Skip to main content

பாரம்பரிய பட்டாசுகள் vs பசுமை பட்டாசுகள் எது Best???

Published on 06/11/2018 | Edited on 06/11/2018
diwali

 

 

பாரம்பரிய பட்டாசுகள் என்பது நாம் வழக்கமாக வெடித்து வரும் உள்நாட்டு தயாரிப்பு பட்டாசுகள்தான். இவை அதிக சத்தத்துடனும், அதிக புகையுடனும் வெடிக்கிறது. காலங்காலமாக நமக்கு அது பழக்கப்பட்ட வெடிதான். லட்சுமி வெடி, ஆட்டோபாம், சரவெடி, கம்பி மத்தாப்பு, ராக்கேட், புஷ்வானம், சங்கு சக்கரம் இவையெல்லாமே பாரம்பரிய பட்டாசுகள்தான். இவைகளிலேயே சீனப் பட்டாசுகளும் உள்ளன. இவை முற்றிலும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பவை. 
 

நாம் தற்போது தெரிந்துகொள்ள வேண்டியது பசுமை பட்டாசுகளைப் பற்றிதான். பசுமை பட்டாசுகள் என்றவுடன் தீபாவளியே ‘புஷ்’னு போயிரும், என நினைக்கவேண்டாம். பசுமை பட்டாசுகளும், பாரம்பரிய பட்டாசுகளைப்போலவேதான் இருக்கும். ஆனால் சிறு,சிறு வித்தியாசங்கள் உள்ளன. பாரம்பரிய பட்டாசுகளைப்போல் பசுமை பட்டாசுகள் அதிக மாசை ஏற்படுத்தாது. சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40% முதல் 50% வரை குறைவான நச்சுவாயுவையே வெளியிடும். அதனால் இவை முற்றிலும் ஆபத்தற்றவை எனக்கூற முடியாது. மாசை கணிசமான அளவு குறைக்கும்.
 

வழக்கமான பட்டாசுகள் வெடிக்கும்போது கந்தகம், நைட்ரஜன், சல்ஃபர் போன்ற ஆபத்தான வாயுக்கள் வெளியாகும். இதனால் சுற்றுச்சூழல், உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கேடுதான். ஆனால் இந்த பசுமை பட்டாசுகள் வெடித்தபின் புகையாக மாறாமல் நீர்த்துளிகளாக மாறிவிடுகின்றன. இதனால் கந்தகம், நைட்ரஜன், சல்ஃபர் வாயுக்கள் நீருடன் கலந்துவிடுகின்றன. இந்த தொழில்நுட்பம் நாம் ஏற்கனவே பார்த்ததுதான். டெல்லியில் மாசு அதிகரிக்கும்போதெல்லாம் தண்ணீர் தெளிப்பார்கள் அப்போது அந்த மாசுக்களெல்லாம் நீரோடு கலந்துவிடும். மாசின் அளவும் குறைந்துவிடும். இதேபோல்தான் பசுமை பட்டாசுகளும் செயல்படுகின்றன.
 

இந்த பசுமை பட்டாசுகளை ‘நீரி’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை எந்த நாடும் பசுமை பட்டாசுகளை பயன்படுத்தியதில்லை. இந்தியா இந்த பட்டாசுகளை பயன்படுத்தினால் உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழும். உலகுக்கே சுற்றுச்சூழல் பாதுகாப்பு + கொண்டாட்டம் சேர்த்து எப்படி கொண்டாடுவது என்பதை கற்றுக்கொடுக்கும். இதற்கு நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அடுத்த வருடம் முதல் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதனால் பட்டாசு தொழில் பாதிக்கப்படுமே என நினைக்க வேண்டாம். பசுமை பட்டாசுகளை எப்படி தயாரிப்பது என கற்றுக்கொடுத்துவிட்டால் அதை அவர்களே தயாரிக்க தொடங்கிவிடுவர். இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பலவகையில் நன்மை விளையுமே தவிர தீமை விளையாது.
 

இந்த உலகத்தில் நாம் மட்டும் வாழவில்லை. அனைவருக்கும் நம்மளவு உடல் வலிமையும், நலமும் இல்லை. நமக்கு இந்த பட்டாசு கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியாத, கொண்டாடியே தீர வேண்டியதாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு அது வருடத்தில் ஒரு நரக நாள். குறிப்பாக மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச பாதிப்பு உள்ளவர்களுக்கு அந்த நாள் மரணத்தோடு போராடும் 1440 நிமிடங்கள். அவர்களுக்கு மட்டுமில்லை விலங்குகளுக்கும் அந்த நாள் ஒரு கடினமான நாளாகவே இருக்கும். உலக அளவில் பேசப்பட்டிருக்கும் பிரச்சனையான சுற்றுச்சூழல் மாசும் இதனால் அதிகமாகும். இதற்காக முற்றிலுமாக பட்டாசே வெடிக்கக்கூடாது என்று கூறவில்லை, அப்படி ஒரு முடிவிருந்தால் அது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான், முடிந்தவரை பட்டாசு வெடிப்பதை குறைக்கலாம். பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவோம்.


அனைவருக்கும், அனைத்திற்கும் பாதுகாப்பான தீப ஒளி திருநாளை கொண்டாட முன்வருவோம்.