Skip to main content

கோககோலாவை இந்தியாவிலிருந்து விரட்டியடித்த பெர்ணான்டஸ்!

amit george

 
சராசரி இந்தியனின் அழுக்குப் படிந்த கதர் உடையணிந்த எளிமையான தோற்றத்துடன் இருப்பார். மத்திய அமைச்சராக இருந்தபோதுகூட அவருடைய உடைகளை அவரே துவைத்து அணிவார். அமைச்சராக இருந்தாலும் நவீன வசதிகள் எதுவும் அவருடைய வீட்டில் இருக்காது.
 

அப்படிப்பட்ட பெர்ணான்டஸ் தனது 88 ஆவது வயதில் மரணத்தை தழுவியிருக்கிறார். கர்நாடக மாநிலம் மங்களூரில் கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த பெர்ணான்டஸ் பள்ளியில் சில காலம் படித்துவிட்டு, பாதிரியார் ஆவதற்கான பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவர் பாதிரியார் ஆகவில்லை.
 

1949 ஆம் ஆண்டு வேலை தேடி மும்பை வந்தார். மிகவும் கஷ்டப்பட்ட பெர்ணான்டஸ் தெருக்களில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் பிழை திருத்துநராக வேலை கிடைத்தது.
 

“நான் மும்பைக்கு வந்த சமயத்தில் கடற்கரையோர பெஞ்ச்சுகளில் தூங்குவேன். நள்ளிரவு போலீஸ்காரர்கள் வந்து என்னை எழுப்பி வேறுபக்கம் போகச் சொல்வார்கள்” என்று பெர்ணான்டஸ் கூறியிருக்கிறார்.
 

வேலை கிடைத்த பிறகு, புகழ்பெற்ற சோசஸிஸ்ட் தலைவர் ராம்மனோகர் லோகியாவையும், புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் பிளாசிட் டி மெல்லோவையும் சந்தித்தார். அவர்கள் இருவரும் பெர்ணான்டஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதன்பின்னர் அவர் சோசலிஸ்ட் தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்தார்.
 

தொழிற்சங்கத் தலைவராக வளரத் தொடங்கினார். 1950களில் மும்பை தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். மும்பை தொழிலாளர்களை தொழிற்சங்க மயமாக்கியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. தொழிலாளர் மத்தியில் விரைவாக புகழ்பெறத் தொடங்கிய இவருக்கு தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பு மிகப்பெரிய சவாலாக இருந்தது. முதலாளிகளின் கூலிப்படையுடன் பல நேரம் சண்டையிட வேண்டியிருந்தது. இந்த மோதல்களில் பல முறை சிறை சென்றிருக்கிறார். மும்பை மாநகராட்சியில் உறுப்பினராக 1961 முதல் 68 வரை பொறுப்பு வகித்து, தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை கண்டித்து குரல் எழுப்பியிருக்கிறார்.
 

1967 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸின் செல்வாக்குப்பெற்ற தலைவரான எஸ்.கே.படீலை தோற்கடித்தார். அத்தோடு படீலின் 20 ஆண்டு அரசியல் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றிக்கு பிறகுதான் ஜயண்ட் கில்லர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது.
 

இவருடைய செயல்பாடுகள் இவருடைய வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. 1969 ஆம் ஆண்டு இவர் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். 1973 ஆம் ஆண்டு கட்சியின் தலைவராகவே தேர்வு செய்யப்பட்டார்.
 

george


கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பிறகு 1974 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் ரயில்வே போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். 1947 ஆம் ஆண்டு முதல் 1974 வரை ரயில்வே ஊழியர்களுக்காக மூன்று சம்பளக் கமிஷன்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்தே, ரயில்வே போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டன. 1974 மே மாதம் 8 ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இந்தியாவையே நிலைகுலையச் செய்தது.
 

ஆனால், அன்றைய இந்திரா தலைமையிலான மத்திய அரசு மிகக் கொடூரமான அடக்குமுறையை தொழிலாளர்கள் மீது ஏவியது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 20 நாட்கள் தொடர்ந்த போராட்டம் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் வேறுபட்ட குரலில் பேசத் தொடங்கியதால் கைவிடப்பட்டது.
 

