Governor RN Ravi went to Delhi

தி.மு.க. அரசின் திராவிட மாடலுக்கு எதிராக அடிக்கடி சாட்டையை சுழற்றிவருகிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இதற்கு தகுந்த பதிலடியும் தி.மு.க. அரசு அவ்வப்போது கொடுத்து வருகிறது. ஆனாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க. அரசை சீண்டிக் கொண்டே இருக்கிறார் ஆர்.என்.ரவி.

Advertisment

இதனால் தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்குமான முட்டல் மோதல்கள் அதிகரித்தபடியே இருக்கும் நிலையில், மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்ற ஆர்.என்.ரவி, அவசரம் அவசரமாக சென்னை திரும்பியிருக்கிறார்.

Advertisment

கவர்னரின் டெல்லி பயணம் குறித்து விசாரித்த போது, "தனது அதிகாரத்துக்குட்பட்டே இயங்குகிறார் கவர்னர். ஆனால், தன்னுடைய ப்ரோம்கிராம்கள் அனைத்தையும் முன்கூட்டியே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தி.மு.க. அரசு எதிர்பார்ப்பதை கவர்னர் ரசிக்கவில்லை. உதாரணமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு நேரம் கொடுத்திருந்தார் கவர்னர். இதனை அரசுக்கோ அல்லது உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கோ தெரிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதில் கவர்னருக்கு உடன்பாடில்லை. மேலும், விழாவில் எதைப் பேசவேண்டும் என தனக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை என நினைக்கிறார். இப்படிப்பட்ட இயல்புகள்தான் அவருடையது. ஆனால், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரான உயர்கல்வி அமைச்சரை கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டதை கவர்னர் அனுமதித்திருக்கக் கூடாது. இது அரசுத் தரப்பை காயப்படுத்துகிறது. அதனால் எதிர்வினையாற்றுகிறது தி.மு.க. அரசு. இதுதான் மோதல்களாக வெடிக்கின்றது.

இதனால் தனது கவனத்துக்குக் கொண்டு வரப்படக்கூடிய அரசுக்கு எதிரான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் அவர். அதுவும் ஆதாரங்களுடன் கொடுக்கப்படக்கூடிய விவகாரங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார். அந்த வகையில்தான், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், தற்போதைய மாநில உளவுத்துறைத் தலைவர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்துக்கு எதிராக பா.ஜ.க. அண்ணாமலை தொடுத்துள்ள தேசவிரோத குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். இது குறித்த ஆதாரங்கள் அண்ணாமலை தரப்பிலிருந்து கவர்னரிடம் தரப்பட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவர்னரும் தனது சோர்ஸ் மூலம் பல தகவல்களை திரட்டியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லிக்கு விரைந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமான அதிகாரிகள்.

தமிழக அரசின் உயர்கல்வித் துறையினர் தரப்பில் விசாரித்தபோது, "பல்கலைக்கழகத்தின் வேந்தர் கவர்னர் என்றால், இணைவேந்தர் உயர்கல்வி அமைச்சர்தான். பல்கலைக்கலைக் கழகத்தில் கவர்னருக்குரிய அதிகாரம் அமைச்சருக்கும் இருக்கிறது. அந்த அதிகாரத்தை ராஜ்பவன் தடுக்கிறபோது அதற்கு எதிராக அரசு செயலாற்றுகிறது. இதில் தவறு எதுவும் கிடையாது. இணைவேந்தரை கௌரவ விருந்தினராக எப்படி போடலாம்? இது இணைவேந்தர் பதவியை சிறுமைப்படுத்துவதாகாதா? பல்கலைக் கழகத்துக்கும் ஒன்றிய இணையமைச்சர் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? அவரை எதற்கு விழாவுக்கு அழைக்க வேண்டும்? ஆக, தி.மு.க. அரசை சீண்டுவதுதான் ராஜ்பவனின் நோக்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக விழாவில் மாணவர்களிடம் சனாதான கொள்கையை நிலை நிறுத்துவதுதான் கவர்னரின் வேலையா? ஏன், சனாதானத்துக்கு கொடிபிடிக்கும் வகையில் அவர் பேச வேண்டும்? இதற்கு முந்தைய கவர்னர்கள் இப்படித்தான் நடந்து கொண்டார்களா? ஏன், பா.ஜ.க. ஆளும் மாநில கவர்னர்கள் கூட ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மாணவர்களிடம் புகுத்துவதில்லையே? இவர் மட்டும் இப்படி பேசுவதால் தான் அமைச்சர் உள்ளிட்டவர்கள் ராஜ் பவனுக்கு பதிலடி தருகின்றனர். டெல்லியின் அசைன்மெண்டுக்கேற்ப கவர்னர் ஆடுகிறார். அது நிற்காதவரை கவர்னருக்கு எதிரான பதிலடி அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுக்கொண்டு தானிருக்கும்’ என்கிறார்கள் உயர்கல்வித் துறையினர்.

டெல்லியிலுள்ள சோர்ஸ்களிடம் நாம் விசாரித்தபோது, "குடும்ப ரீதியிலான ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காகவே டெல்லிக்கு வந்தார் கவர்னர். இது ஏற்கனவே முடிவான ஒரு நிகழ்வுதான். ஆனால், டெல்லிக்கு வருமாறு கடந்த வாரம் அழைத்திருந்தது பிரதமர் அலுவலகம். அப்போது, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இருப்பதையும், 16-ந் தேதி டெல்லிக்கு வரவேண்டிய ப்ரோகிராம் இருப்பதையும் சொன்னதையடுத்து, கடந்த வாரம் டெல்லிக்கு அவர் செல்வது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஏற்கனவே திட்டமிட்டபடி 16-ந் தேதி டெல்லிக்கு வந்திருந்தார் கவர்னர்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா இருவரையும் கவர்னர் சந்திக்க நேரம் முடிவாகியிருந்தது. ஆனால், தமிழகத்தில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம், வன்முறையை அறிந்து சென்னைக்கு உடனடியாகச் செல்லுமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்து கவர்னருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால், அவர் புறப்படுவதற்கு முன்பு, பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் இருவர் கவர்னரை சந்தித்தனர்.

பிரதமரிடம் சொல்லவேண்டிய தகவல்களை அவர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கவர்னர். குறிப்பாக, போலி பாஸ்போர்ட் விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, வெளிநாட்டு தொழில் முதலீடுகள் விவகாரம், தமிழகத்தின் 4 அமைச்சர்களின் துறைசார்ந்த ஊழல்கள், முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்திற்கு நெருக்கமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் ஆகிய 5 கோப்புகள் அந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதில், போலி பாஸ்போர்ட் விவகாரம் தவிர மற்ற 4 கோப்புகளும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவல்களின் அடுத்த பகுதி. ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு இதன் தாக்கம் தெரியவரும்” என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.