Skip to main content

'உயிருக்கு போராடும் 2000 மரங்களின் உயிர் காக்க உதவுங்கள்...' கண்ணீரோடு உதவி கேட்கும் கிரீன் நீடா 

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

2018 நவம்பர் 16 ந் தேதி புரட்டிப் போட்ட கஜா புயல் ஒட்டு மொத்த மரங்களை அடியோ சாய்த்துப் போட்டது. நிழலுக்கு கூட சாலை ஓரத்தில் நிற்க முடியாமல் மக்கள் தவித்தனர். இந்த நிலையில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நீடாமங்கலத்தில் தொடங்கிய “கிரீன் நீடா” அமைப்பினர் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதுடன் ஊருக்கு ஊர் புதிய கிளைகளை உருவாக்கி தன்னார்வ அமைப்பினர், இளைஞர்கள், மாணவர்களை இணைத்து திருவாரூர் மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.

 

 'Help save the life of 2000 struggling trees ...'


இந்த நிலையில் தான் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் காலத்தை விட குறுகிய காலத்தில் நிழல் தரும் ஆலமரங்கள் போன்ற மரங்களின் கிளைகளை வெட்டி நட்டால் விரைவிலேயே துளிர்த்து பலன் கொடுக்கும் என்ற நமது ஆலோசனையை ஏற்றனர். புயல் தாக்கி ஓராண்டு முடிந்த நிலையில் 2019 நவம்பர் 17 ந் தேதி மன்னார்குடி – நீடாமங்கலம் சாலையில் சுமார் 12 கி.மீ தூரத்திற்கு ஆலம்போத்து, உதியம் போத்து, வாதமடக்கி உள்பட பல வகையான மரப் போத்துகளை கிரீன் நீடா வுடன் நெடுஞ்சாலைத்துறை, சமூக ஆர்வலர்கள், உள்ளூர், வெளியூர் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து 2100 மரப் போத்துகளை நட்டனர்.

நடப்பட்ட போத்துகள் நம்பிக்கை கொடுத்தது தொடர்ந்து மழை இருந்ததால் ஒரு மாதத்திலேயே துளிர்விடத் தொடங்கியது. 2100 போத்துகளில் 2000 போத்துகள் துளிர்க்கத் தொடங்கியது. போத்துகள் துளிர்க்கத் தொடங்கியதும் நட்ட இளைஞர்களுக்கும் நம்பிக்கை பிறந்தது சில வருடங்களிலேயே மரங்களாகி நிழல் கொடுக்கும் என்றனர்.

 

 'Help save the life of 2000 struggling trees ...'

 

மழைக் காலம் முடிந்தது. கடுமையான வெயில் தொடங்கி விட்டது. ஆனால் நல்ல முறையில் துளிர்க்கும் சுமார் 2 ஆயிரம் உயிர்களுக்கு உணவாக தண்ணீர் இல்லை. இதைப் பார்த்த கிரீன் நீடா வாரத்தில் 2 நாட்கள் டேங்கர் மூலம் தண்ணீர் ஊற்ற திட்டமிட்டனர். அதற்கான ஒரு நாளைக்கு ரூ. 4 ஆயிரம் வரை செலவாகிறது. அதாவது தொடர்ந்து 12 வாரங்களுக்கு தண்ணீர் ஊற்றினால் உயிருக்கு போராடும் மரப் போத்துகளை காப்பாற்றலாம் என்ற நிலையில் சில வாரங்கள் தங்கள் கையில் இருந்து செலவுகளை சமாளித்தனர். ஆனால் இன்னும் பல வாரங்கள் தண்ணீர் ஊற்ற வழியில்லை. என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் கவலையுடன் நிற்கிறார்கள் இளைஞர்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் நெடுஞ்சாலைத்துறையினர் தண்ணீர் ஊற்றி வளருங்களேன் என்று சிலர் அதிகாரிகளிடம் கேட்க.. எங்களால் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டனர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

green


நெடுஞ்சாலைத்துறையினர் புயல் பாதித்த மாவட்டங்களில் நட்ட மரக்கன்றுகளுக்கே தண்ணீர் ஊற்றாமல் வாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு எப்படி தண்ணீர் ஊற்றுவார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர் இளைஞர்கள்.

தற்போது தண்ணீர் ஊற்ற கொடையாளர்கள் தேவைப்படுகிறார்கள். அமைச்சர் காமராஜ், எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டவர்களும் கிரீன் நீடா விழாவில் கலந்து கொண்டு பாராட்டியுள்ளனர். இப்போது நெருக்கடியான நிலையில் அவர்களும் சில வாரங்கள் வாடும் மரப் போத்துகளுக்கு தண்ணீர் ஊற்றி உயிர் காக்க உதவலாம்.

 

 'Help save the life of 2000 struggling trees ...'


மரங்களின் மீது அக்கரையுள்ள சமூக ஆர்வலர்கள் 2 ஆயிரம் மர உயிர்களை காக்க மரங்களின் காதலர்கள் எந்த வகையிலாவது உதவலாம் என்ற கோரிக்கையை கண்ணீரோடு முன் வைத்துள்ளனர் கிரீன் நீடா அமைப்பினர். நன்கு வளரும் மரப் போத்துகளுக்கு டேங்கரில் தண்ணீர் ஊற்றுவதைப் பார்த்து சிலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளனர்.

எங்கள் உயிரை காக்க நீங்கள் இப்போது உதவினால் உங்கள் சந்ததிக்கு எப்போதும் நிழல் கொடுப்போம் என்பது போல சோகமாக் பார்க்கின்றன துளிர்விட்டு வளரும் மரக்குழந்தைகள்..

உயிருக்கு போராடும் மரங்களை காப்பாற்ற உதவிகள் செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு 9940220986 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நிலை அறிந்து உதவலாம்.

“மரங்களை நாம் வளர்த்தால் மரங்கள் நம்மை வளர்க்கும்”

 

 

 

Next Story

'தொந்தரவு இல்லாமல் இருந்தவர்களை வெட்டி சாய்த்துள்ளனர்' - வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
nn

ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைப்படை அமைப்பினர் பல்வேறு இடங்களில் மரங்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்காக பேசுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், 'காற்றில் உள்ள நச்சுகளை நீக்கி சுவாசிக்க பிராணவாயு கொடுக்கும் உயிருள்ள எங்களை சமூக விரோதிகள் எக்காரணமுமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.

26/11/2023 ஆம் தேதி பாரதி நகர் ஹோட்டல் பீமாஸ் நளபாகம் எதிரே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலையோரம் இருந்த எங்களின் சகோதரரை வெட்டி சாய்த்துள்ளார்கள். மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்ற தடை ஆணையை மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லையா? மனிதர்களை வாழவைக்கும் எங்களை வாழ விடுங்கள். கண்ணீருடன் மரங்களும் செய்யது அம்மாள் பசுமை படையும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

Next Story

''என் மரணமே கடைசியாக இருக்கட்டும்; கருணைக் கொலை செய்யுங்கள்'' - மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

mettupatti number 9 tamarind tree

வணக்கம்,

 

நான் புளியமரம் பேசுறேன்.. என் இயற்கைக்கு மாறான மரண கதையை கொஞ்சம் கேட்டுட்டு போங்க..

 

புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் மேட்டுப்பட்டி கேட் - ரைஸ் மில் இடைப்பட்ட இடத்தில் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிழல் தரவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு பழம் தரவும், சாலை ஓரமாக என்னை நட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், தண்ணீர் ஊற்றி வளர்த்தனர். அப்ப எனக்கு நம்பர் 9. அந்த பகுதியில் யார் வீட்ல நல்லது, கெட்டது நடந்தாலும் என் நிழலில்தான் நிற்பாங்க. இதுவரை லட்சம் பேருக்கு நிழல் கொடுத்திருப்பேன். குழம்பு ருசிக்க பழம் கொடுத்தேன். லட்சக்கணக்கான விதை கொடுத்தேன்.

 

நான் வளர்ந்தது போல சாலையும் விரிவடையத் தொடங்கியது. அந்தப் பக்கம் நடந்து போறவங்களும், வாகனங்களில் போறவங்களையும் கவர்ந்து இழுக்கிறது மாதிரி கிளைகளைப் பரப்பி பசுமையான பச்சை இலை போர்த்தி வனப்பாக இருந்தேன். அத்தனை பேரும் என்னை பார்க்காமல் போக மாட்டாங்க.. அவ்வளவு அழகா இருப்பேன். எல்லாரும் என்னையே பார்க்கிறதைப் பார்த்த பெரிய பெரிய கடைக்காரங்க, பயிற்சி மையகாரங்க அவங்க கடை விளம்பர பதாகைகளை என் மேல கட்டினாங்க. அது காற்றில் பறந்தது. அப்புறம் ஆணி வச்சு அடிச்சு பதாகை வச்சாங்க. என் மேல ஆணி அடிக்கும் போது எனக்கு வலிக்கும் என்பதை அவங்க மறந்துட்டாங்க. காரணம் அவங்களோட கவர்ச்சியான விளம்பர பதாகையை எல்லாரும் பார்க்கிற மாதிரி வனப்பான மரத்தில் அடிச்சாச்சுன்னு மகிழ்ச்சி. இப்படியே நூற்றுக்கணக்கான ஆணிகள் அடிச்சதுல எனக்கும் வலி தாங்கல.

 

mettupatti number 9 tamarind tree


 

ஆணிகள் அடிச்சதுல உடலெங்கும் காயம்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்கிட்டேன். இப்ப முழுமையாக இல்லன்னாலும் 99% செத்துட்டேன். இப்ப அந்த வழியாக போறவங்க இந்த 9 ம் நம்பர் மரம் பட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு, என் கிட்டக்கூட ஒதுங்க பயந்து ஓடிப் போறாங்க. நீங்களே சொல்லுங்க நானாக தற்கொலை செய்து கொண்டேனா? இல்லை என்னை கொஞ்சம் கொஞ்சமா ஆணி அடிச்சு கொன்றார்களா? ஆனால், என்னை வச்சு வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சிருக்கு. அதனால தான் இளமையா இருக்கும் போது 9 ம் நம்பர்ல இருந்த என் மீது, இயற்கைக்கு மாறான சந்தேக மரணத்திற்கான ஐபிசி பிரிவு 174 போட்டு, என் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விசாரிக்க சொல்லி இருக்காங்க.

 

மரணத்தின் கடைசி தறுவாயில் ஒரு கோரிக்கை நான் 99% உயிரிழந்துட்டேன். அதனால் என் நிழலில் நின்றவர்கள் கூட இப்ப என்னைப் பார்த்து பயந்து தூரமா போறாங்க. எனக்கே என் மீது சந்தேகம் வந்துடுச்சு. இதுவரை யாருக்கும் சிறு தீங்கும் செய்யாத நான், எந்த நேரத்திலும் என் கிளைகள் உடைஞ்சு விழுந்து சாலையில் போற யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுவேனோ என்ற அச்சம் எனக்குள்ளும் உள்ளது. அதனால என்னை வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளே என்னை கருணை கொலை செய்து மற்றவர்களை காப்பாற்றுங்கள். என்னை கருணைக் கொலை செய்வதோடு விட்டுவிடாமல் என்னோட இயற்கைக்கு மாறான மரணத்தை (ஐபிசி 174) முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நன்றாக விசாரித்து, என்னைப் போன்ற மரக்குழந்தைகளின் மேல் ஆணி அடிப்பதையும், அடியில் குப்பை கொட்டி எரிப்பதையும் தவிர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாலையோர மரக்குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற முடியும். என் மரணமே கடைசியாக இருக்கட்டும், நடவடிக்கை எடுங்கள். என்னை கருணைக் கொலை செய்து அந்த இடத்திலிருந்து அகற்றிய பிறகு, என் நினைவாக என்னைப் போல ஒரு புளிய மரக்குழந்தையை நட்டு வளருங்கள். அந்த மரக்குழந்தை வடிவில் மீண்டும் உங்களுக்கு நிழல் தருகிறேன்.

 

இதுவரை என் சோகக் கதை கேட்ட உங்க எல்லாருக்கும் நன்றிகள்.
அன்புடன்.. மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்.