Skip to main content

எம்ஜிஆர் Vs கலைஞர்; இடையில் ராமதாஸ்! - அரசியலின் நெருப்பு நிமிடங்கள்!

Published on 24/03/2021 | Edited on 25/03/2021

 

History of 1989 tamilnadu assembly election

 

அது எண்பதுகளின் இளமைக் காலம். அமெரிக்காவில் படுத்துக்கொண்டே ஆண்டிப்பட்டியில் ஜெயித்த எம்ஜிஆர் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கெண்டார். உடல் நலக்குறைவால் எம்ஜிஆரும் உட்கட்சிப் பிரச்சனையால் அதிமுகவும் பலமிழந்து காணப்பட்ட சமயம் அது. ஜெயலலிதாவின் செல்வாக்கு கட்சியின் மேல்மட்டத் தலைவர்களிடையே அதிருப்தி புயலைக் கிளப்பியிருந்தது. இலங்கைக்குச் சென்ற இந்திய அரசின் அமைதிப்படை, விடுதலைப் புலிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுடன் சண்டமாருதம் செய்துகொண்டிருந்தன.

 

இதற்கிடையே, நகர்மன்றத் தேர்தலில் திமுக பெற்ற அபார வெற்றி அதிமுகவின் கோட்டையில் பொத்தல் போட்டது. திடுதிப்பென, சட்டமன்ற மேலவையைக் கலைத்த எம்.ஜி.ஆர் அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இட ஒதுக்கீடு கோரி, வன்னியர் சங்கத் தலைவர் ராமதாஸ் தலைமையில், வட மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திடீரென சாலையில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. நிலைமை கைமீறிப் போவதாக உணர்ந்த அதிமுக அரசு, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இட ஒதுக்கீடு குறித்து வன்னியர் சங்கத் தலைவர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய எம்ஜிஆர், முடிவு எட்டப்படும் முன்பே உடல்நலக் குறைவால் காலமானார். தமிழகம் கண்ணீரில் குளித்தது. அடுத்தடுத்த பரபரப்புகளால் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட சமயம் பார்த்துக்கொண்டிருந்ததனர். அதற்குள் 1989 தேர்தல் பேச்சு எழத் தொடங்கியது. 

 

தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக ஜொலித்த எம்.ஜி.ஆர் மறைந்து போன நிலையில், 'ஜெ', 'ஜா' என அதிமுக இரண்டு அணிகளாகப் பிளந்தது. அதிமுக நிர்வாகிகள் எந்தப் பக்கம் செல்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர். அண்ணா காலத்தில் இருந்து 'நம்பர் 2'-வாக இருக்கும் நாவலர் நெடுஞ்செழியன் இழந்த வாய்ப்புகளை இப்போது பிடித்துவிட முயன்றார். எம்.ஜி.ஆரின் மறைவையொட்டி ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற பகீரத முயற்சிகளை மேற்கொண்டார் இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன். அதற்கு, ஜெயலலிதா பக்கபலமாக துணை நின்றார். இருப்பினும் அப்போதைய ஆளுநர் குரானா, ஜானகி ராமச்சந்திரனை முதல்வராகப் பொறுப்பேற்க அழைத்தார். அப்போது, 'ஏன் நெடுஞ்செழியனை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை?' என ஜெயலலிதா எதிர்க் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர் குரானா, "நெடுஞ்செழியன் என்னிடம் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை தரவில்லை அதுபோக அவர் என்னைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுமில்லை" என்றார். மேலும், முதல்வர் ஜானகியை, விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லியிருந்தார் ஆளுநர். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், ஜானகி தலைமைக்கு ஆதரவு அளிக்கும் எனப் பரவலாக பேச்சு எழுந்தது. ஆனால், இந்தப் பிளவைப் பயன்படுத்திக்கொண்டு கைநழுவிச் சென்ற செல்வாக்கை மீண்டும் பெற நினைத்த காங்கிரஸ், யாருக்கும் ஆதரவு அளிக்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்து. மற்றொரு பிரதான கட்சியான திமுகவும் யாருக்கும் ஆதரவு இல்லை எனச் சொல்லிவிட்டது.

 

சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின்போது, ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே பயங்கர சச்சரவு ஏற்பட்டது. ஒருவழியாக, வாக்கெடுப்பில் ஜானகி அணி வெற்றிபெற்றபோதும், சச்சரவு காரணமாக ஆளுநர் குரானா, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். ராஜீவ்காந்தியின் மத்திய அரசு ஜானகி அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. ஓராண்டுக்குப் பிறகு, 1989 ஜனவரி 21, சட்டமன்றத் தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டது. அதிமுக பிளவுண்டதால், கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது. 'ஜா' அணிக்கு இரட்டைப் புறாவும், 'ஜெ' அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதிமுகவில் குழப்பங்கள் குடியேறியபோது, திமுக உற்சாக உற்சவத்தில் தேர்தல் களம் புகுந்தது. தனது ஆட்சியைக் கலைத்த காங்கிரசுக்கு பாடம் புகட்ட தரமான வெற்றியைப் பதிவுசெய்யும் முயற்சியில் ஜானகி எம்ஜிஆர் இறங்கினார். கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றும் முனைப்பில் ஜெயலலிதா தீவிரமாகப் பணியாற்றினார். இந்த நிலையில் இரண்டு முக்கிய சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சித் தொடங்கினர். ஒன்று, எம்ஜிஆரின் (சினிமா) போட்டியாளரான சிவாஜிகணேசன். மற்றொன்று, எம்ஜிஆரின் கலையுலக வாரிசான பாக்யராஜ். அவ்வளவுதான் வீதியெங்கும் கட்சிக் கொடிகள், கரைவேட்டிகள், கவரும் பிரபலங்கள்.  தேர்தல் களம் கொதித்தது.

 

எம்ஜிஆர் மனைவி ஜானகி எம்ஜிஆர்க்கு (நம்பிக்கை வாக்கெடுப்பில்) ஆதரவாக வாக்களிக்காத காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்தார் சிவாஜிகணேசன். இதனால், காங்கிரசில் இருந்து வெளியேறி, 'தமிழக முன்னேற்ற முன்னணி' எனும் கட்சியை உருவாக்கி ஜானகி அணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். காங்கிரசில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் உட்பட 5 எம்எல்ஏக்கள் சிவாஜியுடன் தனிக்கட்சி கண்டனர். ஜானகிக்காக பிரசாரம் செய்வார் எனக் கருதப்பட்ட பாக்யராஜ், எ.வ.வேலு உள்ளிட்ட சிலருடன் 'எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' எனும் கட்சியைத் தொடங்கினார். அதேசமயம், 'காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம்' என தனித்துக் களமிறங்கியது காங்கிரஸ். பத்தாண்டுகளுக்கு மேலாக எதிர்க்கட்சியாகக் கோலோச்சிய திமுக, ஆட்சியைப் பிடிக்க மின்னல் வேகத்தில் பணியாற்றியது. "தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களின் பிரச்சனை தீர்க்கப்படும்" என்றார் கலைஞர். ஆனால், வன்னியர் சங்கத் தலைவர் ராமதாசோ, "அறவழியில் போராடினால் சுட்டுக் கொல்வார்கள். இத்தனை ஆண்டு காலமாக எங்கள் பிரச்னைகளுக்கு நியாயம் தேடாதவர்களுக்கு மீண்டும் ஓட்டுப் போடமாட்டோம். தேர்தல் பாதை திருடர் பாதை" எனச் சொல்லி தேர்தலைப் புறக்கணித்தார்.

