Skip to main content

எச்.ராஜாவின் பேச்சு பாஜகவுக்கே அவமானம்: நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: சுப.வீரபாண்டியன் பேட்டி

Published on 06/03/2018 | Edited on 06/03/2018


 

h.raja facebook


எச்.ராஜாவின் பேச்சு பாஜகவுக்கே அவமானம் என்றும், நாளை எச்.ராஜாவையும் பாஜகவையும் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடசர் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்படும் பொழுது பாரத் மாதா கீ ஜெய் எனவும் பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். 
 

லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில்,
 

லெனின் யார்
அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு
கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு
லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில்
இன்று திரிபூராவில் லெனின் சிலை
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை

என குறிப்பிட்டுள்ளார்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன்,
 

நாட்டின் வன்முறையை தூண்டும் எச்.ராஜாவையும், பாஜகவையும் கண்டித்து நாளை காலை 11 மணிக்கு பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறோம் என்றார். 
 

மேலும் பேசிய அவர், திரிபுராவில் லெனின் சிலையை சேதப்படுத்தியதற்கு திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். லெனின் உலகத் தலைவர்களில் ஒருவர். மாபெரும் சிந்தனையாளர். அவருடைய சிலையை உடைப்பது என்பதே ஒரு அவமானம். லெனினுக்கும் இந்தியாவிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார். தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சாரத்தை இவர்கள் யாரும் இனி பயன்படுத்த மாட்டார்களா. இதுபோன்ற கருத்துக்கள் அடிப்படை நாகரீகம் இல்லாதவை. வன்முறையை தூண்டக் கூடியவை. 
 

பெரியார் சிலையையும் உடைப்போம் என்கிறார் எச். ராஜா. நாளை ஆட்சி வந்தால் என வீராதி வீரர்கள் காத்திருக்க வேண்டிய தேவை என்ன. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்றால் இப்போதே உடைத்து பார்க்கட்டும். தமிழ்நாட்டில் அது என்னவாகும் என்பதை உடைத்ததற்கு பிறகு அவர்கள் அறிந்து கொள்வார்கள். இதுபோன்ற வன்முறைப் பேச்சை ஒரு கட்சியின் தேசிய செயலாளர் பேசுகிறார் என்றால் அந்த கட்சியும் அதனை பார்த்துக்கொண்டிருக்கிறது என்றால், இதைவிட அந்தக் கட்சிக்கு அவமானம் என்ன இருக்க முடியும்.
 

suba veerapandian


எனவே இதனை வேடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது. யாரோ ஒருவர் தெருவில் போகிறவர் பேசின பேச்சு என்று கருத முடியாது. ஆகவே தமிழகம் முழுவதும் திரண்டு எழுந்து இதனை கண்டிக்க வேண்டும். நாளை காலையிலேயே சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு அருகே அத்தனை இன உணர்வாளர்களும், ஜனநாயகத்தை விரும்புகிறவர்களும், அமைதியை விரும்புகிறவர்களும், சமூக நீதியை, பெண் விடுதலையை போற்றுகிறவர்கள் அத்தனை பேரும் ஒருங்கிணைந்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கு காவல்துறை மறுக்குமானால் அந்த அரசு பெரியாருக்கு நியாயம் செய்கிறதா இல்லையா என்பது தெரிந்து போகும். இவ்வாறு கூறினார். 
 

Next Story

“முதல்வர் சீரியசாக ஏதும் செய்தால் மத்திய அரசின் நடவடிக்கையும் சீரியசாக இருக்கும்” - ஹெச். ராஜா

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
H.Raja says If the Chief Minister does something seriously, the action of the Central Government will also be serious

2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 31 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பாஜக கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி இன்று (10-02-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என யாராவது சொன்னால், அந்த அரசாங்கம் இந்திய சட்டப்படி நடத்தப்படவில்லை என பொருள்.

இந்திய அரசியல் சட்டப்படி நடக்கவில்லை எனில் என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்பது ஸ்டாலினுக்கு தெரியும். ஏனெனில் 1976ல் அவரது அப்பா நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சீரியசாக ஏதும் செய்தால் மத்திய அரசின் நடவடிக்கைகளும் சீரியசாக இருக்கும்” என்று கூறினார்.

Next Story

சனாதனம்.. தேர்தல் தோல்வி..! - சுப. வீரபாண்டியன்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Sanathanam.. election failure..! - Suba.  Veerapandian

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில், பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றுவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியது என்றும் சில ஊடகங்கள் எழுதுகின்றன. மக்களில் ஒரு பகுதியினரும் அதனை நம்புகின்றனர். ஐந்து மாநிலங்களில், மூன்றில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்பதை வைத்து இப்படி விமர்சனங்கள் வெளிப்படுகின்றன. அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சில உண்மைகளை வேறு சில கோணங்களில் பார்த்தால்தான், உண்மை நமக்கு புரியும் என்கிறார் திராவிடர் கழக மூத்த தலைவர் சுப.வீரபாண்டியன்.

மேலும் அவர், இந்தத் தேர்தல் முடிவுகளை விமர்சனம் செய்யும் வலதுசாரிகள், இது பா.ஜ.க.வின் வெற்றி என்றும், காங்கிரஸின் தோல்வி என்றும் சொல்வதோடு நிறுத்திவிடாமல், சனாதனம் பற்றி உதயநிதி பேசியதால்தான் காங்கிரஸ் இப்படி ஒரு தோல்வியைச் சந்தித்தது என்றும் சேர்த்துச் சொல்கிறார்கள். அங்குதான் இருக்கிறது ஒரு நுட்பமான பஞ்சகம். இந்தக் கூற்றுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, தேர்தல்களில் கட்சிகள் பெற்ற இடங்களை மட்டும் பார்க்காமல், அவை பெற்ற வாக்குகளையும் நாம் கொஞ்சம் பார்க்கலாம்!

இதோ அந்தப் புள்ளி விவரம், வாக்குகளின் எண்ணிக்கையைச் சற்று கூர்ந்து கவனித்தால், சில உண்மைகள் நமக்குப் புரியும்!

தெலங்கானா, மிசோரம் இரண்டு மாநிலங்களையும் விட்டுவிட்டு பா.ஜ.க. வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் மட்டும் இரண்டு கட்சிகளும் (பா.ஜ.க., காங்கிரஸ்) பெற்றிருக்கும் வாக்குகள் 4.48 கோடியும், 3.98 கோடியும் ஆகும். அதாவது பா.ஜ.க. மூன்று மாநிலங்களிலுமாகச் சேர்த்து 50 லட்சம் வாக்குகள் மிகுதியாக பெற்றிருக்கிறது. இது பெரிய வெற்றிதான், நாம் மறுக்கவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் பெற்றுள்ள வாக்குகளையும் சேர்த்துத்தானே பார்க்க வேண்டும். மிசோரமிலாவது இரண்டு மாநிலக் கட்சிகளுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவியது. ஆனால் தெலங்கானாவில் அப்படி இல்லை. எனவே தெலங்கானாவில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளை மட்டுமாவது நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

அப்படிப் பார்க்கும்போது, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 92 லட்சம் வாக்குகளையும், பா.ஜ.க. வெறும் 32 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளன. இரண்டுக்கும் இடையில் 60 லட்சம் வாக்குகள் வித்தியாசம். இப்போது நான்கு மாநிலத் தேர்தல்களிலும், இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 10 லட்சம் வாக்குகள் பா.ஜ.க.வைவிட கூடுதலாகப் பெற்றிருப்பது புலப்படும். மிசோரமில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டினால், காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் மேலும் கூடுதலாக ஆகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது, காங்கிரஸ் தோற்றுவிட்டது என்று சொல்வது எப்படி முழு உண்மை ஆகும்?

இவற்றைத் தாண்டி, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லாத உதயநிதியை உள்ளே இழுத்துக்கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசிய காரணத்தால்தான், காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது என்று, வெட்கமே இல்லாமல் ஒரு பொய்யைச் சொல்கின்றனர். அதாவது, சனாதனத்தின் மீது ஒரு சிறு விமர்சனத்தை முன்வைத்தால் கூட, மக்கள் எதிராகத் தீர்ப்பளித்துவிடுவார்கள் என்பது போன்ற ஓர் அச்சுறுத்தலை உருவாக்குவதுதான் அதன் உள்நோக்கம்.

சனாதனத்தை விமர்சித்ததால் தான் இப்படித் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன என்னும் முழுப் பொய்யை, உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட, சனாதனத்தை எதிர்த்த உதயநிதி ஆதரித்த காங்கிரஸ் கட்சி தானே 10 லட்சம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அப்படியானால், சனாதனத்தை எதிர்ப்பதைத்தான் பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று நாம் முடிவுக்கு வந்துவிடலாமா?

