Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

தி.மு.க. வெற்றி பறிபோனதில் முக்கிய காரணமாக இருந்தவர்!

indiraprojects-large indiraprojects-mobile

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இதுவரை தி.மு.க. ஏழு முறையும், அ.தி.மு.க. ஆறு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆர்.பி.மருதராஜ் 4,62,693 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தி.மு.க.வின் சீமானூர் பிரபு 2,49,645 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் பாரிவேந்தர் 2,38,887 வாக்குகள் பெற்று, தி.மு.க. வெற்றி பறிபோனதில் முக்கிய காரணமாக இருந்தார். 

தற்போது தி.மு.க. கூட்டணியில் பாரிவேந்தர் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரச்சாரத்திற்கு செல்லும்போது அவர் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்களிடையே பெரிதும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, "நலத்திட்ட உதவிகளுக்காக அரசு பணத்தை மட்டும் நம்பியிருக்காமல், என் சொந்தப் பணத்தையும் தொகுதிக்காக செலவுசெய்வேன். வெற்றி கிடைக்காவிட்டாலும் இது உறுதி. சென்றமுறை அதிக வாக்குகள் கொடுத்த மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு வாசனை திரவிய ஆலை, கலை அறிவியல் கல்லூரி கொண்டுவருவேன்'’என்று வாக்குறுதிகளை அள்ளிவீசி கவர் செய்கிறார். 

 

parivendarமேலும், "நான் ஜெயிச்ச பிறகு ஒவ்வொரு ஆண்டும் 300 மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா இலவச கல்வி, ஆண்டுக்கு 300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன். பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, விவசாய விளைபொருட்களை நியாயமான விலைக்கு எஸ்.ஆர்.எம். நிறுவனமே கொள்முதல் செய்யும்'' என தொகுதி முழுக்க வாக்குறுதிகளாலேயே அதிக கவனம் பெறுகிறார் பாரிவேந்தர். "லால்குடி, புள்ளம்பாடி பகுதியில்தான் என் மூதாதையர்கள் வாழ்ந்தனர். என் குலதெய்வம் கல்லக்குடியை அடுத்த மால்வாய் கிராமத்தில்தான் உள்ளது'' என்று சென்ட்டிமெண்டாக பேசி கவரவும் தவறவில்லை. 

 

parivendarஅ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சிவபதி, வெற்றிபெற்று எம்.பி.யாகி விட்டதுபோன்ற தோரணையிலேயே தொகுதிக்குள் வலம்வருகிறார். இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முத்திரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் தெம்பில் இருக்கிறார். இதே சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி உள்ளிட்ட பலரும் சீட்டுக்கு அடிபோட்டும், எடப்பாடியுடன் நெருங்கிப் பழகுபவர் மற்றும் செலவு செய்வார் என்பதாலும் சிவபதிக்கு சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக செலவு செய்வதில் சுணக்கம் காட்டுவதால் அ.தி.மு.க. தொண்டர்களிடையே சோர்வைக் காணமுடிகிறது. 

 

sivapathiவெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்குவகிக்கும் முத்தரையர் சமுதாயத்தின் மூத்த தலைவர் ஆர்.விஸ்வநாதன் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கே ஆதரவு தருவார். இந்தமுறையும் அதே மனநிலையில் இருந்தவர், தனது எதிர் குரூப்பான செல்வகுமாரை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டைக்குக் கூட்டிச்சென்றதால் கடுப்பாகி விட்டார். இதனால், தனது பங்காளியும் அ.ம.மு.க. வேட்பாளருமான ராஜசேகரனுக்கே ஆதரவளிப்பதாக தெரிவித்துவிட்டார். இது அ.தி.மு.க. மட்டுமின்றி தி.மு.க.வுக்கும் பின்னடைவு என்பதால், முத்தரையர் ஓட்டு யாருக்கு என்கிற போட்டா போட்டி பெரம்பலூரில் நிலவுகிறது. 

இந்த விஷயங்களை உளவுத்துறை மூலம் அறிந்துகொண்ட எடப்பாடி, "சீட்டு வாங்குறது மட்டும் முக்கியமில்லை. ஜெயிச்சும் காட்டணும்'’என சிவபதியைக் கடிந்துகொண்டாராம். இதற்கிடையே தெய்வபக்தியில் அதீத நாட்டம் கொண்டவரான சிவபதி, கூகூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே "உங்களுக்கு வெற்றி உறுதி' என்று பூசாரி சொன்னதால் முகமலர்ச்சியுடன் இருக்கிறார் சிவபதி. 

அ.ம.மு.க. வேட்பாளரான ராஜசேகர், சென்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 31,998 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்தமுறை முத்தரையர் சமுதாயத்தின் ஆர்.வி. ஆதரவு இருப்பதால், தொகுதிக்கு 90 ஆயிரம் வாக்குகள் வீதம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் கிடைக்கும்; நமக்கே வெற்றி என்ற கணக்கில் வலம்வருகிறார். "வெற்றி பெற்றதும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வேலுமணி, தங்கமணி என எல்லோரையும் கைது செய்து ஜெயிலில் தள்ளுவதுதான் முதல் வேலை' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். 

பாரிவேந்தரும் அவரது தேர்தல் ரதத்தை ஓட்டும் தி.மு.க. மா.செ. நேருவும் படு ஸ்பீடாக இருக்கிறார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...