Skip to main content

தி.மு.க. வெற்றி பறிபோனதில் முக்கிய காரணமாக இருந்தவர்!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இதுவரை தி.மு.க. ஏழு முறையும், அ.தி.மு.க. ஆறு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆர்.பி.மருதராஜ் 4,62,693 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தி.மு.க.வின் சீமானூர் பிரபு 2,49,645 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் பாரிவேந்தர் 2,38,887 வாக்குகள் பெற்று, தி.மு.க. வெற்றி பறிபோனதில் முக்கிய காரணமாக இருந்தார். 

தற்போது தி.மு.க. கூட்டணியில் பாரிவேந்தர் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரச்சாரத்திற்கு செல்லும்போது அவர் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்களிடையே பெரிதும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, "நலத்திட்ட உதவிகளுக்காக அரசு பணத்தை மட்டும் நம்பியிருக்காமல், என் சொந்தப் பணத்தையும் தொகுதிக்காக செலவுசெய்வேன். வெற்றி கிடைக்காவிட்டாலும் இது உறுதி. சென்றமுறை அதிக வாக்குகள் கொடுத்த மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு வாசனை திரவிய ஆலை, கலை அறிவியல் கல்லூரி கொண்டுவருவேன்'’என்று வாக்குறுதிகளை அள்ளிவீசி கவர் செய்கிறார். 

 

parivendar



மேலும், "நான் ஜெயிச்ச பிறகு ஒவ்வொரு ஆண்டும் 300 மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா இலவச கல்வி, ஆண்டுக்கு 300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன். பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, விவசாய விளைபொருட்களை நியாயமான விலைக்கு எஸ்.ஆர்.எம். நிறுவனமே கொள்முதல் செய்யும்'' என தொகுதி முழுக்க வாக்குறுதிகளாலேயே அதிக கவனம் பெறுகிறார் பாரிவேந்தர். "லால்குடி, புள்ளம்பாடி பகுதியில்தான் என் மூதாதையர்கள் வாழ்ந்தனர். என் குலதெய்வம் கல்லக்குடியை அடுத்த மால்வாய் கிராமத்தில்தான் உள்ளது'' என்று சென்ட்டிமெண்டாக பேசி கவரவும் தவறவில்லை. 

 

parivendar



அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சிவபதி, வெற்றிபெற்று எம்.பி.யாகி விட்டதுபோன்ற தோரணையிலேயே தொகுதிக்குள் வலம்வருகிறார். இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முத்திரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் தெம்பில் இருக்கிறார். இதே சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி உள்ளிட்ட பலரும் சீட்டுக்கு அடிபோட்டும், எடப்பாடியுடன் நெருங்கிப் பழகுபவர் மற்றும் செலவு செய்வார் என்பதாலும் சிவபதிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக செலவு செய்வதில் சுணக்கம் காட்டுவதால் அ.தி.மு.க. தொண்டர்களிடையே சோர்வைக் காணமுடிகிறது. 

 

sivapathi



வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்குவகிக்கும் முத்தரையர் சமுதாயத்தின் மூத்த தலைவர் ஆர்.விஸ்வநாதன் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கே ஆதரவு தருவார். இந்தமுறையும் அதே மனநிலையில் இருந்தவர், தனது எதிர் குரூப்பான செல்வகுமாரை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டைக்குக் கூட்டிச்சென்றதால் கடுப்பாகி விட்டார். இதனால், தனது பங்காளியும் அ.ம.மு.க. வேட்பாளருமான ராஜசேகரனுக்கே ஆதரவளிப்பதாக தெரிவித்துவிட்டார். இது அ.தி.மு.க. மட்டுமின்றி தி.மு.க.வுக்கும் பின்னடைவு என்பதால், முத்தரையர் ஓட்டு யாருக்கு என்கிற போட்டா போட்டி பெரம்பலூரில் நிலவுகிறது. 

இந்த விஷயங்களை உளவுத்துறை மூலம் அறிந்துகொண்ட எடப்பாடி, "சீட்டு வாங்குறது மட்டும் முக்கியமில்லை. ஜெயிச்சும் காட்டணும்'’என சிவபதியைக் கடிந்துகொண்டாராம். இதற்கிடையே தெய்வபக்தியில் அதீத நாட்டம் கொண்டவரான சிவபதி, கூகூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே "உங்களுக்கு வெற்றி உறுதி' என்று பூசாரி சொன்னதால் முகமலர்ச்சியுடன் இருக்கிறார் சிவபதி. 

அ.ம.மு.க. வேட்பாளரான ராஜசேகர், சென்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 31,998 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்தமுறை முத்தரையர் சமுதாயத்தின் ஆர்.வி. ஆதரவு இருப்பதால், தொகுதிக்கு 90 ஆயிரம் வாக்குகள் வீதம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் கிடைக்கும்; நமக்கே வெற்றி என்ற கணக்கில் வலம்வருகிறார். "வெற்றி பெற்றதும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வேலுமணி, தங்கமணி என எல்லோரையும் கைது செய்து ஜெயிலில் தள்ளுவதுதான் முதல் வேலை' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். 

பாரிவேந்தரும் அவரது தேர்தல் ரதத்தை ஓட்டும் தி.மு.க. மா.செ. நேருவும் படு ஸ்பீடாக இருக்கிறார்கள். 
 

Next Story

“துறையூர் பகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை” -அருண் நேரு உறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Arun Nehru confirmed Proceedings to set up a new government art college in Thuraiyur area

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய பகுதியான பச்சமலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பச்சை மலையில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு பச்சமலை டாப் - செங்காட்டுப்பட்டியில் வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:- தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற தினத்திலிருந்து துறையூர் தொகுதிக்கு ஏராளமான நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. துறையூர் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு துறையூர் - ஆத்தூர் புறவழிச்சாலை திட்டம் - 2 சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் துறையூர் பகுதிக்கு 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனி கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

திமுக வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் அடிவாரம் மற்றும் நாகலாபுரம் பகுதியில் தொழில் செய்து வரும் சிற்ப கலைஞர்களுக்கு தனி இடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துறையூர் தொகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் கலை மற்றும் அறிவியல் துறை படிப்புகளை படிப்பதற்கு தற்சமயம் திருச்சி, முசிறி, பெரம்பலூர் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு துறையூர் பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துறையூர் தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பச்சமலை பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும், மரவள்ளிக்கிழங்கு பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்படுவதுடன் கொள்முதல் நிலையமும் அமைக்கப்படும். சாலை வசதி மோசம் அடைந்ததை தொடர்ந்து அவை சரி செய்து போடப்பட்டு வருகிறது. கோம்பை வண்ணாடு ஊராட்சிகளுக்கு மருத்துவ வசதி கிடைத்திட புதிய மருத்துவமனை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுப்போம். மேலும் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள மக்களுக்காக புளியஞ்சோலையில் கிணறு வெட்டி தண்ணீர் இல்லாத கிராமப் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்திட திமுகவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்.இவ்வாறு பேசினார்.

பச்சமலை டாப் - செங்காட்டுப்பட்டியில் பிரச்சாரத்தை துவக்கிய அருண் நேரு தொடர்ந்து தண்ணீர் பள்ளம், புத்தூர், நச்சினிப்பட்டி, த. மங்கபட்டி, த. பாதர்பேட்டை, த. முருங்கப்பட்டி, கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், பி. மேட்டூர் உள்ளிட்ட உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அரசு ஆதிதிராவிடர் குழு தலைவர் மகாலிங்கம், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், திருச்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கனகராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், பேரூர் கழகச் செயலாளர்கள் நடராஜன், வெள்ளையன் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகர துணை செயலாளர் இளங்கோவன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர். இதைத்தொடர்ந்து பச்சமலையில் உள்ள தண்ணீர் பள்ளம், புதூர், நச்சிலப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு மலைவாழ் பெண்கள் சிறப்பாக வரவேற்று ஆரத்தி எடுத்து ஆதரவு தெரிவித்தனர்

Next Story

அருண்நேரு கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Arun Neru village to village campaign highlighting the achievements of the DMK government

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி  வாக்குகள் சேகரித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள  நாரணமங்கலம் கிராமத்தில் வாக்குகள் சேகரித்தார். நாரணமங்கலம் மந்தைவெளியில் திரண்டிருந்த மக்களிடையே வேட்பாளர் கே.என். அருண் நேரு பேசியதாவது:- இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் நல்ல விஷயங்கள் நிறைய கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி அனைத்தையும் நிறைவேற்றுவார்கள்.

தமிழகத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டம், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தி.மு.க.அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். 

மேலும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று, நாரணமங்கலம் மந்தைவெளியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் வேட்பாளர் கே.என்.அருண் நேரு பேசினார். தொ.மு.ச.வினர் தொ.மு.ச.கவுன்சில் பேரவை மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.கவுன்சில் பேரவை மாவட்ட  செயலாளர் ஆர்.ரெங்கசாமி ஆகியோர் தலைமையில் கிராமங்கள் தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். 

இந்த பிரச்சாரத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழுத் தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி, மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செ.வல்லபன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், கொளக்காநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் என்.ராகவன், காங்கிரஸ் கட்சி தேனூர் கிருஷ்ணன்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், ஆர்.அருண், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா, மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், கிளைச் செயலாளர் எஸ்.கே.வைத்தியநாதன், விஜயகுமார்,சின்னசாமி, சீனிவாசன், ஞானசுந்தரம், ரவி, வக்கீல், கிளை நிர்வாகிகள் பெ.வரதராஜ், செல்வக்குமார், பெ.முத்துகுமார், ரா.நிதிஷ்குமார்,பிச்சை, கலைமணி, மு.அசோக், மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, கிளைச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.