Skip to main content

வானமே இடிந்துவிழுந்தாலும் இந்து என். ராமிற்கு, நாம் ஒற்றுமையாக பின்னால் இருப்போம் -நக்கீரன் ஆசிரியர் கோபால்

Published on 10/03/2019 | Edited on 11/03/2019

 

hindu n ram




ரஃபேல் விமான ஊழலை பற்றி புலானாய்வு செய்து செய்தி வெளியிட்டதின் காரணமாக  மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராமுக்கு பாஜக மிரட்டல் விட்டதால் நக்கீரன் குடும்பம் சார்பில் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் கண்டன கூட்டம் நடந்தது.  நக்கீரன் ஆசிரியர், மூத்த பத்திரிகையாளர் ஜவகர், நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன், தீக்கதிர் குமரேசன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் இந்த கண்டன கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.


வழக்கறிஞர் ப.ப. மோகன் கூறியதாவது, சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளுக்கு பின்னால் இரண்டாவது கட்ட நெருக்கடி நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகத்தான் நடந்துகொண்டிருக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன.  மிஷா நெருக்கடி காலத்தை கடந்து வந்தது பற்றி தெரியும், அதற்கு பின்னால் பொபோஸ் ஊழலை அம்பலப்படுத்தியது தெரியும். அதற்கு பிறகு தற்போது ஒரு மிகப்பெரிய நெருக்கடி பத்திரிகை சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக  ஒரு உண்மையை கண்டுபிடித்து அதை மக்களிடத்தில் கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பு என்பது ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதி, நிர்வாகம், சட்டத்திற்கு மட்டுமல்ல, பத்திரிகைக்கும் உண்டு என்பதால்தான் அது நான்காவது தூணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பத்திரிகை சுதந்திரம்தான் ஜனநாயகத்தை தூக்கிப்பிடிக்கின்ற அமைப்பில் ஒன்றாக மட்டுமில்லாமல், மக்களுக்கு இருக்கின்ற தொடர்பாகவும் இருக்கிறது.
 

hindu n ram


அரசியல் சட்டத்தை உருவாக்கின்றபோது, அம்பேத்கரிடம்  பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுள் பத்திரிகை சுதந்திரத்தை சேர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சுதந்திரங்களுக்குள் பத்திரிகை சுதந்திரமும் ஒன்று என்பதை அவர் எடுத்துரைத்திருக்கிறார். இந்த பத்திரிகை சுதந்திரத்தால்தான் பல உண்மைகளை மக்கள் அறிந்திருக்கிறார்கள்.   ஒரு தகவலை பெறுவது என்பதும் அடிப்படை உரிமைதான் என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருப்பதால்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 வந்தது. ஒரு செய்தியை, ஒரு உண்மையை சொல்லவேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமில்லாமல் பத்திரிகைக்கும் உண்டு. ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. ஆர்ட்டிக்கள் 19(2)வில் சில தடைகளும் உள்ளன. ஒரு தனிமனிதனின் அந்தரங்க உரிமை, தேசத்தின் பாதுகாப்பு, இவைகள் மட்டும்தான் ஒரு பத்திரிகை சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடக்கூடாது. உச்சநீதிமன்றம் 1995ம் ஆண்டு ஆட்டோ சங்கர் வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்புதான் இந்திய பத்திரிகை வரலாற்றில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பாக கருதப்படுகிறது. அப்போது உச்சநீதிமன்றம் கூறியது ஒருதனிமனிதன் பொதுவாழ்க்கைக்குள் இயங்குகிறபோது அவரும் ஆக்கப்பூர்வ விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவார் என்பதை கூறியுள்ளது.


சசிதரூர், அருணாப் கோசாமி மீது இவர் தனது தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த வழக்கில் எனது தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சசிதரூர் போட்டிருக்கும் வழக்கு இன்று டெல்லியில் நடந்துள்ளது. ஒரு விஷயத்தை புலனாய்வு செய்கிறபொழுது அதன் அடிப்படை விஷயங்களை நீதிமன்றம்கூட கேட்க முடியாது. 2ஜி போன்ற சில தனித்துவங்களில் மட்டும்தான் கேட்கமுடியும். ரஃபேல் வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது.  உண்மையை மறத்து சொன்னதால் அதை அற்புதமான அளவிலே புலனாய்வு செய்து ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஆனால் இதை நீதிமன்றத்திலே செய்திகள் திருடப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார்கள். சுதந்திரம் பெற்று, நமக்கென ஒரு அரசியல் சாசனம் வந்துவிட்டபோது  சிவப்பு நாடா என்கிற சட்டம் தானாகவே அற்றுப்போகிறது. ஆனால் அதைக் காண்பித்து தகவல்கள் திருடப்பட்டுள்ளது, வழக்கு போடுவேன் எனக் கூறி இந்து என்.ராமை மிரட்டியிருப்பது இந்த தேசத்தின் நீதிக்கும், பத்திரிகை உலகத்திற்கும் விடப்பட்டிருக்க சவால்.
 

இதை தமிழ்நாட்டில் சந்தித்திருக்கின்ற பெருமை நக்கீரன் போன்ற பத்திரிகைகளுக்கு உண்டு. காட்டில் இருக்கக்கூடிய வீரப்பன் யார் என்பது யாருக்கும் தெரியாது. அந்த உண்மையைக் கூறியபோது அதையும் அப்படிதான் திரித்து கூறினார்கள். அதை எதிர்த்து எத்தனையோ போராட்டங்களை நாம் சந்தித்தோம். அதைப்போல் ஹிந்து ராம் இன்றைக்கு எடுத்திருக்கிற இந்த செயல் என்பது ஒரு துணிச்சலான செயல். தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், நாங்கள் திருட்டு வழக்கு போடுவோம் என சொன்னபோதிலும்கூட, வானமே இடிந்து விழுந்தாலும் எனது சோர்ஸை நான் சொல்லமாட்டேன் எனக்கூறிய  என்.ராமின் பெருமை என்பது தமிழகத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமையாகும். அவரை நாம் ஆதரிப்பதும், அவருக்கு பக்கபலமாக நிற்பதும் ஜனநாயகத்தை காக்கவேண்டிய பொறுப்பாகும். அறிவார்ந்த மக்களை உருவாக்குவது நமது பொறுப்பாகும், அதைதான் இந்த பத்திரிகை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்து வருகிறதோ அங்கெல்லாம் நின்று குரல் கொடுத்தவர் என்.ராம். ஐ.நா. மன்றத்தில் பத்திரிகை உரிமைகள் ஷரத் 10ல் ஒரு பத்திரிகை தனது சோர்ஸை சொல்லத்தேவையில்லை என இருக்கிறது. அப்படியிருக்கையில் அது எங்கிருந்து வந்தது எனக்கேட்டிருப்பது பத்திரிகைக்கு விடப்பட்டிருக்கிற அச்சுறுத்தல். ஒரு செய்தி பொய் என நினைத்தால் அவர்களின்மீது மானநஷ்ட வழக்கு போடலாம், அதைவிட்டுவிட்டு செய்தி போட்டால் உன்மேல் வழக்கு போடுவேன் எனக்கூறுவது ஜனநாயகத்தின் குரலை நெரிப்பதாகும். நக்கீரன் மீது வழக்குகள் போடப்பட்டபோது எப்படி என்னைப்போன்ற வழக்கறிஞர்களெல்லாம் துணை நின்றோமோ, அதுபோல என். ராமிற்காகவும் நிற்போம். ஒரு விஷயத்தை புலனாய்வு செய்து பத்திரிகை மக்கள் மத்தியில் வைக்கும்போது அந்த விஷயம் பொய்யென்று சொன்னால் அதற்கான நடவடிக்கைகளைதான் எடுக்கவேண்டுமே தவிர, அவரை மிரட்டுவது எந்த வகையிலும் நியாயமாக இருக்க முடியாது. அடிப்படை உரிமைகளைக் காப்பது நமது கடமை.
 

hindu n ram


புதிய தலைமுறை செய்தி ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் கூறியதாவது, 1977ல் இருந்து தொடங்கிய ராமின் புலனாய்வு பயணம் இன்றுவரை எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. பொபோஸ் பற்றி இந்து பத்திரிகையே அதை பிரசுரிக்க நிறுத்தியபோது, அதை வெளியில் வந்து வெளியிட்டவர். பொதுவெளியில் வெளியிடப்படவேண்டுமோ அந்த செய்திகளை வெளியிடுவதில் எந்த தயக்கமுமில்லை, எதற்காகவும் அஞ்சமாட்டோம். என நிற்பது நம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணம்.  இவர் சர்வதேச அளவில் மதிக்கக்கூடிய பத்திரிகையாளராக இருப்பவர் என். ராம். எந்த நேரத்திலும் எனது சோர்ஸை வெளியிடமாட்டேன் அப்படிங்குறதுல அவர் உறுதியாக இருந்தார்.  அகில இந்திய அளவில் யாரும் முன்வராதபோது, இந்து அதை வெளியிட்டிருப்பது ஒரு சவாலான பணிதான். அதை அவரே மேற்கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த கட்டுரைகளில்  அடுத்தடுத்த எக்ஸ்க்ளூசிவ் வெளியாகும்போது அது எதிர்வினைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது. கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக இந்து ராம் எப்போதுமே நின்றிருக்கிறார். தனது குரலை உயர்த்தி சொல்லியிருக்கிறார். நக்கீரன் பிரச்சனையாக இருக்கலாம், புதிய தலைமுறை பிரச்சனையாக இருக்கட்டும், அவர்தான் முன்னே வந்து நின்றார்.  நிறைய விஷயங்களை முன்னெடுத்தார்.


பிரதமருடன் செய்தி ஆசிரியர்கள் சந்தித்த சந்திப்பு மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த சந்திப்பில் பிரதமர் இந்து ராம் என்னுடைய நெருக்கமான நண்பர் என்றார். இருந்தாலும் அரசின் மீது தவறு இருக்கும்போது அதை வெளிப்படையாக கூறினார். எந்த இடத்திலும் தன்னை அவர் சமரசப்படுத்திக்கொண்டதே இல்லை. பத்திரிகை சுதந்திரத்தில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதையும் முன்னெடுத்தவர் அவர்.  ஊடக சுதந்திரத்திற்கு அவர் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்தார். நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். அவர் முன்வைக்கிற ஒரு விஷயம் பத்திரிகைகளுக்கென்று தனி சுதந்திரம் ஏதுமில்லை, தனி அதிகாரமும் இல்லை, சாதாரண மனிதர்களுக்குள்ள சுதந்திரம்தான் நமக்குமுள்ளது. ஆனால் நமக்கான பொறுப்பு என்பது அதிகமாக உள்ளது. அவர் மிக தைரியமாக பல செய்திகளைக் கொண்டுவந்துள்ளார். நாம் அவருக்காக ஒன்று சேரவேண்டும். இது தனிப்பட்ட இந்து என். ராமிற்காக கூடிய கூட்டமல்ல, ஊடக சுதந்திரத்திற்கான ஒரு கூட்டம்.  அதில் முன்னணியில் நிற்கும் ஒருவருக்காக, நாம் முழுமையாக நிற்க வேண்டும்.
 

hindu n ram



மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் கூறியதாவது, ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, பத்திரிகை சுதந்திரம் என்பது எங்களைப் போன்றவர்களுக்கு அடிக்கடி தர்ம சங்கடத்தை விளைவிக்கின்றன, சிக்கல்களை உருவாக்குகின்றன. எனினும் பத்திரிகை சுதந்திரத்தின்மீது  அணு அளவு தாக்குதல் நடக்கவும் நான் அனுமதிக்கமாட்டேன் என்று கூறினார். பத்திரிகை சுதந்திரத்திற்காக விழுமியங்கள் கொண்ட அரசியல் தலைவர்கள் அனைவருமே பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபட்டிருக்கிறார்கள். ஆனால் விழுமியமே இல்லாத சில குப்பைகள் பத்திரிகை சுதந்திரத்தின்மீது தாக்குதல் தொடுக்க வந்தால், பத்திரிகையாளர்கள் அதை சும்மா விடமாட்டார்கள் என்பது வரலாறு காட்டியிருக்கிறது. சமீபத்தில் கவர்னர் தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டதற்காக தம்பி நக்கீரன் கோபாலை ஒரு நாளாவது ஜெயில்ல வச்சுரணும். அப்படினு அரசாங்கம் பட்டபாடு நாம் எல்லோரும் கண்ணால பார்த்தோம்.


ஏதோ பெரிய ராணுவத்தையே கொண்டுவந்து குவித்ததுபோல் நூற்றுக்கணக்கான போலிஸ்களை சிந்தாரிப்பேட்டை போலிஸ் ஸ்டேஷனில்  குவித்து அந்த பாடுபடுத்தி, யாரையும் பார்க்க விடாமல் கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். தோழர் ராமும் அங்கு வந்திருந்தார். ராமைப் பார்த்தபின்பு அந்த நீதிபதி உங்கள் கருத்து என்ன சொல்லுங்கள் எனக்கேட்டார். அப்போது அவர் கூறினார், நான் வழக்குரைஞர் அல்ல, நான் பேசமுடியுமா எனக் கேட்டார். அதற்கு நீதிபதி அதெல்லாம் பேசலாம் ஒரு பத்திரிகை நிபுணர் என்ற முறையில் உங்கள் கருத்துகளை நீங்கள் கூறுங்கள் என்றார். அவரும் தெளிவாக விளக்கினார். இந்தக் குறிப்பிட்ட சட்டப்பிரிவின்கீழ் இந்தியாவில் எந்த வழக்கும் பதியப்பட்டது இல்லை.  நீங்கள் முதன்முறையாக இதை ஒத்துக்கொண்டு அவரை சிறைக்கு அனுப்பினால், இது இந்தியா முழுவதிலும் பரவிவிடும். அந்தப் பரவலுக்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். அப்படினு முகத்திற்கு நேராக, தெளிவாகக் கூறினார். நமது வழக்கறிஞர்களும் திறமையாக வாதாடினார்கள். ஒருநாள்கூட சிறையில் வைக்காமல் விடுவிக்கப்பட்டார். அப்போது உடனிருந்தது ராம்தான். இதுபோல் பல்வேறு தாக்குதல்கள் பத்திரிகை சுதந்திரத்திற்கு வந்தபோதும் ராம் உடனிருந்திருக்கிறார். இந்தத் தாக்குதல் அவருக்கு புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்ஸிஸ்ட் கட்சியின் சென்னை செங்கை மாவட்ட குழு உறுப்பினர்களாக இருந்தோம்.


எங்களோடு சேர்ந்து பல போராட்டங்களுக்கு அவர் வந்துள்ளார். போலிஸ் தடியடி என்று மிரட்டியபோதெல்லாம் அஞ்சாமல் இருப்பவர். அப்படிபட்டவரிடம் இரகசிய காப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னால் அவர் வானமே இடிந்து விழுந்தாலும் சோர்ஸைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றுதான் சொல்லுவார். அந்த நெஞ்சுரம் கொண்டவர்தான் ராம். பத்திரிகையாளர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக ஒன்றுகூடவேண்டும் என்ற எண்ணம் சமீபகாலமாக வளர்ந்து வருகிறது இதை நான் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு பார்க்கிறேன். ஒரு பிரச்சனை என்றால் வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடுவதை நான் பாராட்டுகிறேன்.
 

hindu n ram



நக்கீரன் பொறுப்பாசிரியர் லெனின், இதற்குமுன் இதே இடத்தில் கௌரி லங்கேஷ் படுகொலையின்போது நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் சொன்னேன், பெங்களூரிலே ஒன்று நடந்தால் நாம் இங்கு கண்டிக்கிறோம்.  ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசையோ, மத்திய அரசையோ எதிர்த்து தமிழ்நாடு சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு என்றால் பேசத்தயங்குகிறோம் ஏன் என்று கேட்டேன். அதைக்கேட்டு ஓராண்டுகள்கூட கடக்கவில்லை.  அதற்குள்ளாக இந்த மத்திய அரசின் விருப்பத்திற்கு இணங்க அது சொல்கின்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்ற மாநில அரசு நிர்மலா தேவி வழக்கில் நக்கீரன் மீது  மிகப்பெரிய தாக்குதலை நடத்தியபோது முதல் ஆளாக ராம்தான் வந்து நின்றார். யாருடைய பிரச்சனையாக இருந்தாலும் நாம் ஒன்றிணைந்து நிற்போம் என அவர் அந்த கூட்டத்திலேயே சொன்னார்.
 

ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற உரிமை பத்திரிகைகளுக்கும் உண்டு. பத்திரிகைகளுக்கென்று தனிப்பட்ட சுதந்திரம் ஏதும் இல்லை. அடிப்படையில் எல்லோருக்கும் இருக்கின்ற உரிமை இருக்கிறது. என்.ராம் சொன்னதுபோல இந்த செய்தி எப்படி வந்தது என்று கேட்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. அப்படி கேட்டால் அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியமும்  கிடையாது. ஆனால் தற்போது தங்களிடம் பதில் இல்லையென்றால்  அந்த செய்தியை மறுக்காமல், செய்தியைக் கொடுத்தது யார் என்ற கேள்வி கேட்பது இன்று மிகப்பரவலாக இருக்கிறது.


நேற்று தேமுதிக பொருளாளர் அளித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்டால் அந்தக்கேள்விக்கு பதில் வருவதைவிட நீ யார் என்ற கேள்விதான் வருகிறது. அவர்களிடம் உண்மை இல்லை அப்போதுதான் இந்த பாய்ச்சல் இல்லை. இது தொடர்ச்சியாக இருக்கும், யார் ஆட்சிக்கு வந்தாலும் இருக்கும். அளவுகோல் மாறுமே தவிர, ஆட்சியாளர்களின் யோக்கியதை மாறவே மாறாது.  இப்போது இருப்பது எப்படிப்பட்ட ஆட்சி, இனி வரப்போவது எப்படியாக இருக்கும். மீண்டும் இதே ஆட்சி உருவானால் என்ன நடக்கும் என எல்லாவற்றையும் நாம் கவனிக்க முடியும். ஏனென்றால் அடுத்த தேர்தல் எப்படி, யார் வரப்போகிறார்கள் என்றெல்லாம் கணிக்கக்கூடிய நமக்கு அப்படி வரக்கூடிய ஆட்சி எப்படி இருக்கும் என்பதையும் கணிக்கமுடியாமல் இருக்காது. எந்த சூழலாக இருந்தாலும் இந்த ஒற்றுமை ஒன்றுதான் நம்மைக் காக்கின்ற பாதுகாப்பு கவசமாக இருக்கும். அந்த ஒற்றுமையை வலுப்படுத்தவோம் எனக்கூறி, இந்துவிற்காகவும், ராம் அவர்களுக்காகவும் என்றும் துணை நிற்போம்.
 

hindu n ram


br /> நக்கீரன் ஆசிரியர் கோபால், ‘வானமே இடிந்துவிழுந்தாலும் ராம் சாருக்கு நாம் ஒற்றுமையாக பின்னால் இருப்போம்’ என்பதை தெரிவித்துக்கொள்வோம். நேற்று காலையில் ப.ப. மோகன் தொடர்புகொண்டு ராம் சாருக்கு இப்படி நடந்துள்ளது, என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டார். நாளைக்கே கூட்டம் வைத்துவிடுவோம் நீங்கள் வந்துவிடுங்கள் என்றேன். தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் நீதிமன்றத்தில் சொல்கிறார், நாங்கள் விசாரித்துக்கொண்டு இருக்கிறோம்.  எஃப்.ஐ.ஆர். இன்னும் போடவில்லை. ஆனால் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் என்ன அர்த்தம், உங்களை கைது செய்வோம் என்பது அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் இந்தக் கண்டன கூட்டமே நடக்கிறது.  அவர்களின் இயல்பே அதுதான். நிர்மலா தேவி என்றால் கவர்னர் எப்படி பதபதைக்கிறாரோ அதுபோல ரஃபேல் என்றால் மோடி படபடக்கிறார். யாராவது ஒருவரின் பெயரைக் கூறினால் அவரவர்களுக்கு ஒரு படபடப்பு இருக்கிறது.  அதுபோல் கவர்னர் எங்கள் அலுவலகத்தில் ஸ்லிப் எழுதும் தம்பி முதற்கொண்டு 35 பேரின்மீது வழக்கு போட்டார். ராம் சார் பத்திரிகை சுதந்திரத்திற்காக நீண்ட நாட்களாக பயணிக்கிறவர்.
 