இந்திரா அரசுக்கு எதிரான இந்த போராட்டம்தான் அவருடைய ஆத்திரத்தை அதிகப்படுத்த காரணமாகியது. ஏனெனில் முந்தைய வேலைநிறுத்தங்கள் அனைத்தும் கம்பெனிகளையும் தொழிற்சாலைகளையும் குறியாக வைத்து நடத்தப்பட்டன. ஆனால், ரயில்வே போராட்டம் அரசுக்கு எதிராக நடத்தப்பட்டது. ரயில்வே வேலைநிறுத்தம் ஏற்படுத்திய பாதிப்பு அரசாங்கத்தை நேரடியாகவே பாதித்தது.
 

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வதற்கு முதல் காரணமே இந்த வெற்றிகரமான போராட்டம்தான். எதிர்க்க முடியாத தலைவராக தன்னை எண்ணிக்கொண்டிருந்த இந்திராவை நிலைகுலையச் செய்தது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை.
 

ரயில்வே ஸ்டிரைக் முடிந்து ஒரே ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர்கள், இந்திராவின் எதிரிகள் என எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் பிடியில் சிக்காத தலைவர்களில் பெர்ணான்டஸ் முக்கியமானவர். அவரைக் கண்டுபிடிக்க முடியாத போலீஸ், அவருடைய தம்பி லாரன்ஸ் பெர்ணான்டஸை  கைது செய்து சித்திரவதை செய்தனர். பெர்ணான்டஸின் பெண் நண்பராக இருந்த ஸ்நேகலதா ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆஸ்த்துமா நோயாளியான அவர், நோய் தீவிரமடைந்ததால் விடுவிக்கப்பட்டார். ஆனால், சிறையில் அவருக்கு சரிவர மருத்துவ வசதி செய்து கொடுக்காததால் வெளியில் வந்த சில நாட்களில் இறந்தார்.
 

இதற்கிடையே 1975 ஆம் ஆண்டு பரோடா வந்த பெர்ணான்டஸ் அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து, வெடிகுண்டுகளைத் தயார் செய்து, இந்திராவின் பொதுக்கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் வெடிக்கச் செய்தார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு அலுவலகக் கட்டிடங்களை தகர்க்கவும், ரயில்வே தண்டவாளங்களை தகர்க்கவும் அவர் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டதாக மத்திய அரசு அவர் மீது குற்றம்சாட்டியது.
 

மாறுவேடங்களில் பயணித்த பெர்ணான்டஸ், தமிழகத்தில் அப்போதிருந்த திமுக அரசாங்கத்தின் ஆதரவோடு, கலைஞரின் பாதுகாப்பில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அவரை பாதுகாக்கும் பொறுப்பை சேலம் மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் ஏற்றிருந்தார் என்று சொல்லப்படுவதுண்டு.
 

ஏனென்றால், நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட போதும் தமிழ்நாட்டில் திமுக அரசாங்கம்தான் கலைக்கப்படாமல் இருந்தது. இந்தியாவிலேயே சுதந்திரக் காற்று சுவாசிக்க முடிகிற மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்தது.
 

1976 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெர்ணான்டஸ் கொல்கத்தாவில் 1976 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் சித்திரவதை செய்யக்கூடாது என்று ஜெர்மனி, நார்வே, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்திரா அரசை வலியுறுத்தினார்கள். இதையடுத்து, திகார் சிறைக்கு மாற்றப்பட்ட பெர்ணான்டஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்பட்டது.
 

1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து 1977 மார்ச் மாதம் 21 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து உருவாக்கிய ஜனதாக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெர்ணான்டஸ் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முஸாபர்பூர் தொகுதியில் வெற்றிபெற்றார். மொரார்ஜி தலைமையில் அமைந்த ஜனதா அரசில் பெர்ணான்டஸ் தொழில்துறை அமைச்சாராக பொறுப்பேற்றார்.  
 