சனாதன ஆதரவோ, எதிர்ப்போ இந்தத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு வரவில்லை என்பதுதான் உண்மை. பிறகு ஏன் அவர்கள் இப்படி ஒரு காரணத்தைக் கற்பிக்கின்றனர்? அங்குதான் அவர்களின் உள்நோக்கமும், மத அடிப்படையிலான பாசிசமும் தொக்கி நிற்கின்றன. கடவுள், மதம், வழிபாட்டு முறைகள் ஆகியனவெல்லாம் அவரவருடைய தனிப்பட்ட நம்பிக்கை, வாழ்க்கைச் சூழல், அனுபவத்தைப் பொறுத்தவை. ஆனால் பா.ஜ.க., திட்டமிட்டு மத அடிப்படையிலான அரசியலை இங்கு கட்டமைக்க விரும்புகிறது. இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களுக்கான கட்சி தங்களின் கட்சி மட்டும் தான் என்பது போலவும், பிற கட்சிகள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவை என்பது போலவும் ஒரு கருத்தை அவர்கள் உருவாக்க விரும்புகின்றனர். அப்படி செய்வதன் மூலம், பெரும்பான்மையினரின் வாக்குகளைத் தாங்கள் பெற்றுவிட முடியும் என்பதே அவர்களின் எண்ணம்.

இந்த மதவாத அரசியலைத் தமிழ்நாட்டிற்குள்ளும் கொண்டு செலுத்திவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் திரும்பத் திரும்ப ஒரு கேள்வியை இங்கு அவர்கள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற மத விழாக்களுக்கு எல்லாம் வாழ்த்துகளைச் சொல்லும் தி.மு.க.வும், தமிழ்நாடு அரசின் முதல்வரும் ஏன் தீபாவளி உள்ளிட்ட இந்து மக்களின் விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதுதான் அந்த கேள்வி. நீண்ட நெடுநாட்களாக இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த கேள்விக்கான உண்மையான விடையை, உள்நோக்கமுடைய அவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றாலும், பொது மக்களுக்கு நாம் சொல்லியாக வேண்டிய கடமை இருக்கிறது. மற்ற மத விழாக்கள் எல்லாம், அவர்களின் இறைத்தூதர்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடும்போது, தீபாவளி என்பது ஒருவரைக் கொன்ற நாளைக் கொண்டாடுவதாக இருக்கிறது. அடுத்தவன் சாவைக் கொண்டாடும் அந்தப் பழக்கம் எப்போதும் தமிழர்களிடம் இல்லை. அது மட்டுமல்லாமல், இந்துக்களின் விழாக்களில் பெரும்பான்மையானவை, தேவ - அசுர யுத்தம் என்னும் கற்பனையில் உருவானவையாகவே உள்ளன.

தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் இங்கு குறிப்பிடப்படுகின்றவர்கள் யார் என்னும் வினாவிற்கு, அவர்களால் உண்மையான, தெளிவான விடையை ஒரு நாளும் சொல்ல முடியாது. பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போரினையே அவர்கள் தேவ அசுர யுத்தம் என்கின்றனர். இதை ஆரிய திராவிடப் போர் என்பார் ஜவஹர்லால் நேரு.

இன்னொன்றையும் நாம் பார்க்கலாம். இயேசுநாதர், நபிகள் ஆகியோர் வரலாற்று மனிதர்கள். பிள்ளையார், ராமர், கிருஷ்ணர் ஆகியோர் புராணப் பாத்திரங்கள். இரண்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. வரலாறு என்பது உண்மை, புராணம் என்பது நம்பிக்கை. ஒருவர் நம்பிக்கையை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது, நாகரிகமும் இல்லை - ஜனநாயகமும் இல்லை.

இறுதியாக, "சூத்திரர்கள் யார்?' என்னும் நூலில், அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ள சில வரிகளோடு, இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம். "மேலை மதங்களின் பிரபஞ்சத் தோற்றம் குறித்த கருத்தாக்கத்தில், மனிதன் முக்கியத்துவம் பெறுகிறான். ஆனால் இங்கோ, ஒரு வருணம் அல்லது சாதி தான் அடிப்படை அலகாக இருக்கிறது'' என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

ஆம்! இந்து மதம் என்பது கடவுளை விட, மதத்தை விட, வழிபாட்டு முறைகளை விட வருணத்தையும், சாதியையும்தான் தூக்கிப் பிடிக்கிறது. சாதி அடுக்குகளைக் கொண்டே, இந்து மதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்னும் உண்மையை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும். அதை உணரும்போதுதான், பா.ஜ.க. என்பது பாசிசத்தின் மறுவடிவம் என்பதையும் நம்மால் உணர முடியும்.