Skip to main content

அசத்தப்போவது ஹைதராபாத் காவல்துறை! - திரும்பிப் பார்க்குமா சென்னை காவல்துறை?  

Published on 05/05/2018 | Edited on 05/05/2018

இப்பொழுதெல்லாம் நாம் நமது அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. உங்கள் ஓட்டுனர் உரிமம் தொலைந்தால் கூட உங்களுக்கான காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வெள்ளை காகிதத்தில் மனு எழுதி கொடுத்து, மனு ஏற்பு சான்றிதழை முதலில் பெற்று இரண்டு நாட்கள் கழித்து காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை என மீண்டும் ஒரு சான்றிதழ் பெற வேண்டும். அதற்குப் பிறகே உங்களால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் விதிமுறைகளின்படி ஓட்டுனர் உரிமம் மீண்டும் பெற முடியும். இதை நீங்கள் நேர்மையாகக் கடக்க வேண்டும் என்று நினைத்தால் மனு ஏற்பு சான்றிதழைக் கூடப் பெற முடியாது. ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, கசப்பான உண்மையாக இதுதான் இருக்கிறது. 
 

rto bribe

 

 


ரயில்,பேருந்து பயணங்களின் போது முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகள்,புது வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு நமது வரலாற்றை நிரூபிக்க மதிப்பெண் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், தொழில் உடன்பாட்டின் அடையாளமாக பரிமாறப்படும் தகவல்கள் என இன்னும் எத்தனையோ ஆவணங்கள், வேலைக்கு விண்ணப்பிக்க, மேற்படிப்புக்கு என பல்வேறு காரணங்களுக்காக நம் வீட்டருகே உள்ள கணினி மையத்தில் அல்லது ஜெராக்ஸ் கடையில் நம்மால் முன்பு அச்சிடப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில், வங்கித் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் முழுக்க கணினிமயமாக்கப்பட்டுவிட்டதால் சான்றிதழ்கள் டிஜிட்டலாக பகிரப்பட்டு காகிதப் பயன்பாடு வெகுவாகக்  குறைக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி,பொது மக்களுக்கும் பண,நேர விரயம் தவிர்க்கப்படுள்ளது. பாஸ்போர்ட் அலுவலகங்களும் மாறிவிட்டன. முன்பு போல் ஏஜென்ட்டுகள் தேவையில்லை. நாமே எளிதாக விண்ணப்பித்து, மனஉளைச்சல் இல்லாமல் (சான்றிதழ்கள் சரியாக இருக்கும் பட்சத்தில்) பெற முடிகிறது. இப்படியிருக்க, தமிழக காவல் நிலையங்களோ இன்றும் புகார் கொடுக்க செல்பவர்களை ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு வா என்கிறது. வலைதளம் இருந்தும் கணினிமயமாக்கப்பட்டும், அதை மக்களைப் பயன்படுத்த ஊக்குவிக்காமல் மந்தமாகவே இருக்கிறது இங்கு நிலைமை. யார் லாபத்திற்காக? பாதிக்கப்பட்டவர்கள் கணினி மூலம் தங்கள் அடையாளத்தை உறுதி செய்து குறைகளைப் பதிவு செய்தால் லஞ்சம் குறைந்து, குறைகள் குவியும் என்பதற்காகவா? 

 

anjani kumar

அஞ்சனி குமார்



தமிழகத்தில் நிலைமை இப்படியிருக்க, இந்த மே 1 முதல் இந்தியாவுக்கே முன்னோடியாக ஹைதராபாத்தில் 100 சதவிகிதம் காகிதப் பயன்பாடு அகற்றப்பட்டு முற்றிலும் கணினிமயமாகிவுள்ளது. காவல்துறைக்கான ஃபேஸ்புக் பக்கத்திலேயே பொதுமக்கள் புகார்களை அளிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் சென்று புகார் அளிப்பவர்களின் விவரங்களை கணினியில் பதிய காவலர்களுக்கு கணினி மற்றும் இணைய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. "இதன் மூலம் ஏறத்தாழ ஆண்டொன்றிற்க்கு ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். தற்போது இருப்பதை விட  நடவடிக்கைகளை விரைவாகவும், எளிமையாகவும் செயல்படுத்த முடியும்" என்று இந்தத் திட்டத்தை செயல்படுத்திய ஹைதராபாத் காவல்துறை ஆணையர் அஞ்சனி குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 


ஹைதராபாத் காவல்துறை அங்கு அசத்தக் காத்திருக்க, சென்னை காவல்துறை குட்கா சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. எதற்கும் அசையாத தமிழக காவல்துறை அமைச்சரான நம் முதல்வரின் பேருக்கு இங்கு திரையரங்குகளில் அர்ச்சனை நடக்கிறது.