Advertisment

பசி!.. தொற்றல்ல, தொன்றுதொட்டு…

Hungry! .. not infectious,

கட்டுரை : சாக்லா

"வாடிய பயிரைகண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்”

என்று பசியால் வாடும் மக்களின் நிலை குறித்து உள்ளம் பதைத்து பாடினார் வள்ளலார். இந்தியாவில் பசி, பட்டினி என்ற பிச்சை பாத்திரம் ஒவ்வொரு ஆட்சிக்காலத்தில் உண்டாக்கப்படும் சாத்திரமாகும். சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த நிலையை மாற்றவும் ஆளும் மன்னர்களுக்கு மனம் வந்ததாயில்லை. உலக அளவில் கரோனா தொற்று நோயின் வீரியம் அதிகரித்து வரும் அதே சூழலில், பசியால் துடிதுடிக்கும் மக்களின் அறியப்படாத சாவும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு தொடங்கி 40 நாட்களுக்கு மேலாக இருண்டோடிவிட்டது. ஆனாலும், இந்த ஊரடங்கை மக்களுக்குப் பயனுள்ளதாக பயன்படுத்தும் அளவிற்கான எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லாமல், மக்களை அல்லல் பட வைத்திருப்பது வேதனை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சரியான பாதுகாப்பு வசதிகளைக்கூட சரிவர செய்து கொடுக்காததால் தொழிலாளர்களின் நிலை சீரழிந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஏழை மக்களின் நிலைமை சொல்லொணாத்துயரமாகநிழலாடுகிறது. இப்படி ஊரடங்கு காலத்தில் மக்களை பஞ்சப்பராரிகளாக அலையவைத்திருப்பதுதான் மத்திய அரசின் சாதனையாக உள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக மக்கள் பட்டினிச் சாவிற்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. உணவு பாதுகாப்பு திட்ட கழகம் எச்சரிக்கை மணி அடித்திருப்பது ஏழை மக்களின் அடிநாதத்தை குலை நடுங்க வைத்துள்ளது.

Advertisment

பட்டினிச்சாவிற்கு தள்ளப்படும் மக்கள்:

கோவிட்-19 தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, காரணமாக தனிமனித பொருளாதாரம் பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. தினக்கூலிகளின் அடிப்படை வாழ்வாதாரம் பசி பட்டினியோடு கழிக்கக் கூடியதாகவே மாறியுள்ளது. ஊரடங்கு காரணமாக அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் பள்ளிகளில் பெறும் சத்துணவை இழந்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு கிடைக்கப்பெற்ற ஊட்டச்சத்துகளிலும் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் குழந்தைகளே சத்துணவை நாடியுள்ளவர்கள். இந்நிலையில் தற்போது உள்ள நெருக்கடி சூழலில், இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 368 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியில் சாதாரணமாக பெறும் சத்தான உணவு மற்றும் சிற்றுண்டிகளை இழந்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை நியூயார்க் டைம்ஸ் புள்ளிவிவரம் தெரிவித்திருக்கிறது. பொது விநியோகத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் உணவு தானியங்களை மக்கள் நாடியுள்ள சூழலில், இந்தியாவின் வட மாநிலங்களில் இதன் தட்டுப்பாடு மக்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்திலும் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் தத்தளிக்கும் குடும்பங்கள் இலவச உணவுகளை வாங்க நடுங்கிக்கொண்டு பசியால் மூர்ச்சையாகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் ஊடகத்தில் நடைபெற்ற சாமானியர்களுக்கான விவாதத்தில் பங்கேற்ற பெயிண்ட் காண்ட்ரக்டர் “நாங்கள் ஒவ்வொரு நாளும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறோம் யாராவது உதவி செய்ய வருவார்களா” என்று கண்ணை துடைத்தவாறு பேசுகையில் வேடிக்கை பார்க்கும் அரசின் மீதான ஆத்திரக்கடல் கொந்தளிக்கிறது.

Advertisment

Hungry! .. not infectious, palpable…

கரோனா தொற்று நோயால், 2020ஆம் ஆண்டில் 130 மில்லியனுக்கும் அதிகமானோர் பசியுடன் இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உலக உணவு திட்டத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ஆரிஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, ஆண்டு இறுதிக்குள் 265 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்படலாம் என்றும், ஏற்கனவே 135 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த நிலையில் தற்போது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், "இதற்கு முன்பு இது போன்ற சூழலை எதிர்கொண்டதில்லை” என்று ஹுசைன் குறிப்பிட்டிருப்பது பெரும் அச்சத்தையும், பட்டினியால் மனித இழப்புகளுக்கான முன்னெச்சரிக்கையாக இருக்க கூடும் என்று பொருளாதார அறிஞர்களின் கணிப்பாக இருக்கிறது.

