"என் கணவர் இறந்த பொழுது எனக்கு சுத்தியும் இருட்டாயிடுச்சு. அவர் விட்டுச் சென்ற இட்லி வியாபாரத்தை எடுத்து செஞ்சேன். முதலில் பல பிரச்சனைகள். இப்பவும் பிரச்சனை இருக்கு. ஆனா, இப்போ எல்லாத்தையும் சந்திக்கிற தைரியம் இருக்கு"... அந்த அரங்கே தன்னம்பிக்கையால் அழகான பெண்களால் நிறைந்திருந்தது.
கடந்த செவ்வாய் கிழமை(27.02.2018) மாலை, மீனம்பாக்கத்திலுள்ள ட்ரிடென்ட் ஹோட்டலில் பெண்களின் வாழ்க்கை தரத்தையும்,வாழ்வாதாரத்தையும்உயர்த்த உதவும்அமைப்பானஹேண்ட் இன்ஹேண்ட் (hand inhand) அமைப்பு மற்றும் வோடோபோன் நிறுவனம் இணைந்து நடத்திய சூப்பர் மொபைல் வுமன் ஈவென்ட் (super mobile women event) நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகவோடோபோன்அறக்கட்டளை தலைவர்சோனியா ஸ்ரீவட்சா (Head, Vodafone India Foundation), மருத்துவர்உஷா ஸ்ரீராம் (Consultant, Endocrinologist) கலந்துகொண்டார்கள். மேலும் இவ்விழாவில் 'ரைஸ் பய்யர்'(Rise Buyer app) என்றசெயலியில்இணைந்து வெற்றிகரமாக சுயதொழில் செய்த100 பெண்மணிகள் கலந்துகொண்டனர். இதில் முதல்பத்து பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்களின் வாழ்வு, முன்னேற்றம், நம்பிக்கை மற்றும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், உளவியல் ரீதியான தீர்வுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த நிறுவனம் குறித்து திரு.நாராயணன் நரசிம்மன் கூறுகையில்,"ஹேண்ட் இன் ஹேண்ட் ஒரு பெரிய தொண்டு நிறுவனம்.வோடோபோன் நிறுவனம்இந்த செயலியை தமிழ்நாட்டில் யார்மூலம் செயல்படுத்தலாம் என பல நிறுவனங்களிடம் பேசினார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நிறுவனம் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம்தான். இது ஒரு பெரிய திட்டம், மூன்று வருடத்தில் முப்பதாயிரம் பெண்களுக்கு (75,000 பெண்களை தேர்ந்தெடுத்து அதில்) ஆப் மூலமாகவியாபாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இதுல இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் இதில் இருந்தபெரும்பாலானபெண்களுக்கு மொபைல் போன் பயன்படுத்தவே தெரியாது.அவுங்களுக்கு முதல்ல போன் பத்தி சொல்லிக்கொடுத்து, அதுக்கப்பறம் டச் போன் பத்தி சொல்லிக்கொடுத்து, அதன்பின் ஆப்பை பற்றிபயிற்சி கொடுப்பதுதான். இதற்கான கால அளவு மார்ச்2019ல் முடிகிறது. இந்த விழாவில் டாப் 100 பேரை அழைத்துள்ளோம். ஆனா 500 பேரு வரைக்கும்இந்த செயலியைநல்லாவே பயன்படுத்துறாங்க.நாங்க இந்தியா போஸ்ட் (india post) மற்றும் ஒருகொரியர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதால் டெலிவரி கொடுப்பது எளிதாகஇருக்கும். மற்றும் செலவு குறைவானதா இருக்கும்" என்றார்.
