ADVERTISEMENT

களம் எப்படி? தென் மாவட்ட ஸ்கேன் ரிப்போர்ட்

10:41 AM Mar 18, 2019 | paramasivam


ADVERTISEMENT

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி தூத்துக்குடி என 6 சட்டமன்றங்களை உள்ளடக்கியது தூத்துக்குடி பார்லிமெண்ட் தொகுதி. அதன் சிட்டின் எம்.பி. அ.தி.மு.க.வின் நட்டர்ஜி. இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் சமூகம் முதன்மையாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர், பிள்ளை தேவர் யாதவர், மீனவர் என்று பலதரப்பட்ட மக்களைக் கலவையாகக் கொண்ட தொகுதி.

ADVERTISEMENT

வானம் பார்த்த பூமியான விளாத்திகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில், விளையக் கூடிய மானாவரிப் பயிர்களுக்கான விளைச்சலுக்குரிய நீரில்லாமலும், மழைக்காலங்களில் பொழிகிற தண்ணீரைக் கொண்டு ஒரளவு மானாவரியில் விளையும் உளுந்து, பாசிப்பயிறு, மிளகாய் போன்றவைகளுக்கு விலையுமில்லை. விவசாய வளர்ச்சியில்லை என்கிறார்கள் எட்டயபுரம் விவசாயிகள். அதே சமயம், ஒரளவு நிலத்தடி நீர் கொண்ட ஒட்டப்பிடாரம் ஏரியாவிலோ, மி்ன்விசை மூலம், நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார்கள் அதனை கேன்வாட்டர் என்று வியாபாரமாக்குவதால் அங்கும் விவசாயம் அற்று வி்ட்டது. கவனிப்பாரில்லை என்பதே குரலாக ஒலிக்கின்றன.

நகரின் வாழ்வாதாரமான தீப்பெட்டித் தொழிலை ஏரளமாகக் குடிசைத் தொழிலாகக் கொண்ட கோவில்பட்டி நகரில் இந்த உற்பத்தி தொழில் 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியால் நசிந்து போனது. அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வைக் கேள்வியாக்கியுள்ளது என்கிறார் நகரின் சி.பி.எம். கட்சியின் பிரமுகரான சீனி.

அடுத்து தூத்துக்குடி. இங்கு நான்காவது பைப் லைன் திட்டம் முடிவுடைந்த பிறகும் கூட தண்ணீர் தட்டுப்பாடு தீரவில்லை. வரும் கோடையில் நடக்கும் தேர்தலில், இது முக்கிய ஆயுதமாகும் என்கிறார்கள் இலைக்கட்சியினர். அதோடு நகரின் ஸ்டெர்லைட் ஆலை கிளப்பிய மாசுகளால் வியாதிக்கு ஆளான ஒட்டு மொத்த நகர மக்களும், அந்த வியாதியைப் போக்குகிற போராட்டத்தில் ஈடுபட்ட போது நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பலர் உடலுறுப்புகளை இழந்தனர், ஏராளமான மக்கள் போலீஸ், வழக்கு என சிக்கி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். வரலாற்றுச் சுவடுகளில் ரத்தச் சரித்திரமாக மாறவிட்ட இந்தச் சம்பவம், மக்களின் மனதில் வடுவாகவும் கல்வெட்டாகவும் பதிந்து விட்டதால், வரும் தேர்தலில் இந்தக் களம் அ.தி.மு.க.வுக்கு அலர்ஜியானதோடு கரையேறும் வாய்ப்பும் சந்தேகத்திற்குரியது என்பதால் அ.தி.மு.க. இங்கு போட்டியை சமார்த்தியமாகத் தவிர்த்து, பா.ஜ.க.விடம் பந்தைத் தள்ளி விட்டது என்கிற பேச்சும் மறுப்பதற்கில்லை. அதனை வலுப்படுத்துகிற வகையில், இங்கு பா.ஜ.க.வின் மாநில தலைவியான தமிழிசை சவுந்திராஜன் போட்டியிடுவார் என்கிற தகவலும் றெக்கை கட்டுகிறது.






அதே சமயம் தி.மு.க.வின் மாநிலங்களவையின் எம்.பி.யும் மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி தூத்துக்குடியைக் குறிவைத்து கடந்த ஒரு வருடத்திற்கும் முன்பாகவே வேலைகளை ஆரம்பித்து விட்டார். தான் தத்தெடுத்த தொகுதியின் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்திற்கு தொலை நோக்கு நிவாரணமான குடி தண்ணீர் திட்டத்திற்கு அடித்தளமைத்துக் கொடுத்திருக்கிறார். தொகுதியின் அனைத்து பகுதிகளின் ஊராட்சிசபைக் கூட்டம் வாயிலாக நகர, கிராமப்புற மக்களைச் சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டறிகிறார். கலைஞர் அரசு செய்த திட்டங்களைப் பட்டியலிட்டு அம்மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.

