Skip to main content

சென்னையில் இருக்கும் மக்கள் எல்லாம் எங்கிருந்து வந்தவர்கள்... கரோனா பரவ சென்னை தான் காரணமா..? - பத்திரிகையாளர் கோவி. லெனின்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

fg

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது மிக அதிகமாக இருந்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் அதன் தாக்கம் என்பது அதிக அளவில் இருந்து வருகின்றது. இதனால் சென்னையில் இருந்து செல்பவர்களை மற்ற ஊர்களில் வேண்டாத விருந்தாளியாகப் பார்க்கிறார்கள். சென்னையில் இருக்கும் மக்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள், உண்மை தன்மை என்ன என்பது பற்றி பேசுகிறார் பத்திரிகையாளர் கோவி.லெனின். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, 

 

சென்னை பல்வேறு இயற்கை இடர்பாடுகளைச் சந்திந்துள்ளது. அதில் இருந்து மீண்டும் வந்துள்ளது. தற்போது கரோனா பிடியில் சென்னை சிக்கித் தவித்து வருகின்றது. சென்னை தவிர அதன் அருகில் உள்ள மாவட்டங்களையும் தற்போது கரோனா மேகம் சூழ்ந்துள்ளது. சென்னையில் இருந்து ஊருக்குச் செல்பவர்களை அந்தந்த ஊரில் இருக்கும் நபர்கள் இங்கே வராதீர்கள் என்று சொல்வதைச் சமூக வலைத்தளங்களில் நாம் காண முடிகின்றது. சென்னைவாசிகள் என்றாலே பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் பலரை கைத்தூக்கி விட்டுள்ளது சென்னை. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

"வந்தாரை வாழவைக்கும் சென்னை, அப்படி என்று நாம் இதுவரை பெருமையாகச் சொல்லி வந்தோம். முன்பு எல்லாம் சென்னைக்குச் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள், தற்போது சென்னையை விட்டுச் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளோம். மீம்ஸ்கள் நிறைய இந்த மாதிரி போடுகிறார்கள். இது அனைத்தையும் சென்னையில் இருந்து அனைவரும் கற்றுக்கொண்டதுதான். ஆனால் தற்போது வேறு ஊர்களில் இருந்து அதனைப் போடுகின்றோம். சென்னை தற்போது பாவப்பட்ட, பரிதாபத்திற்குரிய நகராக தற்போது மாறியுள்ளது. கரோனா தொற்று தமிழகத்தைப் பொறுத்த வரையில் 60 ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. 

 

சென்னையில் இருந்துதான் மற்ற பகுதி மக்களுக்கு கரோனா பரவுகின்றது என்ற அச்ச உணர்வு எல்லா பகுதி மக்களுக்கும் தற்போது வந்துள்ளது. சில கிராமங்களில் தண்டோரா போடப்படுகின்றது. சென்னையில் இருந்து யாராவது வந்தால் எங்களுக்குத் தகவல் சொல்லுங்கள், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த தண்டோரா மூலம் கூறியிருக்கிறார்கள். தமிழகத்தின் நிலைமை தற்போது இப்படித்தான் இருக்கின்றது. சொந்த ஊராக இருந்தாலும் சென்னையில் இருந்து அங்கே செல்ல முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்படி என்றால் சென்னையில் இருக்கிறவர்கள்தான் கரோனாவை பரப்புகின்றார்களா என்ற கேள்வி இயல்பாகவே நம்மிடம் வருகின்றது. 

 

சென்னை என்பதே ஒரு கிராமம். 300 ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு கிராமப்பகுதியாக இருந்த இடம் தான். இது ஒரு கடற்கரை கிராமம். இன்னும் சொல்லப்போனால் நெய்தல் நிலம் என்று சொல்லக்கூடிய பகுதியாக இருந்த ஒரு கிராமம். கடலும் கடல்சார்ந்த பகுதியாக இருந்த ஒரு இடம்தான் சென்னை. மீனவர்கள்தான் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள். இங்கு நடக்கும் திருவிழாக்கள் கிராமத்தில் கூட நடைபெறாத வண்ணம் சிறப்பாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு இடமாகவே இந்தச் சென்னை இன்றைக்கும் இருந்து வருகின்றது. சென்னையில் இருந்து வருபவர்கள் எல்லாம் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று தற்போது கூறுகிறார்கள், இவர்கள் எல்லாம் யார், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தானே, அங்கே இருந்து இங்கே வந்துவிட்டு சென்னையைக் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கும்" என்றார்.