Skip to main content

அரசு டாக்டர்களுக்கு கெட்-அவுட்! தனியார் கல்லூரி டாக்டர்களுக்கு கட்-அவுட்! -பின்னணியில் வெடிக்கும் லஞ்ச ஊழல்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்த சீனியர் டாக்டர்களுக்கு பணியாணை வழங்காமல்… திடீரென்று தனியார்கல்லூரிகளிலிருந்து வந்த ஜூனியர் டாக்டர்களுக்கு அரசுமருத்துவக்கல்லூரிகளில் பணிவழங்கியிருப்பது மருத்துவ வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு பின்னணியில் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளும் வெடிக்கின்றன.
 

medical collegeஇதுகுறித்து, அரசு மருத்துவமனை சர்வீஸ் பி.ஜிக்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் டாக்டர்கள் நம்மிடம், “2013 ஆம் வருடம் அரசுக்கல்லூரிகளில் 2,000 பேர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சிபெற்ற 667 இளநிலை டாக்டர்கள்  அரசு ஆரம்பசுகாதாரநிலையங்கள், அரசு வட்டார மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 2019 மே மாதம் மூன்று வருடப் படிப்பான எம்.டி., எம்.எஸ். முதுநிலைமருத்துவப்படிப்பிலும் தேர்ச்சிபெறும்வரை சுமார் 6 வருடங்களுக்கு மருத்துவசேவை செய்திருக்கிறோம்.  ஆனால்,  இதுவரை தமிழக அரசு சுகாதாரத்துறை பின்பற்றிவந்த நடைமுறையிலும் நீதிமன்றத்தீர்ப்பின்படியும் எங்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிவழங்காமல் எந்தவித மருத்துவச்சேவையும் செய்யாமல் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலைமுடித்துவிட்டு வந்த எங்களைவிட சர்வீஸில் ஜூனியர்களான டாக்டர்களுக்கு பணியாணை வழங்கியிருப்பது நீதிமன்ற ஆணையை கேலிக்கூத்தாக்கியிருப்பதோடு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச ஊழலின் உச்சக்கட்டத்தையும் வெளிப்படுத்துகிறது.

 

medical college


மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோவை சந்தித்து நாங்கள் பேசியபோது ‘இனிமேல் இப்படித்தான் நடக்கும்’ என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார். சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்ஸை சந்தித்து முறையிட்டபோது, ‘நீங்கள்லாம் ரிசர்வேஷன் சலுகைமூலமா வந்தவங்க. ஆனா, அவங்கள்லாம் மெரிட்ல வந்தவங்க’ என்று அலட்சியமாக பேசி அனுப்பிவிட்டார். அவரிடமிருந்து, இப்படியொரு பதிலை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியடைந்துவிட்டோம்” என்று குமுறுகிறவர்களிடம், இதில்… லஞ்ச ஊழல் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்று எப்படி கூறுகிறீர்கள்? என்று நாம் கேட்டபோது, “கடந்த வருடம் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தபோது எந்தவிதமான இட ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல் வாக்-இன் இண்டர்வ்யூ மூலம் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்த கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு சர்வீஸ் செய்யாத பி.ஜிக்களான சுமார் 500 க்குமேற்பட்ட டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார்கள்.

 

medical collegeஅதில், பெரும்பாலான டாக்டர்கள் பணம்- அரசியல் அதிகாரப்பின்னணி கொண்டவர்கள். இதில், மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோவின்  அக்கா மகன்  ஜேப்ரி நவீன் ராஜும் ஒருவர். மேலும், தனியார்க்கல்லூரிகளில் படித்த டாக்டர்களான பிரசன்னா, அருள் விஜயக்குமார், அஸ்வின், சுதாராணி, ரேணுகா உள்ளிட்ட பலர் டெங்கு வார்டுக்கு பதிலாக  ஜெனரல் சர்ஜரி, காது-மூக்கு-தொண்டை பிரிவு, இதயநலப்பிரிவு, சிறுநீரக சிகிச்சைப்பிரிவு, எலும்பு அறுவைசிகிச்சை பிரிவு என சென்னை எம்.எம்.சி., ஸ்டேன்லி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குத்தான், கடந்த ஜூன் -1 ந்தேதி கலந்தாய்வு நடந்திருக்கிறது. ஆனால், இவர்களைவிட அனுபவத்திலும் சேவையிலும் சீனியாரிட்டியிலும் முன்னணியில் இருக்கும் எங்களுக்கு இன்னும் கலந்தாய்வை நடத்தவில்லை”என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோவிடம் நாம் கேட்டபோது, “அரசு மருத்துவர்கள் கலந்தாய்வு குறித்து நீதிமன்ற இடைக்காலத் தடை இருப்பதால்தான் இன்னும் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது, குற்றஞ்சாட்டும் 667 மருத்துவர்களும் 2019 ஆம் வருடம்தான் அரசுக்கல்லூரிகளில் முதுநிலைப்படிப்பை முடித்திருக்கிறார்கள். ஆனால், கடந்த வருடம் வாக்-இன் இண்டர்வ்யூ மூலம் பணியமர்த்தப்பட்ட  டாக்டர்கள் 2018 ஆம் ஆண்டே முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டார்கள். அப்படியென்றால், ஆல்ரெடி பணியமர்த்தப்பட்டவர்கள்  சீனியர்கள்தானே தவிர ஜூனியர்கள் அல்ல. அதனால், சர்வீஸ் பி.ஜி மாணவர்களுக்கு டி.எம்.எஸ். கண்ட்ரோலிள்ள வட்டார மாவட்ட மருத்துவமனைகளில் பணி வழங்கப்படும் என்றால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஏற்கனவே, அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டவர்களை மாற்றிவிட்டு இவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் எப்படி பணி வழங்கமுடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
 

 

medical college


இதுகுறித்து, நம்மிடம் பேசும் சர்வீஸ் பி.ஜி. டாக்டர்களோ, “நாங்கள் அரசுக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முடித்து எம்.ஆர்.பி. தேர்விலும் தேர்ச்சிபெற்று அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு வட்டார மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டு அதற்கேற்றார்போல் ஒவ்வொரு வருட சேவைக்கேற்ப மதிப்பெண்களைப் பெற்று முதுகலைப்படிப்பை படித்தோம். இதனால், முதுகலைப்படிப்பு காலங்களையும் சேர்த்து 6 வருடங்களுக்குமேல் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்திருக்கிறோம். ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்துவிட்டு எந்தவித அரசு மருத்துவமனையிலும் ஏழை எளிய மக்களுக்கு சேவையும் செய்யாமல் முதுகலைப்படிப்பை முடித்துவிட்டு வந்தவர்களை மருத்துவக்கல்வி இயக்குனர் டிகிரி அடிப்படையில் எங்களைவிட அவர்களை சீனியர் என்கிறார்.

அரசுக்கல்லூரிகளில் இரண்டுவருடங்கள் சேவை செய்யாமல் முதுநிலைப்படிப்பில் சேரவே முடியாது என்பதால் நாங்கள் அப்போது முதுநிலை த் தேர்வை எழுதவில்லை. அப்படி, எழுதியிருந்தால் டிகிரி அடிப்படையிலும் நாங்கள்தான் சீனியர்கள். மேலும், நீதிமன்றமோ சர்வீஸ் அடிப்படையிலும் எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சிபெற்றதாலும் எங்களுக்குத்தான் பணியில் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டிருக்கிறது” என்கிறார்கள் தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆணித்தரமாக.

‘நீட்’ தேர்வுமூலம் ஏற்கனவே ஏழை எளிய மாணவர்கள் டாக்டராக முடியாத நிலையில்… அரசு மருத்துவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்காமல் பணம் படைத்த தனியார்க்கல்லூரி மாணவர்களுக்கே வேலைவாய்ப்பை வழங்குவதால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்குத்தான் ஆபத்து.
 

 

 

 

Next Story

பழனி கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Notice of protest against Palani temple management

பழனி தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்து ஜூலை 13 தேதி கவன ஈர்ப்பு கடையடைப்பு நடைபெறும் என பழனி நகர் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலின் கிரிவலப் பாதை 1948 ஆம் ஆண்டு முதல் பழனி நகராட்சி நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் பழனி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மேலும் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதனை ஆய்வு செய்யவும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழனி அடிவாரம் பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டதாக போராட்டங்கள் எழுந்தது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நகராட்சி மன்ற கூட்டத்தில் பழனி கோவில் நிர்வாகத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து நகர்மன்றம் சார்பில் ஜூலை 13ம் தேதி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழு வர உள்ள நிலையில், அந்த தேதியில் போராட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

25 மீனவர்கள் கைது; காப்பாற்றக்கோரி மண்டியிட்டு கதறி அழும் பெண்கள்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
25 fishermen arrested; Women who kneel and cry to be saved

அண்மையாகவே தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மிக அண்மையில் தமிழக மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது 25 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

25 fishermen arrested; Women who kneel and cry to be saved

தொடர்ந்து ராமநாதபுரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருவது அந்த பகுதி மீனவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கும் நிலையில் இன்று  இலங்கை கடற்படை 25 மீனவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்திருப்பதாக வெளியான செய்தி அந்த பகுதி மக்களுக்கு மேலும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி கண்ணீர் விட்டு மண்டியிட்டு அழுதபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மீனவ அமைப்புகள் இன்று பாம்பன் வட கடல் பகுதியில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.