Advertisment

பாஜக ஆட்சியில் முக்கிய அமைச்சர்... விடுதலைப் புலிகளை ஆதரித்த தலைவர்... ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முகங்கள்

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் இன்று காலை காலமானார். இவருக்கு 88 வயது ஆகிறது. இவர் கடந்த பல வருடங்களாகவே நோயுற்றிருந்தார், நியாபக மறதியால் அவதிப்பட்டார். கடந்த சில நாட்களாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

george fernandes

அடல் பிஹாரி வாஜ்பாய், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தபோது ஃபெர்னாண்டஸ் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகத் திறம்பட செயலாற்றியுள்ளார். இவர் 1930 ஜூன் 3ஆம் தேதி மங்களூருவில் பிறந்தவர். கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த இவரை பெங்களூருக்கு பாதிரியார் படிப்பிற்காக 1946ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். பின்னர், அந்தப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு 1949ஆம் ஆண்டு பம்பாயில் சோஷியலிஸ்ட் ட்ரேட் யூனியன் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இதன் பின்னர் இரயில்வேயில் வேலை பார்த்துக்கொண்டே படிப்படியாக அந்த அமைப்பிற்கே தலைவராகி பல போராட்டங்களை 1950-1960 கால கட்டத்தில் முன் நின்று நடத்தியிருக்கிறார். தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவராக இருந்த இவர், நேரடி அரசியலில் இறங்கினார். இவருடைய முதல் வெற்றியே மிகவும் வலிமையானது. காங்கிரஸ் கட்சியில் அப்போதிருந்த மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எஸ்.கே.பாட்டீலை எதிர்த்து முதன் முதலாக தெற்கு மும்பை தொகுதியில் 1967ஆம் ஆண்டில் சம்யுக்தா சோஷியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸின் மிகப் பெரிய செல்வாக்குடைய வேட்பாளரைத் தோற்கடித்து வென்றதால் இவர், ஜெயண்ட் கில்லர் என்று அழைக்கப்பட்டாராம்.

படிப்படியாக அரசியலில் உயர்ந்து வந்த இவருக்கு தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அகில இந்திய ரெயில்வே மென்ஸ் ஃபெடரேஷனின் தலைவராக இருந்திருக்கிறார். 1974ஆம் ஆண்டில் வரலாறு காணாத ஒரு ஸ்ட்ரைக் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களால் நடத்தப்பட்டது. அதற்கு தலைமை தாங்கியவர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஒரு ரயிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அந்த ரயில் ஒரு இடத்தில் தொடங்கி இறுதி ஸ்டேஷனில் போய் சேரும் வரை வேலை பார்த்தாக வேண்டும் என்கிற விதிமுறை இருந்தது. அதையே சுதந்திரம் பெற்றும் இந்திய ரயில்வேதுறை பின்பற்றி வந்தது. அந்த வேலை அளவை 12 மணிநேரங்களாக குறைக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைக்க தொடங்கி, இறுதியில் 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று அகில இந்திய ரெயில்வே மென்ஸ் ஃபெடரேஷன் கோரிக்கை வைத்தது. மேலும், மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கு தரப்படும் ஊதியம்போன்று ரெயில்வேவுக்கும் தரவேண்டும் என்று இரண்டாவது கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் உள்ள ரெயில்வே துறை ஊழியர்கள் பந்த்தில் இறங்கினார்கள். மே8 ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் 17 லட்சம் ஊழியர்கள் பங்கேற்று, 20 நாட்களுக்கு பின் இந்த போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் மீது மிகவும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

george

இதனையடுத்து 1975ஆம் ஆண்டில் அவசரக்கால கட்டம் இந்திராகாந்தியால் அமல்படுத்தப்பட்டபோது, இவர் அதை முழுமையாக எதிர்த்திருந்தார். அந்த காலகட்டத்தில் சீக்கியர் போன்ற மாறுவேடத்தில் அலைந்ததாகவும் கூறப்படுகிறது. ரயில்வே பாலங்களை டைனமைட் வைத்து தகர்த்தார் என்று 1976ஆம் ஆண்டு அவர் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 1977 ஆண்டில் இந்திரா காந்தி அவசரக்கால பிரகடணத்தை திரும்ப பெற்றுக்கொண்டபோதிலும் ஜார்ஜ் சிறையிலேயே இருந்தார். அந்த நிலையிலும் பிஹார் முஜாஃபார்பூர் தொகுதியில் சிறையிலிருந்துகொண்டே போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அதன்பின், ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போது, அதாவது மொராஜிதேசாய் பிரதமராக இருந்தபோது தொழில்துறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். 1989-1990 கால கட்டத்தில் விபி சிங் பிரதமராக இருந்தபோது ரயில்வேதுறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது மங்களூர் முதல் பாம்பே வரை போடப்பட்ட ரயில்வே வழிபாதை திட்டம் மிகவும் பேசப்பட்ட ஒன்று. ஜனதா தள் கட்சியிலிருந்து பிரிந்து ஜார்ஜும், நிதிஷ் குமாரும் இணைந்து சமதா கட்சியை 1994ஆம் ஆண்டு உருவாக்கினர். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவாராக இருந்திருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமாரக இருந்தபோது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், மேலும் பல துறைகளில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

george fernandes

இவர் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் மற்றும் பொக்ரான் நியூக்ளியர் சோதனை முயற்சி நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல் அந்த கால கட்டத்தில், வெளிப்படையாகவே விடுதலை புலிகளுக்காக ஆதரவு தெரிவித்தார். விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்தவர், அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியவர் போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது. விடுதலை புலிகளுக்கு தனது ஆதரவை காட்டியதை போன்றே திபெத் கிளர்ச்சியாளர்களுக்கும், ஆன்ட்டி பர்மா அமைப்புகளுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். இதுபோல சோஷியலிஸ்ட் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த இவருடைய அரசியல் வாழ்கையின் கறுப்புப்புள்ளியாக 2004ஆம் ஆண்டு பல ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தன. ஜார்ஜுக்கு மிகவும் அரசியலில் நெருங்கிய நண்பராக இருந்த ஜெயா ஜெட்லீ இவரதுபெயரை பயன்படுத்தி பலரிடம் கமிஷன்கள் வாங்கியது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. தன்னுடைய கட்சியின்துணைத்தலைவராக இருந்தநிதிஷ் குமாருக்கும் இவருக்கும் வருத்தம் ஏற்பட்டதால் கட்சிக்குள்ளே பல பிரச்சனைகள் வந்தது. மேலும் கார்கில் போரில் இறந்தவர்களுக்கு வாங்கிய சவப்பட்டியில் ஊழல் என்று அதிலும் இவருடைய பெயர் அடிபட்டது. இதனால் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இவருடைய சமதா கட்சியை மீண்டும் 2003ஆம் ஆண்டில் ஜனதா தள்(யுனைடட்) கட்சியுடன் இணைத்தார். ஆனாலும், அவருக்கு முஜாஃபார்பூர் தொகுதியில் சீட்டு கொடுக்கவில்லை. இதனால் அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் அந்தத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். பின்னர், 2009 ஆகஸ்ட் 4ஆம் தேதி ராஜ்யசபா உறுப்பினரானார்.

இப்படி தொழிலாளர்களுக்காக பாடுபட்டவரும், எமர்ஜென்ஸியை எதிர்த்தவருமான ஜெயண்ட் கில்லர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு இந்தியாவிற்கு பெரும் இழப்பாகும்.

george fernandas janata dal janata party nda alliance
இதையும் படியுங்கள்
Subscribe