விருது பெற்ற பெண்களை சந்தித்தேன். தனது சொந்த தையல் கடையை வெற்றிகரமாக நடத்தி வரும் ஜெசிந்தா அக்காவிடம் பேசினேன். "எங்க ஊர் காஞ்சிபுரம்.நான் தையல் கடை வச்சுருக்கேன். அதை அப்படியே ஒருதுணிக்கடையாக டெவலப் பண்ணினேன். இதுக்கு உதவி பண்ணது ஹேண்ட் இன் ஹேண்ட்தொண்டுநிறுவனம்தான். அவுங்க எங்களுக்கு தொழில்நுட்ப ரீதியாவும், கணக்கு வழக்கு பாக்குறது, எப்படி வியாபாரம் பண்றது, அதெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. அது எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு.ரைஸ் (Rise Buyer app) செயலி மூலமா எங்க பொருட்களை விக்கிறோம், மூலப்பொருட்களையும் அதுலயே வாங்கிக்கிறோம். இதனால எங்களுக்கு வருமானம் பல மடங்கா கூடியிருக்கு. சின்ன சின்ன விஷயங்களில் இருந்து எல்லாத்தையும் அக்கறையா சொல்லிக்கொடுத்தாங்க. இப்போ இந்த ஆப் மூலமா நெறைய ஆர்டர் வந்துருக்கு.ஹேண்ட் இன் ஹேண்ட் னு ஒரு நிறுவனம் துணையா இருக்குஅப்படிங்குற நம்பிக்கையிலதைரியமாபொருளை வாங்கவும் முடியுது, விற்கவும் முடியுது. இந்த ஆப் மூலமா பொருட்களின் விற்பனை கூடியிருக்கு. அவுங்க எல்லாருக்கும் நான்நன்றி சொல்லிக்குறேன். மொத்தத்துல இப்போ தைரியமா தொழில்பண்றேன்" என்றார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சாந்தி செய்யும் பிசினஸ்வித்தியாசம். சொந்தமாக மூலிகை ஷாம்பூ தயாரிக்கிறாராம். "வெற்றி மாலை மகளிர் குழுல 2006ல இருந்துஉறுப்பினராஇருக்கேன். தியாஸ் அப்படிங்குற மூலிகை ஷாம்பூ தயாரிக்கிறதுதான் எங்க தொழில். இதுல கிட்டத்தட்ட 26 வகை இருக்கு. இந்த ஆப் மூலமா நெறைய ஆர்டர் வருது, நெறையபேர் ஆர்டர் கேக்குறாங்க.இதைநாங்ககுடும்பத் தொழிலா பண்ணிட்டு வரோம். எப்படி ஆப் மூலமா விக்கிறது, பொருளுக்குஎப்படிவிலை நிர்ணயிக்கிறது அதெல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க.
இட்லி கடை வைத்திருக்கிறார்கீதா அக்கா.அவர் எப்படி 'ஆப்'பில் வியாபாரம் செய்கிறார் என்று ஆச்சரியத்துடன் பேசினேன். அவர் இந்த ஆப் மூலமாகவிற்பதில்லை, வாங்குகிறாராம்."இங்க செங்கல்பட்டுல இருக்கேன். எங்களுக்கு இட்லி விக்கிறதுதான் தொழில். பத்து வருசத்துக்கு முன்னாடி என் கணவர் இறந்துட்டாரு. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடில இருந்து இதை நான் பாத்துக்க ஆரம்பிச்சேன். முன்னாடி எல்லா பொருட்களையும் நானா போய்தான்வாங்குவேன். இப்போ இந்த ஆப் மூலமாதேவையான பொருட்களெல்லாம்வீட்டுக்கே வந்துருது."
அரிசி வியாபாரம் செய்யும் காஞ்சிபுரம் கனிமொழி, தையல் நூல் தயாரிக்கும் ஜீவா என அனைவரும் தன்னம்பிக்கையின் முகமாக இருக்கிறார்கள்."பிசினஸில்முதல்ல நாங்க எல்.கே.ஜி.யா(L.K.G.)இருந்தோம், இப்போ காலேஜா ஆகியிருக்கோம்", சிரித்துக்கொண்டே கூறினார் ஜீவா.இந்தியாவில் பெண்களும் முதலில் வேறாய்தான் இருந்தார்கள், இப்பொழுது முற்றிலும் வேறாக வளர்கிறார்கள். இன்னும் பெண்களை மறைமுகமாக ஒடுக்கும், வேலைக்கு செல்லும் இடங்களில் மிரட்டும், பயன்படுத்தும் ஒருதேசத்தில், தன்னம்பிக்கையை விதைக்க வேண்டியது, தொடர்ந்து செய்யப்பட வேண்டிய பணி. செய்து வரும் இவர்களுக்கு நன்றி.