Skip to main content

சீன அதிபர் சென்னையில் சந்தித்த எதிர்ப்பு..! தகிக்கும் ஆதிக்க வரலாறு...

சீன பிரதமரின் இந்திய வருகையின் போது அவரை எதிர்த்து திபெத்தை சேர்ந்த ஒரு கூட்டம் தமிழகத்தின் ஒரு மூலையில் போராட்டம் நடத்தி கைதாகிறது. இப்படி நாடுவிட்டு நாடு வந்திருக்கும் ஒரு அதிகாரமிக்க நபரை எதிர்த்து, ஒரு சிறிய நிலப்பரப்பின் மக்களை போராட தூண்டியது எது..? சீனாவின் அதிபரை எதிர்த்து திபெத்தியர்கள் ஏன் போராட வேண்டும்..? தலாய்லாமா தனது சொந்த நாட்டை விடுத்து இந்தியாவில் தஞ்சம் புக காரணம் என்ன..? திபெத் தனி நாடா..? அல்லது சீனாவின் ஒரு பகுதியா..? இப்படி திபெத்தை பற்றிய கேள்விகள் அனைத்திற்குமான பதிலிலும் இடம்பெற்றிருக்கும் பெயர் சீனா. பௌத்த மதம் தழைத்தோங்கும் திபெத் கடந்த 70 ஆண்டுகளாக சீனாவுக்கு எதிரான தனது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. திபெத்தின் இந்த நீண்ட நெடிய போராட்டமானது 1950 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது எனலாம்.

 

history of tibet china conflict

 

 

1571 ஆம் ஆண்டு முதல் திபெத்தின் அரசியல் மற்றும் மதரீதியிலான விவகாரங்களை நிர்வகித்து வந்தவர்கள் தலாய்லாமாக்கள் என அழைக்கப்பட்டனர். அந்த வரிசையில் வந்த 14 ஆம் தலாய்லாமா தான் தற்போது இந்தியாவிலிருந்து திபெத் பகுதியின் உரிமைக்காக போராடி வருகிறார். பௌத்த மதத்தை பின்பற்றும் திபெத் மக்களின் நம்பிக்கைப்படி தலாய்லாமா உடல் அழிந்தாலும் அவரது மறுபிறப்பு மூலம் தங்களை தொடர்ந்து வழிநடத்துவார் என நம்புகின்றனர். பல நூற்றாண்டுகளாக திபெத் மக்கள் தேர்ந்தெடுத்த தலாய்லாமாக்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாதவர்களே. தங்களை வழிநடத்த போகும் தலாய்லாமாவை தேர்ந்தெடுக்க அந்நாட்டு மக்கள் பின்பற்றும் வழக்கம் அவர்கள் நம்பிக்கை சார்ந்ததாகவும், சுவாரசியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. 

பொதுவாக ஒரு தலாய்லாமா இறந்த பிறகே அடுத்த தலாய்லாமாவுக்கான தேடுதலை திபெத்தில் உள்ள மத குருக்கள் தொடங்குவார்கள். ஒரு தலாய்லாமா இறந்து அவரது சிதைக்கு தீயூட்டும் போது, அதன் புகை செல்லும் திசையில் உள்ள திபெத்திய நிலப்பரப்பில் தான் அடுத்த தலாய்லாமா பிறப்பார் என்பது திபெத்தியர்கள் நம்பிக்கை. சுமார் 500 ஆண்டுகளாக இவ்வாறே அந்நாட்டில் தலாய்லாமாக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். புகை சென்ற திசையில் தலாய்லாமாவின் இறப்புக்கு பின் பிறக்கும் குழந்தை தலாய்லாமாவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. பல வித சோதனைகளுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் அந்த குழந்தைக்கு பல ஆண்டுகள் பயிற்சியளிக்கப்பட்டு இறுதியில் தலாய்லாமாவாக பதவியளிக்கப்படுகிறது. 

 

history of tibet china conflict

 

7 ஆம் நூற்றாண்டில் தனி சாம்ராஜ்யமாக இருந்த திபெத் பின்னாளில் கிழக்கு ஆசியாவை ஆண்ட குயிங் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக மாறியது. இந்த பேரரசின் ஆளுகையில் இருந்த போது தான் திபெத்தின் ஆட்சிக்கு துணைபுரிய தலாய்லாமாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்படி காலம் காலமாக தலாய்லாமாக்கள் ஆண்டுவந்த திபெத் பகுதி குயிங் வம்சத்தின் வீழ்ச்சிக்கு பிறகு 1913 ஆம் ஆண்டு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. முறையான அரசு அமைப்புடன், தலாய்லாமா நிர்வாகத்தின் கீழ் ஆட்சி நடந்து வந்த திபெத்தை 1950 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது சீனப்படை. அந்த நேரத்தில் பதின்பருவத்திலிருந்த தற்போதைய தலாய்லாமா இந்த சூழலை சரியாக கையாள முடியாத நிலையில் தவித்தார். இந்த சூழலில் திபெத்தை கைப்பற்றிய சீனப்படை அங்கு மோசமான அடக்குமுறைகளை கையாண்டதாக திபெத் மக்கள் இன்று வரை சீனா மீது குற்றம்சாட்டி வருகின்றனர். 

சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், திபெத் ஒரு தனி சுதந்திர நாடு என்றும் கூறி திபெத்தியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக சீனப்படை 17 அம்சங்கள் கொண்ட உடன்படிக்கை ஒன்றை 1951-ல் திபெத் அரசுடன் மேற்கொண்டது. அதன்படி திபெத்தில் சீனப்படை கட்டுப்பாடுகளற்ற அதிகாரத்தை பெற்றது. திபெத்தின் பல பிரபுக்களும், பாட்டாளிகளும் சீனப்படைக்கு ஒத்துழைத்தாலும், நில சீர்திருத்தங்களாலும், புத்த மதம் தொடர்பான சண்டைகளாலும் பல வன்முறைகள் வெடித்தன. 1959 வரை பல போராட்டங்களை மேற்கொண்டும், அவை எந்தவித பலனையும் அளிக்காத சூழல் அப்பகுதி மக்களை விரக்தியின் உச்சகட்டத்திற்கே கொண்டுசென்றது எனலாம். இப்படிப்பட்ட சூழலில் தான் தலாய்லாமா உயிருக்கு ஆபத்து நிலவுவதாக திபெத்தில் தகவல் பரவியது. இதனால் தூண்டப்பட்ட மக்கள் 1959, மார்ச் 10 அன்று தலாய்லாமா வசிக்கும் லாஸா வீட்டின் அருகே ஒன்றுகூடினர். தலாய்லாமா நாட்டைவிட்டு தப்பிக்க வழி செய்து சீனப்படைகளை எதிர்த்து கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். 

 

history of tibet china conflict

 

இந்த சண்டையை சீன ராணுவம் தனது அசாத்திய படைபலத்தால் அடக்கினாலும், தலாய்லாமா தப்பித்து இந்தியா வருவதை அவர்களால் தடுக்க முடியவில்லை என்றே கூறலாம். அதற்கான மிக முக்கிய காரணம், திபெத் மக்கள் தங்கள் தலைவரை தப்பிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகளே. 1959 மார்ச் 30 ஆண்டு தலாய்லாமா இந்தியாவிற்கு தப்பி வந்தார். இதன்பிறகு இந்தியாவிலிருந்தபடியே அவர் திபெத் அரசை நிர்வகித்து வருகிறார். ஆனால் திபெத் தனிநாடு இல்லை எனவும், தங்களுடைய நாட்டின் ஒரு பகுதிதான் எனவும் இன்றுவரை சீனா கூறி வருகிறது. ஆனால் திபெத்தியர்களோ சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது எனவும், திபெத் தனி நாடு தான் எனவும் கூறி சீனாவை எதிர்த்து வருகின்றன. இதற்கான போராட்டங்கள் இன்றளவும் திபெத்தில் தணலாக தகித்துக்கொண்டே தான் இருக்கிறது. 

சீனாவை சுதந்திர நாடக அங்கீகரிக்க வேண்டுமெனவும், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமெனவும் திபெத் மக்கள் போராடி வருகின்றனர். மிக மோசமான படிப்பறிவு விகிதம், சுகாதாரமற்ற சூழல், ராணுவ அடக்குமுறைகள் என பல இன்னல்களை சந்தித்துவரும் திபெத் பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட சீன அரசின் அனுமதியில்லாமல் செல்ல முடியாது என்பதே அப்பகுதியின் இன்றைய நிலையாக உள்ளது. பத்திரிகையாளர்கள், வெளிநாட்டினர் என யாரும் எளிதில் செல்ல முடியாத அளவு,  தனது அதிகார அரணால் அப்பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட ரகசியமாகவே பாதுகாத்து வருகிறது சீனா. இதனை எதிர்த்து பல லட்சம் மக்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் 130 திபெத்தியர்கள் தீக்குளித்துள்ளனர் என்பதே இப்போராட்டத்தின் வீரியத்தை நமக்கு உணர்த்துகிறது. 

 

history of tibet china conflict

 

திபெத்தியர்களின் இந்த நீண்ட நெடிய 70 ஆண்டுகால போராட்டத்தின் தாக்கமே சென்னையிலும் தற்போது எதிரொளித்துள்ளது எனலாம். திபெத் தனி நாடக அறிவிக்கப்படுவது, தலாய்லாமா நாடு திரும்புவது, அடக்குமுறைகளில் இருந்து மீள்வது என திபெத்தியர்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும், முடிவுகளை அறிவிக்கவும் கூடிய அதிகாரத்தில் தற்போது இருப்பவர் ஜி ஜின்பிங். இந்த ஒற்றை காரணமே இந்த போராட்டத்திற்கு போதுமானதாக திபெத்தியர்கள் பார்வையில் பார்க்கப்படுகிறது.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்