வைகுண்டராஜன் சம்பவத்தில் இரண்டு புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுத்துவிட்டு தப்பி சென்றனர் என்ற செய்தி வந்ததில்லையா, அந்த புகைப்படக்கலைஞர்களை தப்பிக்க வைத்ததன் பின்னணியில் சந்தியாதான் இருந்தார் என்று மத்திய இணை அமைச்சர் ஒருவர் புகாரளித்தார். இதனால் அவர் மிக அதிக துன்பங்களை அனுபவித்தார். ராம் சார்தான் பின்னணியிலிருந்து அவருக்காக குரல் கொடுத்தார். அதன்பின் அந்த வழக்கு நிற்கவில்லை. இப்போது கவர்னர் வழக்கின்போது எங்களுடன் இருந்தார். 1992ல் ஐயா கணேஷன் இறப்பிற்கு நாம் ஒரு பெரிய கண்டனப் பொதுக்கூட்டம் வைக்கும்போது கலைஞருடன் மேடையில் உட்கார்ந்து கண்டனக்குரல் எழுப்பியது ராம் சார்தான். அன்றிலிருந்து இன்றுவரை நக்கீரனின் ஒவ்வொரு போராட்டத்திற்கும்  பின்னாள் ராம் வந்துகொண்டே இருப்பார். எனக்கு ரஃபேலை பார்த்தபிறகு ராம் சார் மீதான மரியாதை இன்னமும் அதிகமானது. ஒரு மனிதனுக்கு இவ்வளவு தைரியம் இருக்கமுடியுமா. அப்பலோ மாதிரியே ரஃபேல் ஆவணம் இருக்குமிடத்திலும் கேமிராவை ஆஃப் செய்து வைத்துவிட்டார்கள் போல.  அவ்வளவு பாதுகாப்பான இடத்தில் ஒரு கேமிரா இல்லையா, திருடினால் தெரியாதா.


ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்தபோது என்ன நடந்ததோ அதேதான் அங்கேயும் நடந்துள்ளது.  இப்போது அந்த ஆவணங்கள் திருடுபோய்விட்டன எனக்கூறியவுடன், அந்த வழக்கறிஞர் அஸ்வந்த் தபே மீது அவமதிப்பு வழக்கு போடப்பட்டது, நேற்று அந்த அவமதிப்பு வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார், வேணுகோபால். அதை திரும்பிப் பெற்றுக்கொண்டுதான், அது திருடு போகவில்லை, நகல் எடுத்துவிட்டனர் எனக் கூறினார். எல்லாமே திருட்டுதானே. அதில்தான் ராம் சாருக்கு இன்னொருபடி மேலே போகிறது. திருடியது உண்மையா, இல்லையா என்பதெல்லாம் தேவையில்லை. நாங்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். 


அதோபார் அக்கா அந்த எஸ்டேட்தான் என்று ஒரு அட்டைப்படம் போட்டோம். 1991ம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்று நூறாவது நாளில் அவர் கொடநாடு எஸ்டேட் சென்றார். அவர் வந்து சென்ற 6வது நாளில் நக்கீரனில் இது அட்டைப்படமாக வெளியானது. அதுவரை ஜெயலலிதா, சசிகலா என தனித்தனி அட்டைப்படமாக பார்த்தவர்கள், இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பார்த்தார்கள். அன்று மாலையே காவல்துறை தேடி வந்தது, நான் தலைமறைவாகிவிட்டேன். அரசு ஆவணத்தை திருடி விட்டதாக போடப்பட்ட வழக்கு உட்பட 3 வழக்கு போடப்பட்டது. இவர்கள் இருவரின் புகைப்படத்தை போட்டது அரசு ஆவணத்தை திருடியதாம். 2 வாரம் ஆனது 27 பேரை அடி பிரித்துவிட்டார்கள். எனக்கு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. ஒருவழியாக நாங்கள் பெயில் எடுத்துவிட்டோம். கண்டிஷன் பெயில் என்றால் கையெழுத்து போடவேண்டும். கையெழுத்து போடும்போது சிபிசிஐடி அதிகாரிகள், அண்ணேன் கோபப்படாதீங்க, இந்த போட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது அப்படினு கேட்டாங்க. அதற்கு நான் அவங்க வீட்ல இருந்துதான் அண்ணே எடுத்தேன் அப்படினு சொன்னேன். அவங்க வீட்லயா எடுத்தீங்க, யார் கொடுத்தாங்க. அதை சொல்லமுடியாது அண்ணே அப்படினு சொன்னேன். அதற்கு அவர் அதை சொல்லவில்லையென்றால் உங்களை விடமாட்டாங்களே என்றார். அதற்கு நான் இல்லண்ணே பாத்துக்கலாம் அப்படினு சொன்னேன். 1996ல ஆட்சி மாறியவுடனே வழக்கும் போயிருச்சு.