ge


இவருடைய பதவிக் காலத்தில்தான் இந்தியாவில் இயங்கிவந்த பன்னாட்டு வர்த்தக நிறுவனமான ஐபிஎம்மையும், கோககோலா நிறுவனத்தையும் இந்தியாவிலிருந்து விரட்டி அடித்தார். தனது தொகுதியில் ஒரு தொலைநோக்கி மையத்தையும், காந்தி பெயரில் அனல் மின் திட்டத்தையும் தொடங்கினார். ஜனதா கட்சியில் இணைந்த பிறகும் ஜனசங்கத் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதை பெர்ணான்டஸ் கடுமையாக கண்டித்து பேசினார். அவரைத் தொடர்ந்து பலரும் இதுகுறித்து பேசினர். இதையடுத்து ஜனதா கட்சியிலிருந்து ஜனசங் விலகியது. பிறகுதான் அந்தக் கட்சி தனது பெயரை பாரிதிய ஜனதா கட்சி என்று மாற்றியது. 1979ல் ஜனதா கட்சி அரசு கவிழ்ந்தது. 1980 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா பிரதமராக பொறுப்பேற்றார். பெர்ணான்டஸ் முஸாபர்பூரில் மீண்டும் வெற்றி பெற்றார். 1984ல் பெங்களூர் வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1989லும் 1991லும்  முஸாபர்பூரிலேயே போட்டியிட்டு வென்றார். 1989 ஆம் ஆண்டு அமைந்த வி.பி.சிங் தலைமையிலான அரசில் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார். அந்த சமயத்தில்தான் கொங்கன் ரயில் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். மங்களூரையும் மும்பையையும் ரயில் பாதையுடன் இணைத்தார். விடுதலைக்குப் பிறகு இந்திய அரசாங்கம் செயல்படுத்தி முதல் ரயில் பாதை இதுதான். அதுமட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதை மாற்றப்படாமலேயே கிடந்தது. முதன்முறையாக கலைஞர் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில்தான் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்ற பெர்ணான்டஸ் உத்தரவிட்டார்.
 

வி.பி.சிங் அரசு கவிழ்க்கப்பட்டவுடன், ஜனதாதளம் பல கூறுகளாக உடைந்தது. அதையடுத்து 1994 ஆம் ஆண்டு சமதா கட்சி என்ற பெயரில் சொந்தக் கட்சியை தொடங்கினார் பெர்ணான்டஸ். காலத்தின் கொடுமை என்னவென்றால், எந்த பாஜகவை ஜனதா கட்சியிலிருந்து வெளியேற்ற காரணமாக இருந்தாரோ அந்த கட்சியுடன் 1996 ஆம் ஆண்டு கைகோர்த்தார். ஆனால், வாஜ்பாய் ஆட்சி அமைக்க முடியாமல் ராஜினாமா செய்ததும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார். 1998 ஆம் ஆண்டு அதிமுக ஆதரவுடன் 13 மாதங்கள் மட்டுமே அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையிலும், 1999 ஆம் ஆண்டு திமுக ஆதரவுடன் அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையிலும் பெர்ணான்டஸ் இடம்பெற்றார்.
 

வாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சமயத்தில்தான், பொக்ரான் அணுகுண்டு வெடிக்கப்பட்டது என்று பெருமையாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், அந்த அணுகுண்டு, நரசிம்மராவ் காலத்தில் தயாரிக்கப்பட்டு, தேவகவுடா காலத்தில் வெடிக்க மறுக்கப்பட்ட அணுகுண்டு ஆகும். அதன் தயாரிப்பு பணியில் பங்கேற்றிருந்த அப்துல்கலாமின் யோசனையால் அந்த அணுகுண்டை வெடிக்க வாஜ்பாய் ஒப்புதல் கொடுத்தார் என்பதுதான் உண்மை. அதனால் வாஜ்பாய் அரசுக்கு பெருமை கிடைத்தது என்றாலும், பாகிஸ்தான் அதுவரை மறைத்து வைத்திருந்த தனது அணுகுண்டை வெடித்து அதன் பலத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்துவிட்டதாக விவாதம் கிளம்பியது.
 

அதுபோலத்தான், கார்கில் போரில் வாஜ்பாய் மற்றும் பெர்ணான்டஸின் பங்கையும் சிலாகித்து பேசப்படுவதுண்டு. ஆனால், கார்கில் மலை உச்சியை பாகிஸ்தான் வீரர்கள் எப்படி ஆக்கிரமித்தார்கள் என்ற விவரமும், அந்த போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வாங்கப்பட்ட சவப்பெட்டிகளில்கூட ஊழல் நடைபெற்றதாக வெளியான செய்திகளும் சர்ச்சைக்குரியவையாக தொடர்கின்றன.
 

எல்லாவற்றையும் மீறி, எல்லாவகையிலும் தான் ஒரு அப்பழுக்கற்ற சோசலிஸ்ட் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார் பெர்ணான்டஸ்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...