உணவு பாதுகாப்புடன் மக்களின் பசி:

உலகளவில் உணவுப் பொருட்களுக்கு தற்போது வரை பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆனால் வரும் மாதங்களில் ஏற்படும் போக்குவரத்து சிக்கல் காரணமாக இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் உணவுத் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் ஜோஹன் ஸ்வின்னென் தெரிவித்துள்ளார். பணக்கார நாடுகளில் உணவு விநியோகம் மற்றும் சில்லறை விற்பனை முறை ஒழுங்கமைக்கப்பட்டு தானியங்குபடுத்தப்பட்டாலும், வளரும் நாடுகளில் உள்ள அமைப்புகள் உழைப்பு மிகுந்தவை. இந்த விநியோகச் சங்கிலிகள் கோவிட் -19 மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்று ஜெனரல் ஜோஹன் கூறியுள்ளார். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இன்றளவில் 524.5 மெட்ரிக் டன் அளவு உணவு தானியங்கள் உள்ளதாகவும், இதில் 289.5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 235 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். மேலும், 287 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும் இருப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

உணவு தானிய உற்பத்தியில் இந்தியா அந்நிய நாட்டை சார்ந்திருக்கவில்லை. மேலாக, அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உற்பத்தி திறனை பெருக்கியிருக்கிறது. ஆனால், உள்நாட்டு மக்களின் பசியை போக்கிட எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றியாகவில்லை.

செவி சாய்க்குமா?

ஊரடங்கு காலத்தில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நடைமுறையில் மக்கள் உணவிற்காக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகளை நம்பியே கையேந்தி நிற்கும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்களிடம் பணம் இல்லாததால் குறைவான உணவை உண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் குரல் செய்தி ஊடங்களில் மௌனமாய் ஒலிக்கிறது. “நாங்கள் பசியோடு குடி கொண்டிருக்கிறோம் ஆனால் எங்கள் குழந்தைகள் உணவு கேட்கிறார்கள்” என்று பீகாரை சேர்ந்த சிவ் குமார் என்பவர் தனியார் ஆங்கில ஏட்டிற்கு அளித்த பேட்டியை கேட்கும் பொழுது கண்ணெல்லாம் குளமாகிறது. "நாங்கள் நோயினால் பாதிக்கப்படவில்லை, பசியால் தான் வாடிக்கொண்டிருக்கிறோம்” என்று பீகாரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலையில்லாமல் அறைக்குள் அடைபட்டு பசியால் அலறும் சப்தம் அரசை அச்சுறுத்தவில்லை. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச உணவு தானிய பொருட்களை வழங்க அரசு உடனடியாக ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஏற்படும் பட்டினி சாவிலிருந்து மக்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். வறுமையிலும், பசியாலும் சிக்கித்தவிக்கும் இந்திய ஏழை மக்களுக்கு உதவிட, தோராயமாக 65 ஆயிரம் கோடி தேவைப்படும். நமது உள்நாட்டு மொத்த உற்பத்தி 200 லட்சம் கோடி ரூபாயாகும். இதில் 65 ஆயிரம் கோடி ரூபாய் பெரிய தொகை அல்ல. ஏழைகளை காப்பாற்ற வேண்டியது நம் கடமை. என்று முன்னாள் ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார். இதை நிவர்த்தி செய்ய பாஜக அரசு செவி சாய்க்குமா?

"கவனம்!

என் பசியை

அஞ்சிக் கவனமாய் இருங்கள்

என் சினத்தை

அஞ்சிக் கவனமாய் இருங்கள்"

என்ற பாலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்வீஸின் வரிகள் பசியின் பிணியில் ஒடுங்கும் ஏழை மக்களின் குரலாக எதிரொலிக்கிறது. பாரெல்லாம் நோய் பகைமை, நாடெல்லாம் மக்கள் தனிமை, பாமரன் பாத்திரத்தில் நிறைந்திருப்பதோ பசியின் வறுமை.

corona virus India poor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe