Skip to main content

காவல்துறையினரே, எச்.ராஜா கூறியதை உண்மையாக்கிவிடாதீர்கள்... 

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
h raja

 

 

பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா... சர்ச்சை ராஜா என்பது கூடுதல் சிறப்பு. அவர் இப்போது மட்டுமல்ல காலங்காலமாகவே அவர் அப்படித்தான். சமீபத்தில் அவர் 'உயர்நீதிமன்றமாவது ***வது' எனக் கூறியிருப்பதும், 'வெக்கமா இல்லை, ஒட்டுமொத்த காவல்துறையும் ஊழலில் திளைத்துள்ளது, லஞ்சம் வாங்கிட்டு இருக்கீங்களே' என்றெல்லாம்  கூறி சர்ச்சையை கிளப்பினார். இதற்குமுன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை தரம் தாழ்ந்து விமர்சித்தார். அதற்குமுன் பெரியார் சிலையை உடைப்போம் என்றார். அவர்மீது வழக்குப்பதிவு செய்ததே பெரிய விஷயம் என்கின்றனராம் சட்டத்தின் காவலர்கள்.


நீதிமன்றத்தை அவமதித்ததால் எச்.ராஜா மீது 8 பிரிவின்கீழ் வழக்குகள் பதியப்பட்டது. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல், வேடசந்தூரில் நேற்று, இந்து முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில் எச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது பேசிய தொண்டர் ஒருவர் 'எச்.ராஜா தலைமறைவா, எங்க சிங்கம் இங்க உக்காந்திருக்குடா, உங்க கண்ணுக்கு தெரியுதா?' என ஆவேசப்பட்டார். அதைத்தொடர்ந்து பேசிய எச்.ராஜா 'அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கின்றனர். இந்த அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பெண்களை விலைபேசி விற்பவர்கள் போலத்தான்' என்று கூறியுள்ளார். இவற்றைத் தவிர இன்னும் ஸ்பெஷல் ஐட்டங்களும் உள்ளன. எஸ்.வி.சேகரும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு அதற்காக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை அவரைத்தேடிக் கொண்டிருக்கின்றனர், எதிரே வைத்துக்கொண்டே.
 

'ஃபாசிச பாஜக ஒழிக' என்று விமானத்தில் சோபியா கூறியதற்காக அடுத்தடுத்த நிமிடங்களில் உடனுக்குடனே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. திருமுருகன் காந்தி, வளர்மதி, போன்றோர் இன்னும் அதிகமாக தண்டிக்கப்படுகின்றனர். ஆனால் ராஜாக்களையும், சேகர்களையும் கண்முன்னே வைத்துக்கொண்டே ஊரெல்லாம் தேடுகின்றனர். பிரிவினைவாதம் பேசுகிறார்கள், பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என பலரை கைதுசெய்துகின்றனர். இவர்கள் மதங்களை வைத்து பேசுவது, பேசியதுதான் மிகப்பெரிய பிரிவினைவாதம்.  இவர்களைப் போன்றோரை கைது செய்யாமல், நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எச்.ராஜா கூறியது உண்மையாகிவிடும்.