Skip to main content

குஜராத் பீதியில் குறைந்தது ஜிஎஸ்டி!

Published on 11/11/2017 | Edited on 11/11/2017
குஜராத் பீதியில் குறைந்தது ஜிஎஸ்டி!

ஒரு பக்கம் குஜராத் தேர்தல்... மறுபக்கம் உ.பி.உள்ளாட்சி தேர்தல்... பீதியில் பாஜக... குறைந்தது ஜிஎஸ்டி என்று இந்திய மக்கள் பாட்டுப் பாடுகிறார்கள்.

குஜராத் மக்களுக்கு நன்றி என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். உண்மைதான் என்ன?

ஜிஎஸ்டி விவகாரத்தில் பாஜக வகையாக சிக்கிக் கொண்டது. எதிர்க்கட்சிகள் சொன்னதையோ, நிபுணர்கள் சொன்னதையோ காது கொடுத்து கேட்கவில்லை. தான் நினைத்ததே சரி என்று ஜிஎஸ்டி வரிவிதிப்பை பிடிவாதமாக அமல்படுத்தியது.

அதன்பிறகுதான் குழப்பங்களே அதிகரித்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பை புரிந்துகொள்ள முடியாமல் மக்கள் தவித்தார்கள். ஜிஎஸ்டி வரிபோடாத இடங்களாக வாடிக்கையாளர்கள் தேடி அலைந்தார்கள்.


ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு 69 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட நிலையில் வெறும் 12 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்துவதாக அரசு தெரிவிக்கிறது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்த்ததோ அது நடக்கவில்லை. அதுமட்டுமின்றி, ஏற்கெனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்த தொழில்கள் முழுவதும் மூடும் நிலை உருவானது.

ஆனால், தனியார் அல்லது அரசு துறைகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு ஜிஎஸ்டியை ஆஹா என்றும்.., பணமிழப்பு நடவடிக்கையை ஓஹோ என்றும் பாஜக பக்தர்கள் பேசி வந்தனர்.

அத்தகைய நபர்களுக்கு சாமான்யர்களே நறுக்கென்று பதில் அளிக்கும் நிலையை பார்க்க முடிந்தது.

"நீங்க சொந்தமா முதல் போட்டு, ஒரு வியாபாரம் செய்திருந்தால், வியாபாரிகள் படும் அவலங்கள் புரியும்.. மாத மாதம் ஜிஎஸ்டி கட்டிவிட்டு, அதை திரும்ப எப்பொழுது வாங்க போகிறோமென தெரியாமல், அடுத்த மாதம் ஜிஎஸ்டி கட்ட கடன் வாங்கி கட்டிக்கொண்டே இருப்பதா ? அல்லது தொழில் செய்வதை பற்றி யோசிப்பதா ? மாத மாதம் பணம் கொட்டுவது அனைத்து தொழில்களிலும் இல்லை.. பணம் வருவதற்கு 30 நாள் முதல் 90 நாள் வரை க்ரெடிட் தொழில்கள் ஏராளம்.. அவர்கள் அடுத்த கொள்முதலுக்கு பணத்திற்கு எங்கே போவது ? கடன் மீது கடன் வாங்கி வட்டி கட்டுவதா அல்லது தொழில் செய்வதா ?" என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல ஆளே இல்லை.

அதுபோக, டெக்ஸ்டைல்ஸ், பஸ் பாடி கட்டுவது போன்ற கரூர் தொழில்கள் கிட்ட தட்ட நின்றே  விட்டன.. இதையடுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடு மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மையை சந்திக்க போகிறது என்று தெளிவுபடுத்தினார்கள்.

அதை பற்றியெல்லாம் கவலைப் படாமல் வெறும் கையில் முழம் போட்டுக்கொண்டு, ஏசி அறையில் அல்லது மொட்டைமாடியில் உட்காந்து கொண்டு மோடிக்கு பாராட்டு பத்திரம் வாசித்தவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் இப்போது திடீரென்று ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தினார்கள்.

நள்ளிரவில் இன்னொரு விடுதலை திருநாள் லெவலுக்கு பில்டப் செய்தார்கள். ஆனால், வியாபாரிகளும், சிறு மற்றும் குறு தொழில் உரிமையாளர்களும் கொந்தளித்துள்ள நிலையில் பாஜக அரசு கடந்த மாதமே, ஜிஎஸ்டி வரியில் மாற்றம் இருக்கும் என்று மறைமுகமாக அறிவித்தது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்திருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பை ராகுல்காந்தி கடுமையாக சாடிவருகிறார். அவருடைய கூட்டங்களுக்கு மக்கள் திரளுவதைக் கண்டு பாஜக பீதியடைந்திருக்கிறது.

பாஜகவின் பாரம்பரியமான ஆதரவாளர்களான பனியாக்களும், பட்டேல்களும் எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளனர். அவர்கள்தான் மோடியின் நடவடிக்கைகளால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள்.

இவர்களுடைய ஆத்திரத்தை குறைப்பதற்காகவே 28 சதவீத வரிவிதிப்புக்கு உள்ளான 178 வகை பொருட்களை 18 சதவீத வரிவிதிப்பு பட்டியலுக்கு மாற்றியிருக்கிறார்கள். இன்னமும் 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, 28 சதவீத வரிவிதிக்கப்பட்ட 2 வகைப் பொருட்களுக்கு 12 சதவீத வரியாகவும், 18 சதவீதம் வரி விதிக்கப்பட்ட 13 பொருட்களுக்கு 12 சதவீதமாகவும், 18 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த 6 பொருட்களுக்கு 5 சதவீதமாகவும், 12 சதவீதம் வரி விதிக்கப்பட்ட 8 பொருட்களுக்கு 5 சதவீதமும், 5 சதவீதம் வரி விதிக்கப்பட்ட 6 பொருட்களுக்கு 0 சதவீதமும் புதிதாக வரி திருத்தப்பட்டுள்ளது.

இதைத்தான் காங்கிரஸும் மற்ற கட்சிகளும் தொடக்கத்திலேயே வற்புறுத்தின. ஆனால், பாஜக அரசு கேட்கவில்லை. நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு, அதுவும் 18 சதவீதம்தான் அதிகபட்சமான வரிவிதிப்பு என்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், அந்த வரிவிதிப்பை குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் மோடி கடுமையாக எதிர்த்தார்.

"எனது பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டி வரி அமல்படுத்த முடியும்" என்று கடுமையாக பேசினார் மோடி.

அவர்தான், பின்னர் பிரதமரானவுடன் நாடு முழுவதும் நான்குவிதமான வரி, அதிகபட்சமாக 28 சதவீத வரி என்று தீர்மானித்தார்.

இப்போது, மக்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்ப்பு காரணமாக, தனது கட்சியின் தேர்தல் ஆதாயத்துக்காக திடீரென்று வரிவிதிப்பு விகிதங்களை மாற்றி அமைத்திருக்கிறார்.

ஆனால், இதெல்லாம் குஜராத்தில் செல்லுபடியாகுமா என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் தெரியவரும்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்