Skip to main content

‘எங்கள படிக்க வைப்பீங்களா சார்...?’ அழுத குழந்தைகளின் கல்விக்கு உதவிய காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள்- பண்ருட்டியில் நெகிழ்ச்சி!

 

help

 

'எங்கள ஏதேனும் ஒரு பாதுகாப்பான விடுதியில் தங்கவைத்துப் படிக்க வைப்பீர்களா?' எனக் காவல் நிலையத்திற்குச் சென்று உதவிகேட்டுள்ள (பெற்றோரை இழந்து தவிக்கும்) இரு குழந்தைகளுக்குக் காவல்துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் உதவ முன்வந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் பண்ருட்டியில் நடந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது மாளிகைமேடு. இந்த ஊரைச் சேர்ந்தவர் பாபு இவருடைய மனைவி லதா இவர்களுக்கு மூன்று பெண் குழந்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாபு, பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். சில மாதங்களிலேயே அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போய்விட்டார். பெற்றோரை இழந்த மூன்று பெண் பிள்ளைகளும் வயது முதிர்ந்த அவர்கள் பாட்டி செந்தாமரை பராமரிப்பில் இருந்து வந்தனர்.


பாட்டி செந்தாமரை தள்ளாத வயது. குழந்தைகளுக்காக உழைத்துச் சாப்பாடு போட முடியாத முதுமையும் வறுமையும் வாட்டியது. இந்த வறுமை கொடுமையை அவர்களால் தாங்க முடியவில்லை. பசி பட்டினி கிடந்து பார்த்த மூத்த பெண்பிள்ளை பாட்டியிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் திடீரென்று எங்கோ புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதன்பிறகு இரு பிள்ளைகளோடு ஜீவா (9-ஆம் வகுப்பு மாணவி), தர்ஷ்னி (6-ஆம் வகுப்பு) செந்தாமரை வறுமையின் கொடுமையில் போராடி வந்துள்ளார். குடிசையில் அந்த மூன்று ஜீவன்களும் தத்தளித்தனர். 


இந்நிலையில் இரு குழந்தைகளும் இரு தினங்களுக்கு முன்பு  காவல் நிலையத்தில் போய் நின்றார்கள். அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் ராஜ தீபன் அந்த இரு பெண் குழந்தைகளிடம், ‘என்ன விஷயமாக இங்கு வந்துள்ளீர்கள்?’ என்று அன்பாகக் கேட்டுள்ளார். அப்போது குழந்தைகள் இரண்டும் கூறிய வார்த்தைகள் அங்கிருந்த அனைத்துக் காவலர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. குழந்தைகள், தங்களது அப்பா அம்மா இறந்துபோனது பற்றியும் பாட்டி பராமரிப்பில் பசி பட்டினியோடு இருப்பது குறித்தும் கூறியுள்ளனர்.

 

மேலும் ‘பண்ருட்டி அரசுப் பள்ளியில் படித்து வருகிறோம். மேற்கொண்டு எங்களைப் படிக்க வைக்கவும் எங்களுக்காக உழைத்துச் சாப்பாடு போடுவதற்கும் பாட்டியால் முடியவில்லை அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கே மற்றவர் உதவி தேவைப்படும் நிலையில் அவரால் எங்களை வைத்துப் பராமரிக்க முடியவில்லை. தினமும் ஒரு வேளைகூட சரியான உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கிறோம். எங்கள் உயிரைக் காப்பாற்ற டீ கடையில் பன்னும் டீயும் பாட்டி கடனுக்கு வாங்கிக் கொடுப்பார். அதுதான் எங்களுக்குப் பல நாட்கள் உணவாக இருந்தது. எப்போதாவது அக்கம் பக்கத்தினர் சாப்பாடு கொடுப்பார்கள் அதை நானும் எனது தங்கையும் பங்கிட்டுச் சாப்பிடுவோம். உடுத்துவதற்குக் கிழிந்த உடைகள் மட்டுமே உள்ளன. அதையும் கையினால் ஊசி நூல் கொண்டு தைத்து தான் மாற்றி மாற்றி உடுத்திக் கொள்வோம். எனவே எங்கள் இருவரையும் எப்படியாவது ஒரு பாதுகாப்பான பள்ளி விடுதியில் சேர்த்து படிப்பதற்கு உதவி செய்யுங்கள்’ என்று இரு பெண் குழந்தைகளும் கெஞ்சிக் கேட்ட காட்சி காவல் நிலையத்தில் இருந்த அனைவரரையும் கண் கலங்க வைத்துவிட்டது.

 

help

 

’பாட்டியுடன் இருந்த அந்தக் குடிசையும் மழையிலும் காற்றிலும் பிய்ந்து உருக்குலைந்த நிலையில் உள்ளது. அப்பா அம்மா இருந்த வீட்டில் அப்பா பாம்பு கடித்து இறந்த பயத்தினால், அந்த வீட்டிலும் எங்களால் இருக்க முடியவில்லை. அவ்வப்போது உறவினர் வீட்டில் போய்த் தங்குவோம் அங்கேயும் எங்களுக்குத் தர்மசங்கடமான சூழ்நிலைதான் உள்ளது. யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கிறோம் ஏதேனும் ஒரு பாதுகாப்பான பள்ளி விடுதியில்  தங்க வைப்பீர்களா?’ என்று கண்ணீருடன் அந்த இரு பெண்குழந்தைகளும் கேட்டுள்ளனர். இதையடுத்து காவலர் ராஜ தீபன் அந்த இரு பிள்ளைகளுக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏர்படுத்தியதோடு அவர்களுக்குப் புது ஆடைகளும் அந்தப் பாட்டிக்கும் சேர்த்து நிவாரண உதவிகள் செய்து கொடுத்துள்ளார். 

 

இதுபற்றி அறிந்த பண்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் அந்த இரு பிள்ளைகளையும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு அவர்களுடைய கல்வி தொடர ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளார். 

 

இந்தச் சம்பவம் பத்திரிகை, ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது அதைப் படித்து பலரது மனம் நெகிழ்ச்சி அடைந்துள்ளது. அதன் பலனாக பெற்றோரை இழந்து தவிக்கும் அந்த மாணவிகள் ஜீவா, தர்ஷினி  ஆகிய இருவர் படிப்பதற்கு உதவி செய்வதற்கு முன் வந்துள்ளார் பண்ருட்டி நகரில் வள்ளி விலாஸ் தங்க நகைக்கடை உரிமையாளர் சரவணன். 

 

http://onelink.to/nknapp


அந்த இரு பெண் பிள்ளைகளின் படிப்பு, தங்கும் விடுதி செலவுகளையும் அவர்களுக்கு உடை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்ததோடு குழந்தைகளின் தந்தை பாபு பாம்பு கடித்து இறந்து விட்டதால் அரசு உதவித் தொகையாக கிடைக்கும் ஒரு லட்ச ரூபாயையும் விரைந்து பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சரவணன் உறுதியளித்துள்ளார். 


அதேபோல் பா.ப.ஒ.வி. அறக்கட்டளை நிறுவனர் வெள்ளையன் குழுவினர் மாணவிகளையும் பாட்டி செந்தாமரையும் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளனர் மனித மனங்கள் இன்னும் மரித்துப் போகவில்லை.

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்