கிட்டதட்ட கனிமொழி எம்.பி. முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருக்கிறார் என்கிறார் தூத்துக்குடி நகர தி.மு.க.செ.வான ஆனந்த சேகரன்.

ரிமார்க்கெபிள் வி.வி.ஜ.பி. தொகுதியான தூத்துக்குடி களத்தின் செல்ஷியஸ், உயரத் தொடங்கியிருக்கிறது.


நெல்லை தொகுதி

அம்பை, ஆலங்குளம், பாளை, நாங்குனேரி, ராதாபுரம், திருநெல்வேலி என்று ஆறு சட்டமன்றங்களை உள்ளடக்கிய நெல்லை தொகுதியின் சிட்டிங் எம்.பி. அ.தி.மு.க.வின் பிரபாகரன். கல்வி, விவசாயம், பீடி சுற்றுதல் என்று கலவையான தொழில்களைக்கொண்ட இத்தொகுதி, நாடார், தேவர், பிள்ளை தாழ்த்தப்பட்ட சமூகத்தவர், யாதவர் என்ற விகிதாசார மக்கட்தொகையைக் கொண்டது. தேர்தலின் போது அ.தி.மு.க.வின் பிரபாகரன் கொடுத்த வாக்குறுதியான தொழிற்சாலை கிராமப்புற மக்களின் குடி தண்ணீர் பிரச்சினை உள்ளிட்டவைகளுக்குத் தீர்வு காணவில்லை. குறிப்பாக அம்பை, ஆலங்குளம், நெல்லை உள்ளிட்ட தொகுதிகளின் பீடி சுற்றும், அடிமட்டத் தொழிலாளர்களுக்கான படுக்கை வசதியுடன் கூடிய காச நோய் சிகிச்சைகளுக்கான மருத்துமனைகள் தேவைக்கேற்ப ஏற்படுத்தப்படவில்லை. கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக எம்.பி. தத்தெடுத்த பெத்த நாடார் பட்டிக் கிராமத்தைக் கை கழுவி விட்டார் என்கிறார்கள் ஆலங்குளம் வாசிகள், அவரது தொகுதி நிதி மேம்பாட்டுத்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, சில பணிகளைச் செய்திருக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள்.




இந்நிலையில் இத்தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டிய பா.ஜ.க.வின. மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தற்போது பின்வாங்கத் தொடங்கியிருக்கிறார். காரணம் தொகுதியில் கிறிஸ்தவ, முஸ்லிம் மதம் சார்ந்த மக்கள் அதிகமிருப்பதால் கரையேறுவது சிந்தனைக்குரியது என்பதே என்கிறார்கள். அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளியான மனோஜ்பாண்டியனும், தி.மு.க.வில் ஞானதிரவியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


தென்காசி. (தனி)

ஏறத்தாழ காங்கிரசின் எம்.பி.யும் அமைச்சருமான மறைந்த அருணாசலம் காலத்திற்கு முன்பிருந்தே அரை நூற்றாண்டாக தென்காசி, தனித் தொகுதியாக இருந்து வருவதும் சுழற்சி அடிப்படையில் பொதுத் தொகுதியாக மாற்றப்படாமலிருப்பது, மக்கள் பிரதிநிதி உரிமைக்காகக் காத்திருக்கும் பிற சமூகத்தவர்களை அதிருப்தியில் தள்ளியிருக்கிறது. தேர்தல் தோறும் இந்தக் கோரிக்கைகள் வலுப்பெற்றும் வருகின்றன.




சங்கரன்கோவில், கடையநல்லுர், வாசுதேவநல்லுர், தென்காசி, விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துர் போன்ற சட்டமன்றங்களை உள்ளடக்கிய தென்காசி தொகுதி, தொழிலில் பின் தங்கிய நகரங்களைக் கொண்டது. விவசாயம், பூ உற்பத்தி, விசைத்தறிதுணி உற்பத்தி, நூற்பு மில்களைக் கொண்ட கிராமப்புற நிலையிலிருக்கும் இத்தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான அ.தி.மு.க.வின் வசந்தி முருகேசன், வாக்குறுதிப்படி தொழில்சார்ந்த விஷயங்களை முன்னெடுக்கவில்லை. வேளாண் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான உற்பத்தியாகும் பூக்களைப் பதப்படுத்தி அதன் தரத்திற்கேற்ற விலையில் விற்கும்படியான சூழலுக்கு ஏற்ற பூக்கள் குளிரூட்டும், சென்ட்டர்கள் அமைக்கப்படவில்லை என்கிற கனவு, கருவிலேயே கருகிவிட்டது என்பதை நினைவு கூறுகிறார் புளியம்பட்டி கிராமத்தின் சுப்பையா.

இது போன்ற பலதரப்பட்ட தொழில் மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடக்கிய தென்காசி தொகுதியில் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான புதிய தமிழகத்தின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக தனுஷ் எம்.குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT