ADVERTISEMENT

எடப்பாடியால் எம்மாம்பெரிய ஓட்டை! - பசுமைச்சாலை உள்விவகாரங்கள் பளிச்!

11:51 AM Jul 04, 2018 | Anonymous (not verified)

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தால், நாளொரு மேனியும் பொழுதொரு போராட்டமுமாக அல்லல்பட்டு வருகிறார்கள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் நிலஅளவீடு செய்யும்போது தடுக்கும் விவசாயிகளின் குமுறலும், அங்கங்கே வெடிக்கும் போராட்டங்களும் கண்ணுக்குத் தெரிபவை. அதேநேரத்தில் சுய ஆதாயத்துக்காக மக்களைத் திட்டமிட்டு நசுக்கும் உள்விவகாரங்களும் இருக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம்!

ADVERTISEMENT

ADVERTISEMENT

உளவுத்துறை உக்கிரம்!

‘மோடியின் திட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யார் தலையிட்டாலும் கண்டுகொள்ள வேண்டாம்’ என்று மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் முழு அதிகாரம் தந்து முடுக்கிவிட்டிருக்கிறது முதல்வர் அலுவலகம். அதனால் போராட்டம் பெரிய அளவில் வெடித்துவிடக் கூடாது என்ற திட்டத்தோடு ஐந்து மாவட்டங்களிலும் உளவுத்துறை டீம் உக்கிரமமாக களமிறக்கப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் நிலஅளவீடு செய்வதற்கு வரும் வருவாய்த்துறையினரையும், காவல்துறையினரையும், மக்களின் மனநிலைக்கு ஏற்ப வழிநடத்துகின்றனர். போராட்ட களத்தில் முன்னணியில் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் எல்லாவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தி பின்வாங்கச் செய்கின்றனர். ‘உடன்படவில்லையென்றால் (பொய்) வழக்குதான்’ என்று மிரட்டவும் செய்கின்றனர்.


நிலஅளவீட்டை எதிர்க்கும் மக்களோடு கைகோர்த்து நின்றார் ஏற்காடு அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜானகிராமன். உளவுத்துறையினர் அவரைச் சரிக்கட்டி, ‘ஆளும் கட்சியில் இருக்கும் நீங்க எப்படி போராடலாம்? உங்க நிலத்துக்கு ஒரு பாதிப்பும் வராமல் நாங்க பார்த்துக்கொள்கிறோம்.’ என்று கூறி, அவர் நிலத்திலிருந்து 20 மீட்டர் தள்ளி நிலஅளவை செய்வதற்கு வழிவகுத்து தந்திருக்கின்றனர். எதிர்க்கட்சியான திமுக எட்டு வழிச்சாலைக்கு எதிராக அரசியல் பண்ணுவதற்கு முயன்றால், அக்கட்சியை அடக்குவதற்கு துருப்புச்சீட்டு ஒன்றைக் கையில் வைத்திருப்பதாகச் சொல்லும் உளவுத்துறையினர் “2001-2006 காலக்கட்டத்தில், திருவண்ணாமலை திமுக எம்.எல்.ஏ.வாக பிச்சாண்டி இருந்தபோது, புதிய சாலை ஒன்று போட வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதை இப்போது எடுத்துவிடுவோம்.” என்கின்றனர்.

வெறுப்புக்கு ஆளான முத்தான மூன்று ஆட்சியர்கள்!

மாவட்ட ஆட்சியர்களான, சேலம் - ரோஹிணி, திருவண்ணாமலை - கந்தசாமி, தர்மபுரி - மலர்விழி ஆகியோரின் மக்கள் சார்ந்த நடவடிக்கைகளை ‘ஸ்டண்ட்’ என்று ஒரு தரப்பினர் கலாய்த்தாலும், இன்னொரு தரப்பு ‘இவரல்லவோ கலெக்டர்!’ என்று பாராட்டவே செய்கிறது. எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே ‘மக்களோடு எப்போதும் தொடர்பில் உள்ள ஆட்சியர்கள்’ என்று பெயர் வாங்கியிருக்கும் இவர்கள் மூவரையும் முன்கூட்டியே திட்டமிட்டு குறிப்பிட்ட இந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் ஆக்கியிருப்பார்களோ என்று வருவாய்த்துறை வட்டாரமே சந்தேகம் கிளப்புகிறது. அதுபோலவே, ‘இந்த கலெக்டர் மக்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார்’ என்ற மக்களின் நம்பிக்கையை இந்த திட்டத்தின் மூலமாக அறுவடை செய்துவிட துடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனாலும், ஒரு ஹெக்டேர் நிலத்துக்கும், ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் உரிய இழப்பீடு கிடைக்கும் என, பேட்டியின் வாயிலாக, விவசாயிகளின் மனதைக் கரைத்திடும் நோக்கத்தோடு ஆட்சியர்கள் மூவரும் ஆர்வத்துடன் அறிவித்திருக்கும் தொகையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அதனால் கொஞ்சநஞ்சம் உள்ள நல்ல பெயரையும் இழந்து விவசாயிகளின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் இந்த ஆட்சியர்கள்.



“திட்டத்தை ஒப்புக்கு எதிர்த்தால் போதும்!” - பா.ம.க.வினருக்கு எஸ்.பி. அட்வைஸ்!

பா.ம.க. அறிவித்தபடி கருத்து கேட்பு கூட்டங்களை அன்புமணியால் நடத்த முடியவில்லை. அனுமதி மறுத்த காவல்துறையினரிடம் பா.ம.க. நிர்வாகிகள் விளக்கம் கேட்க, “இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடிவு செய்துவிட்டது தமிழக அரசு. எந்தப் போராட்டத்தாலும் இதைத் தடுக்க முடியாது. முதலமைச்சர் தரப்பிலிருந்தே எந்தப் போராட்டத்தையும் அனுமதிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்” என்று கூறியபோது, “திருவண்ணாமலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவற்கு அனுமதி தந்தீர்கள்? பாரபட்சம் காட்டுவது ஏன்?” என்று பா.ம.க.வினர் குறுக்கிட்டிருக்கின்றனர். உடனே, திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி “திமுகவினர் நடத்தியது ஆர்ப்பாட்டம். பா.ம.க. நடத்தப்போவதாக அறிவித்திருப்பது கருத்து கேட்பு கூட்டம். இதை நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால்தான் அனுமதி இல்லை. திட்டத்தை எதிர்க்கிறோம். விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்று காட்டிக்கொள்ள விரும்பினால் மற்ற கட்சிகளைப் போல ஒப்புக்கு போராட்டம் நடத்திட்டுப் போங்க. உங்களை யாரும் தடுக்க மாட்டாங்க. சரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்திக்கங்க.” என்று அனுமதி தர போளூரில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார் அன்புமணி.



இழப்பீடை குறைப்பதற்காகவே அடக்குமுறை!

பசுமைச்சாலை திட்டத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள 286 பக்கங்களைக் கொண்ட சாத்தியக்கூறு அறிக்கையில், ரூ.3002 கோடியே 91 லட்சத்து 68 ஆயிரம் வரை இழப்பீடாக தரமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீடாக இவ்வளவு பெரிய தொகை தருவதா? என்று ஆதாயக் கணக்கு பார்த்த மேலிடம் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவியிருக்கிறது. இதன்மூலம், இழப்பீடு தொகையை வெகுவாக குறைத்துவிட முடியும் என்பதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கிறது. ‘எல்லாம் கொடுத்துவிட்டோம்’ என்று கணக்கு காட்டி அதன் பலனை, மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளவர்கள் பங்கு பிரித்துக்கொள்ளும் திட்டமும் இருக்கிறது.

“எடப்பாடியால் எல்லாம் போய்விட்டது!” - புலம்பும் ஆளும் கட்சியினர்!

ஒரு காலத்தில் தினகரனுக்கும் எடப்பாடிக்கும் பாலமாக இருந்த ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் “கொங்கு மண்டலத்தில் மட்டுமே எடப்பாடிக்கு செல்வாக்கு இருந்தது. இந்த பசுமைச்சாலை திட்டத்தால் அதுவும் போய்விட்டது. உண்மை நிலவரம் என்னவென்றால், மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் அதிமுக வாக்கு வங்கி பெருமளவில் சிதைந்துவிட்டது. சுயலாபத்துக்காவே பசுமைச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுகிறார் எடப்பாடி என்பதை அடித்தட்டு மக்கள் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த அதிருப்தியால், காஞ்சிபுரத்திலிருந்து சேலம் வரையிலும் அதிமுக வாக்கு வங்கியில் மிகப்பெரிய ஓட்டையே விழுந்துவிட்டது. ஆனாலும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார் எடப்பாடி. பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 30 என்ற நம்பிக்கை வேறு அவருக்கு இருக்கிறது. அவர் போகிற போக்கைப் பார்க்கும்போது நாற்பதுக்கு நாற்பதும் நமக்கு இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.” என்று வேதனையுடன் கூற அருகில் இருந்த அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் இருவர் தலையாட்டியிருக்கின்றனர்.



ஐந்து மாவட்ட மக்களின் உணர்வுகளை துளியும் மதிக்காமல் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் என்ற விமர்சனத்தைக் கண்டுகொள்ளாமல், பசுமைச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது எடப்பாடி அரசு!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT