Skip to main content

உலகமே கரோனாவை நோயாகப் பார்த்தது... மதவாதிகள் அதனைத் தப்லீக், பப்ளிக் என்று பிரித்துப் பார்த்தார்கள் - கோவி.லெனின் பேச்சு!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


உலகம் முழுவதும் கரோனா ஆட்டி படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்பவில்லை. உலக நாடுகள் எல்லாம் அதனை நோயாகப் பார்த்த நிலையில் இந்தியாவில் உள்ள சிலர், அதனைக் குறிப்பிட்ட ஒரு மதமாகப் பார்த்த சூழ்நிலையும் இருந்து வந்தது. இந்நிலையில் இதில் உள்ள அரசியல் என்னென்ன, எதற்காக இந்த விஷயத்தில் மதத்தைத் திணிக்கப்பார்க்கிறார்கள் என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பத்திரிகையாளர் கோவி. லெனின், நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் வருமாறு, 
 


இந்தியாவில் மதத்திற்கு எதிராக யார்யார் பேசுகிறார்கள் என்று கவனிக்கச் சொல்லி அரபு நாட்டின் தலைவர்கள் வற்புறுத்தியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மதத்தைப் பற்றி பேசுவது என்பது அவரவர் விருப்பம் என்ற நிலையில், அதற்கான இந்தச் சூழல் எப்படி வந்தது, அதற்குக் காரணமாக என்ன நிகழ்வு இருந்திருக்க வாய்ப்புள்ளது?

மதம் என்ற வார்த்தையே நீங்கள் பல பொருட்களில் புரிந்து கொள்ளலாம். யானைக்கு மதம் பிடிக்கும், சிலர் வாழ்வியல் கோட்பாடாக அதைக் கொண்டு செல்கிறார். அதைப்பற்றி பிரச்னை இல்லை. மனிதர்களுக்கு மதம் பிடிக்கக் கூடாது. அது ஒருபுறம் என்றால், இந்தியாவில் சாதியும் சேர்ந்தே இருக்கின்றது. இந்த கரோனா காலத்தில் அப்படி எல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது.  ஆனால், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் தற்போது அந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவி வருகின்றது. முதலில் இந்த கரோனா வைரஸை அடையாளப்படுத்தியவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சீனாவில் இருந்து இந்த வைரஸ் பரவிய காரணத்தால் அந்த வைரஸுக்கு சீன வைரஸ் என்று பெயரிட்டு அழைத்தார். அது ஒரு வன்மமான சொல்லாடல்தான். அதற்கு பிறகு இந்தியாவில் அதற்கு மதச்சாயம் பூசப்பட்டது. தப்லீக் ஜமாத் கூட்டத்தில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றார்கள். அவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவியது என்பது உண்மை. 
 

http://onelink.to/nknapp


ஆனால்,  அந்த மாநாட்டிற்கு அனுமதி கொடுத்து யார் என்ற கேள்வி எழுகின்றது. அதையும் தாண்டி, அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த வைரஸ் தொடர்பாக உலகமே பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் ஏன் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருந்திருக்கிறார்கள். அதனை கவனிக்க வேண்டிய அரசாங்கமும் விமான நிலையம் முதல் எதையுமே கவனிக்கவில்லை. தப்லீக் மாநாட்டால் தான் கரோனா பரவியது போலவும், அதற்கு முஸ்லிம்கள் காரணம் என்பது போல் இந்தியாவில் குறிப்பாகத் தமிழத்தில் அதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க நபர்கள் ஈடுபட்டனர். அதைச் சமூக வலைத்தளங்களிலும் கிண்டலாகப் பதிவு வாயிலாக வெளிப்படுத்தினர். அதாவது 75 பேர் இன்றைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தால் அதில் 65 பேர் தப்லீக், 10 பேர் ஃபப்ளிக் என்று பிரித்து காட்டி மத ரீதியான பார்வையைத் திரும்பத் திரும்ப உருவாக்கிக் காட்டினார்கள்.  சிலர் கூடச் சொன்னார்கள் உலகமே இதை நோயாகப் பார்க்கிறது, இந்தியாதான் இதை பாய்-யாகப் பார்க்கிறது என்று. 

அரசுத் தரப்பில் அதை சிங்கிள் சோர்ஸ் என்று சொல்ல வேண்டும் என்று உத்தரவு எல்லாம் போட்டார்களே? 

அது ரொம்ப பின்னாடி வந்தது. பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்.பிக்கள் முஸ்ஸிம்களால் இந்தத் தொற்று வருகிறது என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்கள். பொறுப்பில் உள்ள அதிகாரிகளே தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்று கூறுகிறார்கள். தில்லியில் எந்த மாநாடு நடந்தது என்று தான் அனைவருக்குமே தெரியுமே. தில்லியில் என்ன சங்கராச்சாரியார் மாநாடு போட்டாரா, இல்லை போப் ஆண்டவர் மாநாடு போட்டாரா?  இவர்கள் தான் மாநாடு போட்டார்கள் என்று அனைவருக்குமே தெரியுமே, அப்படி இருக்கையில் இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு முஸ்லிம்கள் இருக்கும் பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் வைத்திருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு எதிராகப் பழைய செய்திகளைப் போடுவது, மீம்ஸ்கள் போடுவது என்ற நிலை தொடர்ந்து இருந்து வந்தது. இது அனைத்தையும் திட்டமிட்டு பரப்பினார்கள். இதை மதப் பிரிவினை வாதிகள் வேண்டும் என்று செய்ததாகவே நினைக்கத் தோன்றுகிறது.