Advertisment

தமிழ்நாட்டில் தமிழ் பேச தடை!!! தொடரும் அடக்குமுறை...

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதை நாடு என்று சொல்வதைவிட துணைக்கண்டம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கிருக்கும் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென ஒரு அடையாளத்தைக்கொண்டுள்ளது என்று நமக்கு சிறுவயதில் சொல்லிக்கொடுத்தனர். ஆனால் இப்போதிருக்கும் அரசோ அந்த பன்முகத்தன்மையை அழித்து ஒற்றை கலாச்சாரத்தை கொண்டுவர நினைக்கிறது.

Advertisment

india map

ஏற்கனவே மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், ‘இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் வேறேதும் ஒரு மொழி’ என்று இந்தியை திணிக்கப் பார்த்தார்கள். அது நடக்காத நிலையில், வேறு ஒரு முறையை தற்போது எடுத்துள்ளனர். அதுதான் தெற்கு ரயில்வேயின் பணியில் உள்ள ஊழியர்கள் தமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கை. (தற்போது இந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டுள்ளது)இந்த அறிவிப்புக்கு பின்னணியில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது.

மதுரை, திருமங்கலத்தில் மே 9ம் தேதி காலையில் ஒரே ரயில்வே ட்ராக்கில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்தது. இதற்கு காரணம் இரண்டு ரயில்வே நிலைய அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட மொழிப்பிரச்சனை. ஒருவர் கூறியது இன்னொருவருக்கு புரியவில்லை. அதனால்தான் கட்டளை தவறாக பிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வெறும் ஒரு காரணம் மட்டுமே.

Advertisment

இந்தி இருந்தால் இங்கு என்ன கெட்டுவிடப்போகிறது, உங்களுக்கு என்ன நட்டம், தமிழ், தமிழ் என்று கூறி ஏன் எங்கள் வாழ்க்கையையும் கெடுக்கிறீர்கள் என கேட்பவர்களுக்கு ஒரு சிறிய செய்தி... இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை, இந்தியாவின் அலுவல்மொழி என்று 22 மொழிகள் உள்ளன. அனைத்தையும் ஒரே அளவில் வைத்துப்பார்ப்போம். 22 அலுவல் மொழிகளும் இங்கு ஒன்றுதான். இந்தியா முழுமைக்குமான தொடர்பு மொழி (linking language) ஆங்கிலம் அவ்வளவுதான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டமும், பிற சட்டங்களும் இந்தியாவின் தேசியமொழி என்று எதையும் வரையறுக்கவில்லை. அலுவல் மொழியாக மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும் அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், தத்தமது அலுவல் மொழிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளது எனவும் கூறியுள்ளது. இவையனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிலரின் கருத்துப்படி, இந்தியைவிட தமிழுக்கு எந்தப் பெருமையும் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அப்படி பார்த்தாலும் இரண்டும் அலுவல் மொழிதான் தமிழ் இருக்கக்கூடாது என்றால், அங்கு இந்தியும் இருக்கக்கூடாது. இந்தி ஒரு இடத்தில் இருக்கிறதென்றால் அங்கு தமிழ் இருப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை. இதற்குமுன் அறிவித்த மும்மொழிக் கொள்கையிலும் இதே பிரச்சனைதான், பிராந்திய மொழிகள் யாவும் கட்டாயம் என்றோ அந்தந்த பிராந்திய மொழிகளை அவரவர் கற்கலாம் என்றோ அதில் சொல்லப்படவில்லை. மாறாக ஒரு பகுதியின் பிராந்திய மொழியான இந்தியை கட்டாயப்படுத்துகிறார்கள். அதனால்தான் இங்கு போராட்டம் வெடித்தது, இதுதான் 1937லும், 1965லும் நடந்தது.

hindi imposition

இப்படி அப்போது நடந்ததையும், இப்போது நடப்பதையும் ஒன்றாக பார்க்காதீர்கள் என்று நீங்கள் நினைத்தால், இதோ அண்மையில் நிகழ்ந்த இன்னொருநிகழ்வு...பிப்ரவரி 2 2018 அன்று தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் டெல்லியில் அந்தந்த மாநில முதல்வர்கள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கு அந்தந்த மாநிலத்தின் சார்பில் தனித்தனி இல்லங்கள் உள்ளன. தமிழ்நாடு சார்பில் உள்ள இரு இல்லங்களில் ஒரு இல்லத்தின் பெயர் தமிழ்நாடு இல்லம், மற்றொன்றின் பெயர் தமிழ்நாடு விருந்தினர் மாளிகை. இரண்டு கட்டிடங்கள் இருப்பதால் முதலில் கட்டப்பட்ட தமிழ்நாடு இல்லத்தின் பெயர் பழைய தமிழ்நாடு இல்லம் என பேச்சுவழக்கில் மாறியது. இந்த பேச்சுவழக்கில் உள்ள பழைய என்பது அங்குசெல்லும் அதிகாரிகளுக்கு மன உளைச்சலை தருகிறது என்று கூறி அந்த பெயர்கள் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தது. பின்னர் கடும் எதிர்ப்புக்கு பிறகு மீண்டும் பெயர்மாற்றப்பட்டது. இப்படியாக அவர்கள் திணிப்பதற்கு கூறும் காரணம்கூட சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்கிறது.

tamilnadu house

இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியை திணிக்கவோ அல்லது தமிழ்நாடு, தமிழ் என்பவற்றை ஒழிக்கவோ முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இங்கு எந்த மொழியையும் தாராளமாக கற்றுக்கொள்ளலாம். அதற்கு யாரும் தடைவிதிக்கவில்லை, முக்கியமாக தமிழ்நாட்டில் யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்பதன் அடிப்படையில்தான் அன்றுமுதல் இன்றுவரை இருந்துவருகிறது. திணிக்கப்படும்போதுதான் தமிழ்நாடு அதை எதிர்க்கிறது. இன்று பல மாநிலங்கள் எங்களின் தாய்மொழியை இழந்துவிட்டோம் என புலம்புகின்றன. பல நாடுகளும், மாநிலங்களும் தாய்மொழி தினத்தை மட்டுமே கொண்டாடி வருகின்றன,அது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாது என்றுதான் போராடுகிறார்கள், அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

இந்திதான் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்யும், இந்திதான் இந்தியாவை வலுப்படுத்தும், இந்திதான் இந்தியாவை மேன்மைப்படுத்தும் என பொய் பிரச்சாரங்களும், புரளிகளும் பரப்பப்படுகின்றன. இந்தி இல்லாமல்தான் நாம் இதுவரை வளர்ந்துள்ளோம், தமிழ்நாடு பல பிரிவுகளில் முன்னணியில் உள்ளது என்பதையும் புரிந்துகொள்வோம். தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது. அரசியல் இலாபங்களை, அரசியல் காரணங்களை விடுத்து அவர்களும் தமிழை பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் விடப்பட்டால், வேறெங்கு அது முக்கியத்துவம் பெறும்... தமிழ் நமக்கு கிடைத்த பெரும் பேறு, காலத்திற்கேற்றாற் போல் அது மேம்பட்டுக்கொண்டே வந்துள்ளது, காலத்திற்கேற்ப மாறியுள்ளது. அதை தொடர்வது நம் கடமை.

Tamilnadu Tamil language Language tamil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe