Skip to main content

எப்படி இருந்தது 2017?

Published on 01/01/2018 | Edited on 01/01/2018


2017 இந்திய, தமிழக  அரசியலில் திருப்பங்களும் குழப்பங்களும் நிறைந்திருந்த ஆண்டு. உங்கள் கட்சிக்கும் உங்கள் தலைவருக்கும் 2017 எப்படி இருந்தது என்று தொடர் அரசியல் செயல்பாடுகளில் இருப்பவர்கள் சிலரிடம் கேட்டோம்...   




பிரதமர் மோடிக்கு... 
வெற்றிச்   சாதனை ஆண்டு! 

பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துதான் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார். ஒவ்வொறு வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். வரவேற்பும் இருக்குகின்றன. விமர்சனங்களும் வைக்கின்றனர். பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி ஜி.எஸ்.டி.யை 2017ல் கொண்டு வந்தார். 10 வருடமாக முயன்ற  காங்கிரஸ் அரசு பண்ண முடியாததை, அதற்கு பின்னர் வந்த பாஜக ஆட்சியில் மூன்றரை ஆண்டு காலத்தில் மோடி அதனை கொண்டு வந்தார். ஜி.எஸ்.டி. கவுன்சில் என உருவாக்கி ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்களை அதில் உறுப்பினர்களாக்கி, அந்தந்த மாநில தேவைகளை, பிரச்சனைகளை பற்றி பேச வைத்தார். சிவகாசி பட்டாசு தொழில் செய்பவர்கள், கிரைண்டர் தொழில் செய்பவர்கள் என ஒரு மாநிலத்தில் மட்டுமே உற்பத்தி செய்தவர்கள் மற்ற மாநில நிதியமைச்சர்களை சந்திப்பதற்கும், அவர்களுக்கு தங்களுடைய தொழில் பற்றி தெரியப்படுத்தவும் வாய்ப்பு  உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கக் கூடிய வாய்ப்புகளும், வசதிகளும் ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம்  தெரிய வருகிறது. எங்கும் ஒரே வரி என்கிறார்கள். அப்படியல்ல. சீராக்கப்பட்ட வரி. ஜி.எஸ்.டி. ஆரம்பக்கட்டத்தில் நிறைய குளறுபடிகள், சிக்கல்கள் இருந்தாலும், படிப்படியாக இது ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும். வியாபாரத்தில் நேர்மையாக இருப்பவர்களுக்கு இது பாதுகாப்பாக இருக்கும். வரி வருவாய் அரசாங்கத்திற்கு எளிதான வகையில் கொண்டுவருவதன் காரணமாக உள்கட்டமைப்பு வசதிகள், அடுத்தக்கட்ட முதலீட்டுக்கான வசதிகள், வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கு ஜி.எஸ்.டி. பெருமளவு பயன் கொடுக்கும். குஜராத்தில் தொடர்ந்து வெற்றி தக்க வைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் ஆட்சி பரவிய வெற்றி சாதனை புரிந்த ஆண்டு.  

வானதி சீனிவாசன் 
பொதுச் செயலாளர் - பாஜக





ராகுல் காந்தி...
தலைவராக உருவெடுத்த ஆண்டு! 

2017ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி உருவெடுத்திருக்கிறார். அவர் வந்த பிறகுதான் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் 22 ஆண்டுகளாக இல்லாத விறுவிறுப்பை ஏற்படுத்தி அம்மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக காங்கிரஸ் கட்சி உருவாகியுள்ளது. அங்கு பாஜகவின் பொய் வாக்குறுதிகள் அம்பலப்பட்டிருக்கிறது. மக்கள் ராகுல் வருங்கால பிரதமராக பார்க்கிறார்கள். ஏற்றுக்கொள்வார்கள். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை முன்னெடுத்து வருகிறார். 2ஜி வழக்கை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை அப்புறப்படுத்த பாஜக திட்டமிட்டது. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வழக்கு என்று அதுவும் நல்ல தீர்ப்பாக டிசம்பர் மாதத்தில் வந்திருக்கிறது. இவ்வாறு மிகப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ள ராகுல் பிரதமராகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

விஜயதாரணி 
காங்கிரஸ் எம்.எல்.ஏ 





தினகரனுக்கு... 
இமாலய சாதனை செய்த வெற்றி ஆண்டு! 

துணைப்பொதுச்செயலாளராக தினகரன் பொறுப்பேற்றவுடன், தற்போது உள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் அவருக்கு ஆதரவாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் ஓட்டு கேட்டார்கள். பின்னர் துரோகிகளுடன் கைகோர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியும், சில அமைச்சர்களும் தினகரனை எதிர்த்தார்கள். மத்திய அரசு பல்வேறு வழக்குகளை தினகரன் மீது போட்டது. திகார் சிறை வரை சென்றார். அப்போது அனைவரும் தினகரனுக்கு அரசியல் வாழ்வு முடிந்தது என்றனர்.

பல்வேறு சோதனைகளை தாண்டி, சூழ்ச்சிகளை சந்தித்து மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டார். அப்போது குக்கர் காயிலாங்கடைக்குத்தான் போகும் என்றனர். ஆனால் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்எல்ஏவாகியிருக்கிறார்.

