Skip to main content

வேலூர் சிப்பாய் புரட்சியின் வரலாறும்; ஆளுநர் கருத்தும்!  

History of Vellore Sepoy Revolution; The governor's opinion!

 


ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முறையாக சுதந்திர புரட்சி நடந்த வேலூர் சிப்பாய் புரட்சியின் நினைவு தினத்தினை ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 10ஆம் தேதி, அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது.  

 

2022ஆம் ஆண்டு 216வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்த தமிழக ஆளுநர் ஆர்,என். ரவி, வேலூர்க்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.  இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “இந்திய சுதந்திர போருக்கு முதன் முதலில் வித்திட்ட 1806ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி வேலூரில் தான் துவங்கியது. இந்த புரட்சி ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேற பலர் இன்னுயிர் தியாகம் செய்து ரத்தம் சிந்தி கிடைத்தது.

 


ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியின் மூலம் பிரித்துவிட்டனர். குறிப்பாக வடக்கே ஆரியர்கள், தெற்கே திராவிடர்கள் எனப் பிரித்தனர். திராவிடம் என்பது மகாராஷ்டிரா, குஜராத்தில் ஒரு பகுதி, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடக, கேரளா போன்றவைகள் பூகோள ரீதியாக பிரித்தது தான் திராவிடம். ஆனால் இன ரீதியாக பிரிக்கப்பட்டதாக ஆங்கிலேயர்கள் தவறான வரலாற்றை பதிவு செய்துவிட்டனர்” எனப் பேசியுள்ளார்.

 


ஆங்கிலேயர்கள் வரலாற்றை திரித்தார்களா என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது. ஆனால் இந்தியச் சுதந்திரத்துக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட இந்திய வரலாற்றில், குறிப்பாக சுதந்திர போராட்ட வரலாற்றில் தென் இந்தியாவின் வரலாற்றை இரட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் அவ்வப்பொழுது வேதனை தெரிவித்துவந்தனர். இந்த வேலூர் சிப்பாய் புரட்சியும் அதில் ஒன்று. 

 


இந்தியா முழுமையும் தன் ஆதிக்கத்தின் கீழ் வரவேண்டுமென்றால் மைசூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த திப்புசுல்தானை, கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் படை தோற்கடித்தால் மட்டுமே முடியும். 1799ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தான் படைக்கும் - பிரிட்டிஷ் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. போரின் முடிவில் திப்புசுல்தான் கொல்லப்பட்டார். இது தென்னிந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திப்புவின் கட்டுப்பாட்டில் இருந்த பாளையக்காரர்கள், குறுநில மன்னர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் செயல்பட விரும்பாமல் பிரிட்டிஷ் படையை எதிர்த்தனர். 

 


திப்புவின் மகன்களுக்கு ஆதரவு தந்தனர். இதனால் திப்புசுல்தானின் மகன்களும் இளவரசர்களுமான  படேல் ஹைதர், அப்துல் தாலிக், மொகைதீன், மைசுல்தீன், முகமதுயாசில், முகமதுசுபான், ஷேக்கர் அல்லா, சிராசுதீன், இமாலுதீன் உள்ளிட்டோரும் அவரது குடும்பமும், நெருங்கிய உறவினர்களின் குடும்பத்தை மைசூர் அரண்மனையில் இருந்து வேலூரில் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பான கோட்டையில் கொண்டு வந்து வீட்டுச்சிறை வைத்தனர். திப்பு குடும்பத்துக்கான பாதுகாப்பு அதிகாரி என்கிற பெயரில் சிறை அதிகாரியாக லெப்டினெண்ட் கர்னல் மேரியேட் இருந்தார்.

