Is the governor's tea party boycott new in politics?

Advertisment

நீட் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் அனுமதியளிக்காததால் சட்டமன்றத்தின் மாண்பையும் தமிழக மக்களையும் அனுமதிக்கவில்லை என்று கூறி தமிழக அரசு ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தை புறக்கணித்திருந்தது. நேற்று ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''முதல்வரின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகும் ஆளுநர் தற்போது வரை நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு பதிலளிக்கவில்லை. தற்போது வரை ஆளுநர் இது குறித்து எந்தவித உத்தரவாதத்தையும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே ஆளுநர் கொடுக்க இருக்கும் தேநீர் விருந்து நிகழ்விலும், பாரதியார் சிலை நிகழ்விலும் தமிழக அரசு பங்கேற்காது'' என விளக்கியிருந்தார்.

tn

அதையடுத்து நேற்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. ஒரு மரபிற்காக கூடதமிழக அரசு ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டிருக்கலாம் என்ற பேச்சுகள் அடிபட்ட நிலையில் அரசியலில் ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என்பது ஏற்கனவே நடந்துள்ள ஒன்றுதான்.

Advertisment

tn

1994-95 ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் சென்னாரெட்டி கொடுத்த தேநீர் விருந்தை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்திருந்தார். மாநில அதிகாரங்களில் ஆளுநர் சென்னாரெட்டி தொடர்ந்து தலையிடுவதாக இரண்டுமுறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து அவர் கொடுத்த தேநீர் விருந்தை ஜெ.புறக்கணித்தார்.

tn

Advertisment

2018 ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்தனர். தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதிகள் அமைச்சர்களுக்கு பிந்தைய வரிசையில் அமர வைக்கப்பட்டது தொடர்பான அதிருப்தியில் இந்தப் புறக்கணிப்பு நிகழ்ந்திருந்தது.

t

அதனையடுத்து 2019ஆம் ஆண்டு தெலுங்கானாவில் தமிழிசை சௌநதரராஜன் குடியரசு தினவிழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொடியேற்ற நிகழ்வை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். ஆளுநர் தமிழிசை தெலுங்கானா அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தானாகவே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோவிட் தடுப்பூசி அம்சம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினார். இதையடுத்து ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரை இன்றி தெலுங்கானா அரசு நடத்தியது.

t

இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் ஆளுநர் கும்மணம் ராஜசேகரனின்குடியரசு தின உரையை மக்கள் புறக்கணித்தனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்குஎதிர்ப்பு தெரிவித்து மக்கள் அந்த நிகழ்வைப் புறக்கணித்த நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமே அவ்விழாவில் கலந்து கொண்டனர்.

tn

தற்போது தமிழக அரசால் தேநீர் விருந்து புறக்கணிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே நாகலாந்தில் ஆளுநராக இருந்து விடைபெற்றுகடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்பொழுது விடைபெறும் நிகழ்ச்சியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். அவருடைய பதவி காலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்தார் என்பதால் பத்திரிக்கையாளர்கள் அவரது தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.