ஒரு சுயேட்சை வேட்பாளராக நின்று ஆளும் கட்சியை எதிர்த்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றதுதான் 2017ஆம் ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வு. தமிழக மக்கள் தினகரனை ஏற்றுக்கொண்டார்கள் என்பதைத்தான் ஆர்.கே.நகர் மக்கள் வாக்குகள் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். நாங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை வியப்பாக பார்க்கிறது.

தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ 





திருமாவளவனுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும்... 

ஆட்சி அதிகாரத்தில் பங்கு - செயல்பாட்டைத் தொடங்கிய ஆண்டு!  

பொதுவாக தேர்தல் சமயத்தில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டால், தங்களுக்கு சாதகமில்லாத 8 தொகுதிகள், 10 தொகுதிகள் என பிரித்துக்கொடுப்பார்கள். அப்போது கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளுக்கு எங்களைப்போன்ற கட்சிகள் அதிகம் உழைக்கும். அதற்கான பயனையும் பெறும். ஆனால் எங்களைப் போன்ற கட்சிகள் வெற்றிப் பெறும் தொகுதிகளும் குறைவு, எங்களுக்காக அவர்களுடைய உழைப்பும் குறைவாகத்தான் இருக்கும்.

இந்த சூழலில் 2017ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் சில மறக்க முடியாத நிகழ்வுகளை முன்னெடுத்திருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற புதிய முழக்கத்தை முன்வைத்தார்.
'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை'
என்று வள்ளுவர் கூறியுள்ளார். நாம் மட்டும் உண்டு உயிர் வாழ்ந்தால் அது சிறப்பான வாழ்வு ஆகாது. வறுமையிலும் சரி, வசதியிலும் சரி, நம்முடைய உணவை பிறருடன் பகிர்ந்து உண்ணுவதே சிறப்பாகும். அவர் உணவை மட்டும் சொல்லவில்லை. அதிகாரத்தையும்தான் சொல்லியிருக்கிறார். எல்லாம் எல்லோருக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறார். புறந்தள்ளப்பட்டு, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதனை செயல்படுத்துவதற்கான வடிவம்தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை திருமாவளவன் முன் வைத்தார்.

மக்கள் நலக் கூட்டணி, அதன் பின்னர் மக்கள் நலக் கூட்டியக்கம் என உருவாக்கினார். அதைத்தொடர்ந்து மதசார்பின்மையை நோக்கி போக வேண்டும் என விரும்பினார். தொடர்ந்து மாநில சுயாட்சி, மாநில உரிமைகளுக்காக முழங்கினார். பல்வேறு தரப்பட்ட தேசிய இனங்களுடைய உரிமைகளை முன்வைத்தார். இவையெல்லாம் தமிழ் தேசிய இனத்தின் முக்கியமான கோரிக்கையாக நான் பார்க்கிறேன். மொத்தத்தில் 2017ல்
வடக்கில் இருந்து தெற்கு  வந்து ஆளும் முயற்சிகள் எடுப்பதை தடுக்கும் விதத்தில் திருமாவளவனின் செயல்பாடுகள் இருந்தன என பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம்.

வன்னி அரசு
செய்தித் தொடர்பாளர் 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு... 

அரசின் யுத்தத்தில்  மக்கள் பக்கம் நின்ற ஆண்டு! 

2017ல் குறிப்பாக மத்திய அரசு, தமிழக மக்கள் மீது ஒரு யுத்தத்தையே தொடுத்தார்கள். நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., கீழடி அகழ்வாராய்ச்சி சீர்குலைத்தது, இந்தி திணிப்பு இப்படி தமிழக பண்பாட்டு மீது தாக்குதல் நடத்தியது. இவைகளை எதிர்ப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2017ல் முக்கிய பங்காற்றியது.

பாஜகவின் பினாமி ஆட்சியாக, எடுபிடி அரசாக அதிமுக அரசு செயல்பட்டது. குறிப்பாக ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பாஜக ஆட்சியின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு போய்விட்டது. இந்த ஆட்சியை எதிர்த்து மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கம் நடத்தியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய பங்காற்றியது.

ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு... 

போராட்ட ஆண்டு! 

2017ம் ஆண்டு பல கசப்பான அனுபவங்களை, சம்பவங்களை தந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மிகவும் சீர்கெட்டுள்ளது. தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் தமிழகத்திற்கான உரிமையை அதிமுக அரசு போராடி பெறவில்லை. மத்திய அரசு தடுத்த காரணத்தினால் அனிதாவை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இந்த ஆட்சியை நன்கு பரிசீலித்து, மக்களின் ஆதரவை இழந்த இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று தீர்மானம் போட்டது மட்டுமல்லாமல், மாவட்ட தலைநகரங்களில் மிகப்பெரிய இயக்கத்தை நடத்தியிருக்கிறோம். அதுபோல இந்திய தேசம் மீட்கப்பட வேண்டும், தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டம் நடத்தியிருக்கிறது. விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் மீனவர்கள் பிரச்சனை தீரவில்லை. ஒக்கி புயலில் சிக்கிய 400 மீனவர்களின் நிலை என்ன என்று இன்று வரை தெரியவில்லை. தமிழக பிரச்சனைகள் தீருவதற்கு தமிழக மக்கள் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு கூறினார்.

இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்

- வே.ராஜவேல் 

சார்ந்த செய்திகள்