 

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஜானகி அணியுடன் சிவாஜி கட்சி இணைந்து போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. திமுக தலைமையில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம், முஸ்லீம் லீக் (அப்துல் லத்தீஃப்) ஆகிய கட்சிகள் கரம் கோர்த்தன. ஜெயலலிதா அணியுடன் இந்திய கம்யூனிஸ்ட் இணைந்தது. தனித்துக் களமிறங்கிய காங்கிரஸ், அம்பேத்கர் மக்கள் இயக்கம், முஸ்லீம் லீக்(அப்துல் சமது) உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொண்டது. திமுக 179 இடங்களில் போட்டியிட்டது. சிபிஐ(எம்)க்கு 20 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. அ.தி.மு.கவின் ஜானகி அணி 175 இடங்களில் போட்டியிட்டது. 'ஜா' அணியில் இருந்த சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணிக்கு 49 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 196 இடங்களில் அதிமுகவின் ஜெயலலிதா அணி போட்டியிட்டது. 'ஜெ' அணியில் இடம்பெற்ற, சிபிஐ-க்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் 208 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிப்புகள் வெளியாகின. அதேசமயம், முதல்வராக முயற்சித்த நெடுஞ்செழியன் ஜெ அணியில் இருந்து விலகி 13 இடங்களில் போட்டி என அறிவித்தார். பாரதிய ஜனதா தன் பங்குக்கு 31 இடங்களில் போட்டியிடும் என அறிவித்தது. பழ நெடுமாறன் 8 இடங்களில் போட்டி என அறிவித்தார். பின்னாட்களில் திமுக ஆட்சியைக் கொண்டு வர முக்கிய முயற்சிகளை மேற்கொண்ட ஜி.கே.மூப்பனார், காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். 

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு. களத்தில் வெடித்துச் சிதறின எதிர்க்கட்சிகள்.  தனது ஆட்சியைக் கலைத்த மத்திய அரசைக் கண்டித்து நீதி கேட்டார் ஜானகி. ஆதரவு தெரிவித்துப் பிரசாரம் செய்தார் சிவாஜி. தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டிய நிலையில், முக்கியத் தலைவர்கள் சகிதம் ஜெயலலிதா களமிறங்கினார். ஆட்சி அமைத்து மீண்டும் காங்கிரசின் செல்வாக்கை உயர்த்தவேண்டிய சூழலில் காங்கிரஸ். 13 ஆண்டுகள் பதவிகளின்றி உழைத்த உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கலைஞர். 21 ஜனவரி 1989 தேர்தல் முடிவுகள் வெளியானது. வன்னியர் சங்கத்தின் தேர்தல் புறக்கணிப்பு வட மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே தி.மு.க. பெரும் வெற்றிபெற்றிருந்தது. 150 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கட்சி 15 இடங்களையும் ஜனதா தளம் நான்கு இடங்களையும் பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வெறும் 26 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஜானகி எம்.ஜி.ஆரும் சிவாஜியுமே தோல்வியுற்றனர். ஜா அணி சார்பில், சேரன் மாதேவியிலிருந்து பி.எச். பாண்டியனும் வேடசந்தூரிலிருந்து பி. முத்துச்சாமியும் வெற்றிபெற்றிருந்தனர். ஜெயலலிதா அணி 27 இடங்களைப் பெற்றிருந்தது. சிபிஐ 3 இடங்களைப் பிடித்திருந்தது. பாஜக, நெடுஞ்செழியன் கட்சி, பழ.நெடுமாறன் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

 

திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 1989 ஜனவரி 27ஆம் தேதி, வள்ளுவர் கோட்டத்தில் பதவி ஏற்றுக் கொண்டார் முதல்வர் கலைஞர். அன்பழகன், நாஞ்சில் மனோகரன், துரைமுருகன், கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. இந்தத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வெற்றிபெற்றிருந்தார் (இன்றைய திமுக தலைவர்) மு.க.ஸ்டாலின். ஆனால், அமைச்சர் பட்டியலில் ஸ்டாலினின் பெயர் இடம்பெறவில்லை. காங்கிரஸை விட ஒரு தொகுதி கூடுதலாகப் பெற்ற ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதிமுகவின் இரு அணிகளும் தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஒன்றிணைந்தன. இந்தத் தேர்தல் தொடங்கி 2016 சட்டமன்றத் தேர்தல் வரை, கலைஞர் Vs ஜெயலலிதா அரசியல்தான் தமிழகத்தின் திசைவழியைத் தீர்மானித்தது.
 

 

 

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.