Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

சிரியாவைச் சிதைப்பதில் அமெரிக்கா தோற்றுவிட்டதா? 

indiraprojects-large indiraprojects-mobile

சிரியாவில் கொப்புளிக்கும் ரத்த ஊற்று! #2

 

மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள நாடுகளில் அமெரிக்கா தனது பொம்மை அரசுகளை அமைத்து, அவற்றின் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.

 

அந்த நாடுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான புதிய அரசியல் கட்சிகள் எழுச்சிபெறத் தொடங்கின. அவற்றின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க தங்களைச் சுரண்டும் அமெரிக்க முதலாளிகளுக்கு எதிர்ப்பு வலுத்தது.

 

இந்த நாடுகளுக்கு மானசீக உதாரணமாக கியூபா இருந்தது. கியூபா விதைத்த விதைகள் வெனிசூலாவிலும், பொலிவியாவிலும் மரமாக வளர்ந்தது. குறிப்பாக கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் சீடரான சாவேஸ் லத்தீன் அமெரிக்க கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

 

egypt protest

எகிப்து 

 

அதற்கு முன்னோடியாக வெனிசூலாவை உலக வங்கியின் பிடியிலிருந்து முதலில் மீட்டார். அமெரிக்க நிபந்தனைகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும், தங்களுக்குள் இருக்கிற வளங்களை பகிர்ந்துகொள்வது என்றும் சாவேஸ் தனது திட்டத்தை முன்மொழிந்தார்.

 

இது அமெரிக்காவை அதிரச் செய்தது. சாவேஸின் இந்த திட்டம் அமலாக்கப்பட்டால், தனது மேலாதிக்கம் தகர்ந்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சியது.

 

வெனிசூலாவின் எண்ணெய் வளத்தை பெரும்பகுதி நம்பியிருந்த அமெரிக்கா அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை குறி வைத்தது. ஆனால், அந்தச் சமயத்தில்தான் எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களுக்குள் கூட்டமைப்பை உருவாக்கி, எண்ணெய் விலையை தாங்களே தீர்மானிக்க முடிவெடுத்தன. குறிப்பாக இராக் அதிபர் சதாம் உசேன், லிபியா அதிபர் கடாபி, ஈரான் அதிபர் முகமது அகமதிநிஜாத் ஆகியோர் எண்ணெய்க்கு பதிலாக அமெரிக்க டாலரை ஏற்க முடியாது என்று மறுத்தனர். தங்கமாக மட்டுமே ஏற்க முடியும் என்று அறிவித்தனர்.

 

libya

லிபியா இது அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்தது. அதன் விளைவாகத்தான் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதன் தொடர்ச்சியாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இராக்கிற்கு எதிராக பல்வேறு தடைகளை பிறப்பிக்க காரணமாகியது.

 

சர்வதேச அணுசக்தி கமிஷன் உதவியோடு இராக்கிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இராக்கிடம் எண்ணெய் வாங்குவதை தடுக்க பல்வேறு தடைகளை பிறப்பித்தது. கடைசியில் இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்தபிறகு, நேட்டோ தாக்குதலை வலிந்து திணித்தது.

 

அமைதியாக இருந்த இராக்கை சீர்குலைத்து, இன்றுவரை அந்த நாட்டை ரணகளமாக்கி வைத்ததுதான் அமெரிக்காவின் சாதனை. ஆனால், இராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா விழுங்கிக் கொண்டிருக்கிறது.

 

இராக்கை விழுங்கி ஏப்பம் விட்ட அமெரிக்கா, அடுத்து ஈரானை குறி வைத்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், வடகொரியா ஆதரவுடன் அணு உலைகளை உருவாக்க திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டை சுமத்தியது. அதைத்தொடர்ந்து ஈரான் மீதும் பொருளாதார தடைகளை பிறப்பிக்க காரணமாகியது.

 

libiya man made lake

 

அமெரிக்காவின் சொல்படியெல்லாம் ஐ.நா. ஆடியது. இதன்விளைவாக ஈரான் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், தனது அணு உலைத் திட்டத்தை கைவிடுவதாக ஜனாதிபதி முகமது அகமதிநிஜா அறிவிக்க வேண்டியதாயிற்று.

 

இந்நிலையில் தனது மூன்றாவது இலக்கை அமெரிக்கா குறிவைத்தது. வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவை சீர்குலைக்க அது புதிய வழியை கண்டுபிடித்தது. அதிபர் கடாபி தனது நாட்டின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருந்தார்.

 

நாட்டின் எண்ணெய் வருமானத்தை மக்கள் அனைவரின் கணக்கிற்கும் பிரித்துக் கொடுத்தார். திருமணமான தம்பதிகளுக்கு தனி வீடு, இலவச மின்சாரம், படிப்புச் செலவு இலவசம், வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றாலும் உதவி என்று மக்கள் நல அரசாகவே செயல்பட்டது.

 

libiya man made river

 

அதுமட்டுமின்றி, பாலைவன நாட்டில் செயற்கை ஏரியை உருவாக்கி, சகாரா பாலைவனத்தின் அடியில் உள்ள நன்னீர் கடலை உறிஞ்சி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்தார். மொத்தம் அவர் கட்டத் தீர்மானி்த்தது 5 ஏரிகள். திட்டமிட்டபடி கட்டி இருந்தால் பாலைவனத்தை சோலைவனமாக்கி இருப்பார்.

 

உலக வங்கியின் உதவியில்லாமல் இப்படி ஒரு அரசாங்கத்தை நடத்திய கடாபிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தை தூண்டிவிட்டது அமெரிக்கா. ஒரு மைதானத்தில் ஆயிரக்கணக்கான கார்பரேட் இளைஞர்களை திரட்டி, தொடர்ந்து சில நாட்கள் முழக்கமிட செய்வது. அந்த போராட்டத்தை 24 மணிநேரமும் மீடியாக்களில் ஒளிபரப்பி அரசுக்கு பயங்கரமான எதிர்ப்பு இருப்பதைப் போல பில்டப் செய்வது என்ற பாணியை அறிமுகப்படுத்தியது.

 

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மத்தியில் கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்தனர். கலவரத்தை உருவாக்கினர். கலவரக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆயுத உதவியும், விமானப்படை உதவியும் கிடைத்தது. முந்தாநாள் வரை லிபியா மக்களின் தந்தையாக கருதப்பட்ட கடாபியை கலவரக்காரர்கள் படுகேவலமாக கொன்றனர்.

 

libya oil pipeline

 
 

இப்போது அந்த நாடும் கலவரபூமியாக மாறியிருக்கிறது. பொறுப்பான அரசு எதுவும் இல்லை. மிகப்பெரிய பைப்லைன்களில் செயற்கை ஆறு உருவாக்கி, பாலைவனத்தின் அடியிலிருந்து உறிஞ்சப்பட்ட தண்ணீர் ஒரு இடத்தில் உடைப்பெடுத்தது. அதைச் சரிசெய்ய முடியாமல் அமெரிக்கா ஆதரவு பொம்மை அரசு திணறியது.

 

லிபியாவில் அமெரிக்காவின் சீர்குலைவு வேலை முடிந்ததும், எகிப்தை குறிவைத்தது. அங்கு அதிபர் ஹோஸ்னி முபாரக் தலைமையிலான நிம்மதியான அரசாங்கத்துக்கு எதிராக லிபியா பாணி போராட்டத்தையே அமெரிக்கா தூண்டிவிட்டது. அதன் முடிவில் ராணுவமே எகிப்து அரசாங்கத்தை கைப்பற்றியது. ஆனால், ராணுவம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுக்கத் தவறியதால் அங்கு கலவரங்கள் தொடர்ந்தன. ராணுவத்தின் பொறுப்பில் நடைபெற்ற தேர்தலில் மோர்சி அதிபரானார். ஆனால், அவரையும் ஏற்க மறுத்து கலவரம் தொடர்ந்தது. 2011 ஆம் ஆண்டு தொடங்கிய கலவரம் 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் மேற்பார்வையில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

 

இப்படிப்பட்ட நிலையில்தான் அதே 2011 ஆம் ஆண்டு லிபியா, எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சிரியாவிலும் அரசு எதிர்ப்பு போராட்டம் என்ற பேரில் சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆஸாத்திற்கு எதிராக போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டது. ஆனால், 8 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் பல்வேறு திருப்பங்களுடன் லட்சக்கணக்கானோர் உயிர்ப்பலியுடன் தொடர்கிறது. சிரியா முழுக்க யுத்தக்களமாக மாறியிருக்கிறது. இதுவரை சுமார் 1 கோடிப் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டு பக்கத்து அரபு நாடுகளிலும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்…

 

அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட இந்த கலவரத்தில் இதுவரை நடந்தது என்ன என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…  
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...