 


பிரிட்டிஷ் கிழக்கந்திய கம்பெனி, இந்திய இராணுவத்தில் பணியாற்றும் இந்து – இஸ்லாமிய வீரர்கள் மத ரீதியிலான உடை, உருவ அமைப்பில் இருக்கக்கூடாது என கட்டுப்பாடுகளை விதித்தது. இது வீரர்களிடம் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. இதனை வெளியே இருந்த திப்புசுல்தானின் ஆதரவு குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர். பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலை போராட்டத்தை வேலூர் கோட்டையிலிருந்து தொடங்கலாம் என முடிவு செய்தனர்.

 


அப்போது பிரிட்டிஷ் படை வேலூரின் கிழக்கே 30 கி.மீ தொலைவில் உள்ள ஆற்காடு நகரில் படைத்தளம் இருந்தது. கோட்டையில் புரட்சி தொடங்கி, அந்த தகவல் அங்கு சென்று அங்கிருந்து படை வருவதற்குள் கோட்டையை தங்கள் வசப்படுத்த வேண்டும், ஆயுதக்கிடங்கை கைப்பற்ற வேண்டும், இதை செய்தால் வெற்றி பெறலாம், நம் மண்ணை நாமே ஆட்சி செய்யலாம் என்பதே திப்பு ஆதரவாளர்களின் திட்டம். இதனை பிரிட்டிஷ் படையிலிருந்த இந்திய வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். கோட்டைக்கு வெளியே திப்புவின் ஆதரவாளர்கள் சுதந்திர போருக்காக மக்களை திரட்டினர்.

 


1806 ஜூலை 10 ம் தேதி அதிகாலை 2 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் அணிவகுத்து சென்று ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். இந்திய சிப்பாய்கள் மீது மத கட்டுப்பாடுகளை விதித்த கர்னல் மிக்கிராங் சுட்டுக்கொல்லப்பட்டார். மூன்றே மணிநேரத்தில் புரட்சியாளர்கள் கோட்டையை கைப்பற்றினர். திப்புவின் புலிக்கொடியை கோட்டையில் ஏற்றினர். அடுத்த சிலமணி நேரத்தில் ஆற்காட்டிலிருந்தும் மற்ற பகுதிகளில் இருந்தும் வந்த ஆங்கிலேயப் படை வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றியது. இந்த சண்டையில் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட மூவாயிரம் புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சிப்பாய்களுக்கு ஆங்கிலேய அரசு மரண தண்டனை வழங்கியது. இனி புரட்சி, சுதந்திரம் என்கிற குரல்கள் எங்கும் கேட்கக் கூடாது என்கிற முடிவில் தண்டனை மிகக் கொடூரமாக வழங்கப்பட்டது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

 


வேலூர் புரட்சி நடைபெற்று 51 ஆண்டுகளுக்கு பின்பு மீரட் நகரில் 1857ல் கிழக்கிந்திய கம்பெனி படை வீரர்களுக்கு எதிராக நடைபெற்ற சிப்பாய் கலகத்தையே ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற முதல் சுதந்திரப்போர் என எழுதி வரலாற்றை திரிபு செய்தனர் சில வரலாற்று ஆய்வாளர்கள்.  மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட இந்த வரலாற்றை தமிழக முதல்வராக இருந்த கலைஞர், 2006ஆம் ஆண்டு இந்திய தபால் துறையின் சார்பில் அஞ்சல்தலை வெளியிட வைத்து மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிப்படுத்தினார்.

 


வேலூர் மாநகரின் மையப்பகுதியில் கோட்டைக்கு எதிரே புரட்சியில் ஈடுபட்டு மரணத்தை தழுவிய இந்திய வீரர்களை கவுரவிக்கும் பொருட்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் அதற்கு மரியாதை செலுத்தப்படுகிறது. 2022 ஜூலை 10ந் தேதி, வேலூரில் சிப்பாய் புரட்சி நடந்த 216வது ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய ஆளுநர், திராவிடம் – ஆரிய வரலாற்றை ஆங்கிலேயர்கள் செய்தார்கள் என்று பேசியிருப்பது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.