/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/blood-art-2.jpg)
தமிழ்நாட்டில் இருந்த மிட்டா மிராசுகளும், வணிகர்கள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த பலரும் ஏழைகளின் பயன்பாட்டிற்காக பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகளை சொந்த செலவில் ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இன்றளவும் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வாரிசுகள் அதை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அரிமளம் தொடங்கி காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நகரத்தார்களால் இந்த பணிகள் சிறப்பாகவே செய்யப்பட்டுள்ளது.
இதே போல தான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 1920ல் தாய்சேய் நல மையத்தை கௌரவ மாஜிஸ்திரேட் பள்ளத்தூர் அடைக்கப்பசெட்டியார் தனது மகள் உமையாள் ஆச்சி பெயரில் கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் பிரசவம் என்பது குறைவு தான் என்றாலும் அதற்கான தேவைகள் இருந்ததால் அந்த கட்டடத்தைக் கட்டி அப்போதைய தஞ்சாவூர் கலெக்டர் டட் என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார். இதற்கான கல்வெட்டு ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
102 ஆண்டுகள் கடந்தாலும் கூட அந்த கட்டடம் சற்றும் சிதிலமடையாமல் உள்ளதால் அந்த கட்டடத்தை இடித்து விடாமல் ரத்த வங்கியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவில் ரத்த வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை அலுவலராக பணிக்கு வந்த விவேகானந்தன் பழைய கல்வெட்டை பார்த்து அடைக்கப்பசெட்டியார் குடும்பத்தினரை அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கடந்த 1990 ஆண்டு முதல் அவரது குடும்பத்தினரை தேடத் தொடங்கியுள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/blood-art-3.jpg)
சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் வந்த பிறகு சமூக வலைதளங்கள் மூலம் தேடிய போது 2021ம் ஆண்டு மதுரையில் இருந்து அருணாசலம் என்பவர் தொடர்பு கொண்டு எங்கள் பாட்டனார் தான் பள்ளத்தூர் அடைக்கப்பசெட்டியார் என்று அறிமுகமானார். கொரோனா காரணங்களால் அவர்களால் வர இயலாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைக்கப்பசெட்டியாரின் 3வது தலைமுறை வாரிசுகளான பெங்களூரில் இருந்து லெட்சுமணன் செட்டியார் (வயது 85)மற்றும் அடைக்கப்பன், கதிரேசன், அருணாசலம் ஆகியோர் தங்கள் பாட்டனார் கட்டிய மகப்பேறு மையத்தைப் பார்க்க பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்து பழைய கட்டடத்தைப் பார்த்து ஆனந்தப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/blood-art.jpg)
தொடர்ந்து தாங்கள் கையோடு கொண்டு வந்த கௌரவ மாஜிஸ்திரேட் அடைக்கப்பசெட்டியார் மற்றும் அவரது மகள் உமையாள் ஆச்சி படங்களை தலைமை மருத்துவர் அன்பழகனிடம் வழங்கினார்கள். தொடர்ந்து விவேகானந்தன் அடைக்கப்பன் வாரிசுகளுக்கு புத்தகங்கள் பரிசளித்து பொன்னாடைகள் அணிவித்து கௌரவப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)