Skip to main content

கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த வரிச்சியூர் செல்வம்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

How varichiyur selvam has been arrested by police

 

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதைப் போல, நகைகளைக் குவியலாக அணிந்துகொண்டு ஜோக்கர் கெட்டப்பில் வலம் வந்தாலும், தனது ரவுடித் தனத்தை வரிச்சியூர் செல்வம் தொடரவே செய்திருக்கிறார். 2020-ல் மதுரை வரிச்சியூர் அருகே குன்னத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணராஜனும், ஊராட்சி மன்றப் பணியாளர் முனிச்சாமியும் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவரை சென்னைக்கு தப்பிச் சென்றுவிடுமாறு வரிச்சியூர் செல்வம் கூறிய நிலையில் மாயமானார். குற்றவாளி செந்தில்குமாரை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்குமார் மனைவி முருகலட்சுமியும், தனது கணவர் காணாமல்போனதாக விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையிலும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தவேண்டும் என மனு அளித்தார். 

 

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், அருப்புக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண் காரத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் தேடுதலும் தீவிரப்படுத்தப்பட்டது.

 

வரிச்சியூர் செல்வம் கைதான பின்னணி இது:

 

காணாமல்போன செந்தில்குமாரின் செல் போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, வரிச்சியூர் செல்வத்திடமும், திருவான்மியூர் சாம் குமாரிடமும் பேசியது தெரியவந்துள்ளது. வரிச்சியூர் செல்வத்தின் தூண்டுதலினால் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதை சாம்குமார் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

 

How varichiyur selvam has been arrested by police
செந்தில்குமார்

 

வரிச்சியூர் செல்வத்துடன் பிரச்சனையானதால், அவரிடமிருந்து பிரிந்து விருதுநகரில் குடியேறிய செந்தில்குமார், சமாதானம் பேச அழைக்கப்பட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சென்னையில் ஆள் கடத்தல் அசைன்மெண்ட் ஒன்றை செந்தில்குமாரிடம் தந்த வரிச்சியூர் செல்வம், கூடவே இரண்டு நபர்களை அனுப்பி வைத்துள்ளார்.

 

வரிச்சியூர் செல்வத்தின் உள்நோக்கத்தை அறியாத செந்தில்குமாரை, உடன் சென்ற இருவரும் மாமல்லபுரம் திருவடந்தை காட்டேஜ் ஒன்றில் தங்கவைத்துள்ளனர். பிறகுதான் அந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். இரண்டுபேர் செந்தில்குமாரைத் திமிரவிடாமல் பிடித்துக்கொள்ள, ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். நடந்ததை எல்லாம் வாட்ஸ்-அப் காலில் வரிச்சியூர் செல்வத்துக்கு காட்டியுள்ளனர். அதன்பிறகு, செந்தில்குமாரின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து செந்தில் குமாரின் உடலை கம்பளியால் சுற்றி தூத்துக்குடி மாவட்டம் முரப்பநாட்டுக்கு எடுத்துவந்து தாமிரபரணி ஆற்றில் வீசியிருக்கின்றனர்.

 

How varichiyur selvam has been arrested by police

 

காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் செந்தில்குமார் கொல்லப்பட்டதை ஒத்துக்கொண்ட வரிச்சியூர் செல்வம், கொலைக்கான காரணத்தை இவ்வாறுதான் பதிவு செய்யவேண்டும் என்று கெஞ்சியிருக்கிறார். “என்னை மீறி செந்தில்குமார் வளர்ந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். எனக்கு துரோகமும் செய்தான். அதனால்தான், அவன் கொலை செய்யப்பட்டான்” என்று கூறியிருக்கிறார்.

 

செந்தில்குமார் கொலையை வரிச்சியூர் செல்வம் வாட்ஸ்-அப் காலில் பார்த்து ரசித்ததன் பின்னணியில் வலுவான சொந்த விவகாரம் ஒன்று இருக்கிறது. வரிச்சியூர் செல்வத்தின் உறவுகளில் ஒன்றை தொந்தரவு செய்ததாலேயே செந்தில்குமாரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இந்த உண்மையைப் பதிவு செய்துவிடவேண்டாம் என்பதே வரிச்சியூர் செல்வத்தின் கோரிக்கையாக இருந்திருக்கிறது.

 

ஆள் கடத்தல், கொலை செய்தல், சட்ட விரோதமாக உடலை மறைத்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வரிச்சியூர் செல்வம், 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Next Story

ரவுடிகள் வேட்டை; சரணடைந்த சாமி ரவி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
owdies hunting; Surrendered Sami Ravi

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்றதோடு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த என்கவுன்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் பிரபல ரவுடி சாமி ரவி சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுபவரும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவராகவும் உள்ள சாமி ரவி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் ராக்கெட் ராஜா உள்ளிட்ட பல்வேறு ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

ஜன்னல் வழியே வெளியான புகை; எரித்து கொல்லப்பட்ட மூவர்;காவல்துறை தீவிர விசாரணை

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Smoke from the window; Three were burnt to death

கடலூரில் ஒரே குடும்பத்தில் 3 பேரை கொலை செய்து உடல்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி, சுரேஷ்குமார் தம்பதியினர் சுரேஷ்குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி சர்க்கரை ஆலையில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 70 வயதான நிலையில் வயது மூப்பின் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இவர்கள் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ஜோதி  நகரில் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தற்சமயம் கமலேஸ்வரி அவரது மகன் சுகந்தகுமார், பேரன் இஷான் ஆகியோர் வசித்து வருகின்றனர். சுகந்த குமார் திருமணம் ஆகி சில வருடங்களிலேயே அவர் மனைவி பிரிந்து சென்று விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். சுகந்தகுமார் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி செய்து வரும் நிலையில் 15 நாட்கள் அலுவலகத்திலும் 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்து வந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் இருந்து  வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே தினம் கமலேஸ்வரி அவரது உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அவரும் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களின் வீட்டு வேலை செய்யும் பணி பெண் சனிக்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வெளி இரும்பு கேட் பூட்டி இருந்த நிலையில் அவர் மீண்டும் சென்றுள்ளார்.  அதன் பிறகு அவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரும் இரண்டு நாள் வேலைக்கு வரவில்லை.

திங்கட்கிழமை வீட்டின் ஜன்னல் பகுதியில் இருந்து லேசாக புகை வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார்  தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது, ஒவ்வொரு பகுதியிலும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் உடல்களை கண்டு அதிர்ந்து போன போலீசார் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர்.

Smoke from the window; Three were burnt to death

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரடியாக வந்து விசாரணை செய்தார். சுமார் 3 மணி நேரம்  விசாரணை செய்தார். அதில் வீட்டில் பணிபுரியும் பெண் மற்றும் உறவினர்கள் வீட்டைச் சுற்றியுள்ள பலரிடம் தனித்தனியாக விசாரணை செய்தார். விசாரணை மேற்கொள்ள  5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதல்கட்ட விசாரணையில் இது கொலையாக இருக்கும் என தெரிவித்தார். பின்னர் 3 பேர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3  பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் சுற்றுவட்டப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.