'Giant Baby' - Mother shocked to hear the weight of her newborn Photograph: (weight)
நியூயார்க்கில் 5.9 கிலோ எடையில் குழந்தை பிறந்தது குறித்து போஸ்டுகள் வைரலாகி வருகிறது.பிறந்த குழந்தையின் எடை கிட்டத்தட்ட 3 மாத குழந்தையின் எடையை ஒத்ததாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு பெண் எதிர்பார்த்ததை விட மிக அதிக எடை கொண்ட ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார். புதிதாகப் பிறந்த குழந்தை சராசரி குழந்தையை விட இரண்டு மடங்கு எடை கொண்டதாக இருந்துள்ளது. இது குடும்பத்திற்கும் மருத்துவமனைக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்ததோடு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
தம்பதினான டெர்ரிகாவும் ஷானும் தங்கள் குழந்தை இயல்பை விடப் பெரியதாக இருக்கும் என்று முன்னரே எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் கணிப்பையே மிஞ்சும் அளவிற்கு குழந்தை பிறந்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் புதிதாகப் பிறந்த குழந்தையின் எடை 5.9 கிலோவாக இருந்தது. ஏற்கனவே நான்கு குழந்தைகளின் தாயான அப்பெண் கூறுகையில், 'தனது மகன் கொஞ்சம் எடை அதிகமாக இருப்பான் என்று தனக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய எடை கொண்டவனாக இருப்பான் என கணிக்கவில்லை. மூன்று முதல் ஆறு மாத குழந்தைகான உடைகள் மற்றும் டயப்பர்களை அணிவித்து வருகிறேன். மூன்று மாத குழந்தையைப் பெற்றெடுத்தது போல் உள்ளது' என தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்த அந்த மருத்துவமனை அதனுடைய பேஸ்புக் பக்கத்தில், 'அதிக எடையுடன் பிறந்த அந்த குழந்தையையும், அதே நாளில் பிறந்த மற்றொரு பெண் குழந்தையும் அருகருகே தொட்டில்களில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மருத்துவமனை இரண்டு குழந்தைகளின் வருகையையும் கொண்டாடியது. ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பிறப்பும் தனித்துவமானது என்று குறிப்பிட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் அத்தம்பதி தனது நன்றியை தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே அதிக எடையில் பிறந்த குழந்தையாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ள குழந்தையின் எடை 9.98 கிலோ கிராம் ஆகும். கனடாவைச் சேர்ந்த அன்னா ஹெய்னிங் பேட்ஸ் மற்றும் மார்ட்டின் வான் ப்யூரன் பேட்ஸ் தம்பதிக்கு 1879 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அந்த குழந்தை பிறந்தது. குழந்தையின் பெற்றோரான இருவரும் சுமார் 7 அடி 11 அங்குல உயரம் கொண்டவர்கள். அதிக எடையுடன் பிறந்த அந்த குழந்தை பிறந்த 11 மணி நேரத்திலேயே இறந்து விட்டது.
1955-ஆம் ஆண்டு இத்தாலியில் கார்மெலினா ஃபெடேல் என்பவருக்குப் பிறந்த ஆண் குழந்தை 10.2 கிலோகிராம் எடை கொண்டதாக இருந்தது. இந்தியாவை பொறுத்தவரை 2016-ஆம் ஆண்டு கர்நாடகாவில் நந்தினி என்பவருக்குப் பிறந்த பெண் குழந்தை 6.8 கிலோகிராம் என்ற அளவில் அதிக எடையுடன் பிறந்த குழந்தையாகக் கருதப்படுகிறது.
Follow Us