Skip to main content

குஜராத்தில் தேர்தல் ஆணையத்தின் விளையாட்டு: விஜயதாரணி கருத்து

Published on 18/12/2017 | Edited on 18/12/2017
குஜராத்தில் தேர்தல் ஆணையத்தின் விளையாட்டு: விஜயதாரணி கருத்து



குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ந் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடந்தது. குஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக ஆளும் பா.ஜ.க இம்முறையும் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம், தொடர்ந்து 6-வது முறையாக அம்மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியமைக்க உள்ளது.

பாஜக வெற்றி பெற்றது குறித்து தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கொறடா விஜயதாரணி கூறியதாவது,

22 வருடம் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சி 77 எம்எல்ஏக்களை கொண்டு வந்தது மிகப்பெரிய சாதனை. மிக நெருக்கடியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் அந்த நெருக்கடியை கொடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டதாக தெரியவில்லை. முழுக்க முழுக்க பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் துணை போயிருக்கிறது. அங்கு ப்ளு ட்டூத் மூலமாக ஓட்டு போட்டதெல்லாம் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. தவறான நடைமுறைகளை பின்பற்றி புறவாசல் வழியாக ஒரு ஆட்சியை பாஜக பிடித்துள்ளது. 

ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?

அதே ஏமாற்று வேலைகளால்தான் அவர்கள் முன்னிலையில் உள்ளார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?. மக்கள் அபரீதமாக இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கக் கூடிய இடத்தில் மத்திய பாஜகவும், தேர்தல் ஆணையமும் இருக்கிறது. மோடியின் சொந்த மாநிலத்தில் பாஜக தோல்வி அடையக் கூடாது என்பதற்காக அவர்கள் ஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளார்கள். 

விஜய் ரூபானி காலையில் பின்னடைவாக இருந்தார். எப்படி அதற்குள்ளாக வெற்றி பெற்றார். முதல் அமைச்சர் வேட்பாளர் விஜய் ரூபானி தோற்றால் மிகப்பெரிய அவமானம் என்பதால் தேர்தல் ஆணையம் விளையாடி இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்