ADVERTISEMENT

நீதிமன்றத்தின் நெடிய வாசலில் முத்தலாக்..!

08:15 PM Aug 23, 2017 | Anonymous (not verified)

நீதிமன்றத்தின் நெடிய வாசலில் முத்தலாக்..!



"எனது குடும்பம் உடைந்து சிதறியதால் ஏற்பட்ட வலி என்னை பாதித்தது. என்னைப்போல மேலும் பெண்கள் இத்தகைய வலியை அனுபவிக்கக்கூடாது என்று நினைத்தேன். இது இஸ்லாமிய பெண்களுக்கு மிக முக்கியமான நாள்"

மும்முறை தலாக் சொல்லி உடனடியாக பெண்ணை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய முறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை முகமலர்ச்சியுடன் வரவேற்கிறார் சாயிரா பானு.

இவர்தான் இந்த வழக்கின் முக்கியமான நபர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாயிரா பானு. 15 ஆண்டுகள் இவர் தனது கணவருடன் வாழ்ந்தார். இரண்டு குழந்தைகளுடன் இவர் வாழ்ந்தார் என்பதைக் காட்டிலும் தனது திருமணத்தை பாதுகாக்க கணவரின் துன்புறுத்தல்களை தாங்கி வாழ்ந்தார் என்பதே உண்மை.

இவருடைய பெற்றோர், போதுமான அளவுக்கு வரதட்சனை கொடுத்தார்கள். மேலும் மேலும் வரதட்சனை கேட்டுக் கொடுமைப் படுத்தினார்கள். ஆறுமுறை அபார்ஷன் செய்யும்படி வற்புறுத்தினார்கள். இவருடைய கணவர் மயக்கமூட்டும் மருந்துகளை கொடுத்து நினைவிழக்கும்படி செய்தார். உறவினர்களைக்கூட பார்க்க அனுமதி அளிக்க மாட்டார்.

இந்நிலையில்தான் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாயிராவின் கணவர் ரிஸ்வான் அகமதுவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் தலாக், தலாக், தலாக் என்று மூன்று முறை எழுதப்பட்டிருந்தது.

அதாவது, அவருடைய கணவர் அவரை விவாகரத்து செய்துவிட்டார். ஆம். அத்துடன் 15 வருட திருமண வாழ்க்கையை அவர் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார். ஆனால், அவர் அடுத்ததாக ஒரு பெண்ணை திருமணம் செய்து புது வாழ்க்கையைத் தொடங்குவார்.

சாயிரா பானு சும்மா இருக்கவில்லை. திருமணம் செய்யும் போது இருவருடைய சம்மதத்தையும் கேட்கிறார்கள். விவாகரத்து எனும்போது ஒருதலைப்பட்சமான முடிவை ஏற்க வேண்டும் என்பது சரியா? என்று 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடுத்தார்.

இவருடைய வழக்கில் ஜெய்பூரைச் சேர்ந்த ஆஃப்ரீன் ரெஹ்மான் என்ற பெண்ணும் சேர்ந்து கொண்டார். இவரையும் இவருடைய கணவர் தபால் மூலம்தான் தலாக் சொல்லி விவாகரத்து செய்தார். இவர்களைத் தவிர, பெண்ணுரிமை அமைப்புகளும் தங்களை இந்த வழக்கில் இணைத்துக் கொண்டன.

வழக்கு விசாரணையில் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்திடம் பல கேள்விகளை எழுப்பியது. இந்தக் கேள்விகள் நாடு முழுவதும் கடுமையான விவாதங்களை எழுப்பியது.

குரானில் 90 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தலாக் சொல்லி பிரிய இடமளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஓரே சமயத்தில் மும்முறை தலாக் சொல்லி பிரிய முடியாது என்றும் கூறப்பட்டது.

90 நாட்கள் அவகாசம் என்பது தம்பதியினர் தங்களுக்குள் புரிதலை ஏற்படுத்திக்கொள்ள அளிக்கப்படும் கால அவகாசம் என்று இஸ்லாமிய தனிநபர் சட்டவாரியம் தெரிவித்தது.

எனினும், சமீப காலமாக இணையதளம் வழியாகவும், முகநூல், வாட்ஸ்ஆப், குறுஞ்செய்திகள் மூலமாகவும் மும்முறை தலாக் சொல்லி வெளிநாடுகளில் இருப்போரும் எளிதாக விவாகரத்து செய்யும் போக்கு அதிகரித்திருப்பதை பெண்கள் சார்பில் ஆஜரான வழக்குறைஞர்கள் தெரிவித்தனர்.

அரசியல் சட்டம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மீறப்படும் நிலை இருப்பதை உறுதி செய்த உச்சநீதிமன்றம் மும்முறை தலாக் சொல்லி பிரியும் முறைக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்பு இஸ்லாமிய பெண்களின் காதுகளில் இசைக்கும் இனிய கீதமாகும் என்று இஸ்லாமிய பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தங்கள் கணவர்கள் தங்களை எந்த நேரமும் விவாகரத்து செய்துவிடுவார்கள் என்று அஞ்சி நடுங்கி அவர்களுக்கு அடங்கி ஒடுங்கிக் கிடந்த நிலை மாறும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

- ஆதனூர் சோழன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT