும்போது, கடல்நீர் உட்புகும் ஆபத்து உண்டு.  நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும். மண்ணும் பாழ்பட்டுப்போகும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.  


அபகரிப்பதற்கு ராணுவ பலப்பிரயோகம்! 

ஒஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பது தரைப்பகுதியில்.  அதாவது, கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டாரத்தில் 731 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோல், மும்பை கடற்கரை பகுதியில் 725 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் ஓஎன்ஜிசி நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.


 

hydrocarbon


 

கடந்த  1-ஆம் தேதி டெல்லியில் தர்மேந்திரபிரதான் முன்னிலையில் ஓஏஎல்பி (Open Acreage Licensing Policy) முறைப்படி வேதாந்தா குழுமத்திற்கு 41 இடங்களும், ஆயில் இந்தியா லிமிடெட்டுக்கு 9, ஓஎன்ஜிசிக்கு 2, கெயில், பி.பி.ஆர்.எல். மற்றும் எச்.ஓ.இ.சி ஆகிய நிறுவனங்களுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம்,  இந்த நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தலாம், எங்கெங்கு எண்ணெய் வளம் இருக்கிறது? ராணுவத்தை அனுப்பியாவது, அந்த நிலத்தைப் பிடுங்கிக் கொடுப்போம் என்பதுதான், ஒப்பந்தத்தின் சாராம்சம். எண்ணெய் எடுக்கும் நிறுவனம் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும், விற்பனைக்கு அனுப்பலாம். விலையையும் அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். ஓஏஎல்பி என்ற புதிய நடைமுறையை செயல்படுத்தும் கொள்கை முடிவு கடந்த 10-03-2016 அன்று மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 
 

ஆய்வுக்கு மட்டுமே அனுமதி! – அதிமுக கிச்சு கிச்சு!

இது குறித்து எதுவும் தெரியாமல்,  இந்தத் திட்டத்தைக் கண்டிப்பாக எதிர்ப்போம் என கம்பு சுற்றுகிறது அதிமுக அரசு.  துணை முதல்வர் ஓ.பி.எஸ், ''மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்கிறார். அமைச்சர் மாஃபா பாண்டியராஜனோ, "இப்போது ஹைட்ரோகார்பன் இருக்கிறதா? இல்லையா? என ஆய்வு செய்வதற்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்" என்று சிரிப்பு மூட்டுகிறார். 


 

hydrocarbon


 

இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கும் நிலையில், அக்டோபர் 3-ஆம் தேதி, சம்பிரதாயத்திற்காக திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தித் தன்  இருப்பைப் பதிவு செய்து கொண்டது திமுக. 
 

நச்சுப் பகுதியில் வாழ முடியாது!
 

hydrocarbon


 

மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், "வேதாந்தா குழுமத்திற்கும், ஓஎன்ஜிசிக்கும் கொடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். 78 வகையான ரசாயனங்களைக் கொண்டு நீரியல் முறையில் 30 ஆண்டுகள் வரை,  இவ்விரு நிறுவனங்களும் அனைத்து வகையான ரசாயனங்களையும் எடுக்கும்.  30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதி வாழமுடியாத நச்சுப்பகுதி ஆகிவிடும்.  விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்,  இந்த இடத்தைவிட்டு மக்கள் வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்காது." என்று  எச்சரிக்கிறார்.
 

திட்டமிட்டு ஏவப்பட்ட அரச பயங்கரவாதம்!
 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால் அதை எதிர்ப்பதற்கு மக்களுக்குத் துணிவு வரக்கூடாது என்பதற்காகத்தான், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதம் ஏவப்பட்டதோ? என்ற ஐயம் எழுகின்றது.” என்று கூறிவிட்டு,   “வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்"  என்று எச்சரித்திருக்கிறார். 

 

hydrocarbon




டெல்லியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழகத்தில் நாகை அருகே கடல் பகுதியில் தான் வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க இருக்கிறது. அதனால், தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார். அவரிடம் செய்தியாளர்கள்   ‘சிதம்பரத்தில் நிலப்பகுதியில் அல்லவா ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறது?’ என்று எதிர்கேள்வி கேட்டனர்.  இதற்குப் பதில் அளிக்காத பிரதான்,  “நெக்ஸ்ட் கொஸ்டீன்..” என்று அடுத்த கேள்விக்குத்  தாவினார்.
 

ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி பாலகுருசாமியிடம்  ‘மத்திய அமைச்சரே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறாரே?’ என்று கேட்டபோது,  “தமிழ்நாட்டுல பேருக்குத்தானே அதிமுக ஆட்சி? கன்ட்ரோல் முழுக்க சென்ட்ரல்தான்! தமிழ்நாட்ட கிள்ளுக்கீரையா பார்க்கிறாங்க. மத்திய அமைச்சர் இதுவும் பேசுவாரு. இன்னமும் பேசுவாரு. இங்கே எத்தனை குட்டிக்கரணம் அடிச்சாலும் பி.ஜே.பி.க்கு ஓட்டு விழாது. அதான், தமிழ்நாட்ட ஒண்ணும் இல்லாம பண்ணுறதுக்கு, அழிக்கிற வேலையில் இறங்கிட்டாரு மோடி.” என்றார் வேதனையுடன்.  
 

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி.  நடப்பதையெல்லாம் கவனித்தால், மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்காக ஆட்சி நடத்துவதுபோல் தெரியவில்லை.

 

 


 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.