அப்போதிருந்தே சோர்ஸ சொல்லாமலேயே இந்த பாடுபட்டுட்டு இருக்கோம்.  பக்தவச்சலம் கொலை வழக்கு  உங்களுக்கு தெரியும், வீரப்பன் கொன்றவர்களில் ஒருவர். நாம் அதுதொடர்பான செய்திகளை வெளியிட்டோம். அவர் வீட்டில் சென்று கேட்டபோது, அவருக்கு போலிஸ்தான் ஆசை வார்த்தைக் காட்டி கூட்டிச்சென்று விட்டனர் என்று கூறினார்கள். போலிஸ் அவரை பிபிசி செய்தியாளராக உள்ளே போ எனக்கூறி அனுப்பியது. அதை கண்டுபிடித்த வீரப்பன் அவரை கொன்றுவிட்டார். இன்னும் அப்படி இருவரை கொன்றான். இவையனைத்தையும் நாம் செய்தியாக வெளியிட்டோம். மீண்டும் வழக்கு போட்டார்கள். வழக்கு போடுவதற்கு முன்பு யார் உனக்கு சொன்னது எனக் கேட்டனர், அதை சொல்லவில்லை என்றவுடன்தான், அந்தக் கொலையில் எனக்கும் தொடர்பு இருக்கிறது என வழக்கு போட்டனர்.


பத்திரிகைக்கு தனியாக சட்டம் இல்லை. சோர்ஸை வெளியில் கூறமாட்டேன் என்பதை நாங்கள் ஆண்டாண்டு காலமாக கூறி வருகிறோம். எத்தனை முறை கேட்டாலும் அதை கூற மாட்டோம். இன்றைக்கு ராம் எடுத்துள்ள இந்த முடிவு உண்மையிலேயே இந்தியாவைப் பிடித்துள்ள ஒரு பீடை ஒழிவதற்கான ஒரு முடிவு என அனைவரும் மகிழ்கின்றனர்.


ரஃபேல்ல ஊழல் நடந்துருக்குனு வெட்ட வெளிச்சமாக எல்லாருக்கும் தெரியும். எல்லாரும் இதைப்பற்றி பேசுகிறோம். ஆனால் ஆதாரத்தை இராணுவத்திற்குள் புகுந்து எடுத்தது இருக்கின்றதே அதற்காக ராமிற்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.


அவர் சொன்னார், மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்களையெல்லாம் நாங்கள் சொல்லிவிட்டோம். தொழில்நுட்ப விஷயங்கள் குறித்த ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. ஆனால் சொல்லமாட்டோம். நாட்டிற்கு எதிரான விஷயம் என்பதால் அதை நாங்கள் கூறமாட்டோம் என அவர் கூறியது எவ்வளவு பெரிய கண்ணியம். ஒரு பத்திரிகையாளர் இப்படித்தான் இருக்கணும் என்பதற்கு உதாரணமாக நான் ராம் சாரை பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என கூறியதற்கு காரணம்,  இது நாம் முன்னெடுத்ததாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். ராம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். ராம் போல அவரின் அடியொற்றி இன்னும் பல விஷயங்களை தெறிக்க விடணும். ராமை எதும் செய்ய முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். ராம்கூட நாம் இருக்கிறோம் என்பதும் தெரியும். ரஃபேல் விஷயத்தை அவர் வெளிக்கொண்டதுபோல், நாமும் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டிலேயே நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை இவர் போட்ட ரோட்டில், நாம் எல்லோரும் பைக்கில் போய் கண்டுபிடிக்க வேண்டும்.
 

 

 

சார்ந்த செய்திகள்