Skip to main content

காந்தி 152: “அதிகாரத்திற்கு எதிரான கலகக்காரர்” - சுனில் கிருஷ்ணன்

 

sunil 1.jpg

 

காந்தி - மறைந்து 73 ஆண்டுகளானாலும் தொடர்ந்து பலவகைகளில் நினைவுகூரப்படுபவர். அவர் மீதான விமர்சனங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால் இந்தியச் சூழலில் தொடர் வாசிப்புக்கும் தொடர் பகுப்பாய்வுக்கும் உள்ளாகும் மூன்று முக்கிய தலைவர்களில் காந்தியும் ஒருவர் (மற்ற இருவர் - அம்பேத்கர், பெரியார்). அந்தவகையில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காந்திய சிந்தனைகள் குறித்து நவீன ஆளுமைகளுடன் சிறிய உரையாடலை மேற்கொண்டோம். நவீன கோட்பாடுகளின் அடிப்படையில் காந்தியை உள்வாங்கிக் கொண்டு இயங்கும் நால்வரிடம் நான்கு கேள்விகளை முன்வைத்தோம். ஒரே கேள்விகளுக்கு நான்கு விதமான பதில்கள் என்ற ஆர்வம்தான் இந்த உரையாடலுக்கான மையப்புள்ளி. 

 

முதலில் நம்முடன் உரையாடுபவர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன். காரைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர், நவகாந்தியர் என்றறியப்படும் சிந்தனையாளர். ‘அம்புப் படுக்கை’ சிறுகதை தொகுதிக்காக 2018ஆம் ஆண்டு சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். gandhitodaytamil.com என்ற வலைப்பூவை நடத்தி வருகிறார். இனி சுனில் கிருஷ்ணன் உரையாடுவார்.

 

சமகாலத்தில் காந்தி எந்த வகையில் தேவைப்படுகிறார் அல்லது சமகாலப் பிரச்சனைகளுக்கு காந்தி எந்த மாதிரியான தீர்வாக இருக்கிறார்?

காந்திய காலத்து உலக தலைவர்களில் முக்கியமானவர்கள் என ரூஸ்வெல்ட்,  சர்ச்சில், ஸ்டாலின் என பலரைக் குறிப்பிட முடியும். வரலாற்று பங்களிப்பிற்கு அப்பால் அவர்களுக்கு இன்று ஏதாவது முக்கியத்துவம் உண்டா? காந்தியின் சமகாலத்தவர்களில் இன்று ஹிட்லர் மட்டுமே  கருத்து தரப்பாக நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை இன மேட்டிமையாளர்களால் முன்வைக்கப்படுகிறார். காந்தியம் அளவிற்கு சமகால முக்கியத்துவம், வேறு சிந்தனை தலைப்புகளுக்கு இல்லை. சமகாலத்திற்கான எதிர்வினையாகவும் காலம் கடந்த தீர்க்கதரிசனமும் கொண்டவை அவருடைய பார்வைகள். குறைந்தது இரண்டு புள்ளிகளில் அவர் சிந்தனைகள் சமகால பொருத்தம் கொண்டவை என சொல்ல முடியும். ஒன்று, வெகுமக்களுக்கான போராட்ட வடிவத்தை வடிவமைத்தது. இரண்டு, சூழலியல் சிக்கல்களுக்கான தீர்வு நோக்கிய புரிதல்.

 

sunil 2.jpg

 

காந்தி காலத்திலும் அதற்கு முன்பும் அகிம்சையையும் சகோதரத்துவத்தையும் பலர் பின்பற்றியிருக்கிறார்கள் (புத்தர், குருநானக், பெரியார், அம்பேத்கர் உட்பட). இதில் காந்தியின் அகிம்சை எந்தவகையில் வேறுபட்டது?

காந்தியே தன் விழுமியங்கள் மலைகளைப்போல் பழமையானவை என்று சொல்கிறார். காந்தியின் பங்களிப்பு என்பது தனிமனிதரின் ஆன்மீக கடைத்தேற்றத்துக்கான விழுமியங்களை ஒட்டுமொத்த மானுட சமூகத்திற்கு, தேசத்திற்கு, மானுட குலத்திற்கான விழுமியமாக நடைமுறை நோக்கில் கொண்டு சேர்த்ததுதான்.

 

இறுதி காலத்தில், தன்னுடைய பல செயற்பாடுகள் குறித்து காந்திக்கு குற்றவுணர்வு இருந்ததுபோல் தோன்றுகிறது. இச்சமூகத்தை இதுவரையில் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது போலான கருத்து அவர் மனதில் இருந்ததாக தோன்றுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

காந்தி ஒரு விஷயம் தன்னால் முடியும் என்பதாலேயே எல்லோராலும் முடியும் என எண்ணினார். தன் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்துகொள்ள அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. வாழ்க்கையைப் பரிசோதனையாகவே கண்டார். வாழ்வின் இறுதிகாலத்தில் தான் எதிர்பார்த்த வேகத்தில் தன்னால் மாற்றங்களை நிகழ்த்த முடியவில்லை என்பதை தன் எல்லை என கண்டுகொண்டார். இந்திய சமூகம் காந்தியை தனது இலக்குக்காகப் பயன்படுத்திக்கொண்டது. அதற்கப்பால் அவர் முன்வைத்த மத ஒற்றுமை, சாதி ஒழிப்பு போன்றவை முக்கியத்துவம் இழந்தன. காந்தியை, இந்த எல்லைகள் தோல்விகளினூடாக இன்னும் நெருக்கமாக உணர்கிறேன்.

 

sunil 3.jpg

சுனில் கிருஷ்ணன்

 

இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் காந்தி எதிர்மறையான பிம்பமாகவோ, 'பழைய ஆள்' பிம்பமாகவோதான் இருக்கிறார். வன்முறையைக் கொண்டாடுகிற இன்றைய, அடுத்த தலைமுறைக்கு எப்படி காந்தியை கொண்டு சேர்ப்பீர்கள்?

நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூத்தர் தொடங்கி அரேபிய வசந்தம், வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு வரை காந்தி அதிகாரத்திற்கு எதிரான கலகக்காரர் என்றே அறியப்படுகிறார். இந்தியாவில் மட்டுமே அவர் அதிகாரத்தின் முகமாக காணப்படுகிறார். இது துரதிஷ்டவசமானது. காந்தியை ஆளும் அதிகாரத்தின் சின்னத்திலிருந்து விடுவிக்க முடியாத அளவிற்கு சிடுக்காகி உள்ளது. அவரை நெருங்கி அறியத் தொடங்கினாலே அவர் எத்தகைய கலகக்காரர் என்பதை உணர முடியும்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !