Skip to main content

’தேசுலாவுதே தேன் மலராலே...’ -காலத்தால் அழிக்க முடியாத கண்டசாலா!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

 

g


’ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா’,’தேசுலாவுதே தேன் மலராலே...’, ’உல்லாச உலகம் உனக்கே சொந்தம்’, ’ஓ! தேவதாஸ் ஓ! பார்வதி தேவதாஸ்’, ’முத்துக்கு முத்தாக..’, வான் மீதிலே இன்பத்தேன்வந்து பாயுதே’, ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’,‘கனவிதுதான்’,‘ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது’, ‘அமைதி இல்லாத என் மனமே’‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘ஆஹா இன்ப நிலாவினிலே’, ‘நீதானா என்னை அழைத்தது’ என்று காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைப்பாடி இசைப்பிரியர்களின் நெஞ்சுக்குள் குடியிருப்பவர் கண்டசாலா.

 

இசைப்போட்டிகள் என்றாலே தியாகராஜ பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ். வரிசையில் தப்பாமல் ஒலிக்கின்றன கண்டசாலா பாடல்கள்.  பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என இந்திய திரையுலகில் பன்முகம் காட்டியவர் கண்டசாலா. 

 

g

 

கோரஸ் பாடகராக திரையுலகில் அடியெடுத்து வைத்து, பின்னாளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, துளு ஆகிய பல மொழிகளில் 30 ஆண்டுகளாக பாடி கோலோச்சினார்.   ‘லக்ஸ்மம்மா’என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். தொடர்ந்து’லவகுசா’, ‘மாயாபஜார்’, ’பாதாள பைரவி’, ‘மாயக்குக்திரை’, ‘அமரகீதம்’, ‘கள்வனின் காதலி’, ’மனிதன் மாறவில்லை’, ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்று தமிழ், தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தெலுங்கில் 3 திரைப்படங்கள் தயாரித்துள்ளார். 

 

திரைப்படங்களுக்கு இசையமைத்தது மட்டுமில்லாமல் நிறைய தெய்வபக்திப் பாடல்களுக்கு இசையமைத்தும், தேசபக்திப் பாடல்கள், இந்தியவிடுதலை இயக்கத்திற்கான பாடல்களுக்கும் இசையமைத்து பாடியுள்ளார்.


ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா தாலூக்காவில் மசூலிப்பட்டினம் அருகே  சவுதப்பள்ளி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 4.12.1922ல் பிறந்தவர் கண்டசாலா. முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். தந்தை சூரய்யா கண்டசாலா. தாயார் ரத்தம்மா.

 

சூரய்யா ஒரு பாடகர். மிருதங்கமும் வாசிப்பார். கண்டசாலா சிறு பையனாக இருக்கும்போது தந்தை மிருதங்கம் வாசிக்க, அந்தத் தாளத்திற்கேற்ப நடனமாடுவார்.  தந்தை இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். அப்போது, இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால், பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்று, விஜயநகரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து ‘சங்கீத வித்வான்’ பட்டமும் பெற்றார்.

 

தேசப்பற்றிலும் ஈடுபாடு கொண்ட கண்டசாலா, 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று, ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையான பின்னர்,  திரைப்படங்களில் பின்னணி பாட முயற்சித்தார். முன்னதாக அகில இந்திய வானொலி, எச்.எம்.வி இசைத்தட்டு நிறுவனத்தில் பாடினார். 1944-ல் ‘சீதா ராம ஜனனம்’ என்ற படத்தில் கோரஸ் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.  அப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். ‘சொர்க்க சீமா’ என்ற படத்தின் மூலம் பாடகர் ஆனார்.  காதல், வீரம், சோகம், பாசம் என்று எந்த பாடல் என்றால் அதில் உணர்வுப்பூர்மாக பாடி, தனது தனித்துவமான குரலால் உலகம் முழுவதும் ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.  அதன் மூலமாக உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகள் நடத்தியுள்ளார்.  ஐ.நா. சபையிலும் இவரது இசைக்கச்சேரி அரங்கேறியுள்ளது.

 

கண்டசாலாவுக்கு சாவித்திரி, சரளாதேவி என்ற இரு மனைவிகள். குழந்தைகள் எட்டு பேர். இசையுலகில் இவர் செய்த சாதனைகளுக்காக பத்ம விருது பெற்றார்.  திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.  தென்னிந்தியத் திரையுலகில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக் காரணமாகவும் இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.

 

இசையாலும், குரலாலும் ரசிகர்களை இசைமழையில் நனையவைத்து வந்த கண்டசாலா 52-வது வயதில், 11.2.1974ல் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பினால் காலமானார். அவர் காலமாவதற்கு முதல்நாள், ஆவணப்படம் ஒன்றிற்காக மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபடியே அவர் பாட, ஒலிப்பதிவு செய்யப்பட்டது.   சென்னை தி.நகர். வடக்கு உஸ்மால் சாலையில் இருந்து ஒரு லாரியில் கண்டசாலாவின் உடல் வைக்கப்பட்டு, கண்ணம்மாபேட்டை சுடுகாடு வரை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.  வழியெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

g


கண்டசாலா மறைந்த பின்னர் பல ஆண்டுகள் கழித்து, கண்டசாலாவின் நினைவைப் போற்றும் வகையில் 2003ஆம் ஆண்டில் தபால்தலை வெளியிடப்பட்டது..


கண்டசாலாவின் நினைவைப் போற்றும் வகையில், அவரின் மருமகள் பார்வதி ரவி கண்டசாலா, அவருக்கு நாட்டிய சமர்ப்பணம் செய்துவருகிறார். இவர் தனது நடனப் பள்ளியான `கலாபிரதர்ஷினி’ மூலம் கண்டசாலா இசையமைத்துப் பாடிய பாடல்கள் பலவற்றுக்கு, நடன வடிவம் கொடுத்து, `கான கந்தர்வ கண்டசாலா சமர்ப்பணம்’ எனும் தலைப்பில் அரங்கேற்றியிருக்கிறார்.


திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கண்டசாலாவின் பெருமையை யாவரும் அறியும் வண்ணம் அவரின் வெண்கலச்சிலை ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள ரவிந்திரபாரதி என்ற இடத்தில் நிறுவியுள்ளார்.

 

g


தேசுலாவுதே தேன் மலராலே
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி பாடவா…
விளையாட வா…
தேசுலாவுதே தேன் மலராலே

மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ
மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய்.
மது நிலை தவழ்ந்திடும் புது நிலையால்
மன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..
தேசுலாவுதே தேன் மலராலே

பாராய்….
பாராய் மறைந்து வரும் மின்னலயே
பாராய் மறைந்து வரும் மின்னலயே..
மின்னுவதேனோ..
மேக ராஜான் சுகமேவிட தானோ’
உண்மை இதானோ
உயிர்கள் வாழ மழை பெய்திட தானோ
உரிமையோடு மன வானில் நாமே
உரிமையோடு மன வானில் நாமே
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே