Skip to main content

காந்தி 152: போராட்டத்தை அரசியல்மயப்படுத்தியவர் - சொ. பிரசன்ன பாரதி

 

pb1.jpg

 

காந்தி - மறைந்து 73 ஆண்டுகளானாலும் தொடர்ந்து பலவகைகளில் நினைவுகூரப்படுபவர். அவர் மீதான விமர்சனங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால் இந்தியச் சூழலில் தொடர் வாசிப்புக்கும் தொடர் பகுப்பாய்வுக்கும் உள்ளாகும் மூன்று முக்கிய தலைவர்களில் காந்தியும் ஒருவர் (மற்ற இருவர் - அம்பேத்கர், பெரியார்). அந்தவகையில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காந்திய சிந்தனைகள் குறித்து நவீன ஆளுமைகளுடன் சிறிய உரையாடலை மேற்கொண்டோம். நவீன கோட்பாடுகளின் அடிப்படையில் காந்தியை உள்வாங்கிக் கொண்டு இயங்கும் நால்வரிடம் நான்கு கேள்விகளை முன்வைத்தோம். ஒரே கேள்விகளுக்கு நான்கு விதமான பதில்கள் என்ற ஆர்வம்தான் இந்த உரையாடலுக்கான மையப்புள்ளி. 

 

தற்போது நம்முடன் உரையாடுபவர் எழுத்தாளர் சொ. பிரசன்ன பாரதி. திருவண்ணாமலை மாவட்டம் தென்கரும்பலூரைச் சேர்ந்த இவர், பத்திரிகை துறையிலும், மொழிபெயர்ப்பு துறையிலும் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தத்துவஇயல் நூலான ‘காலம் என்னும் கடவுள் (முதல் பாகம்)’, ஒப்பிலக்கிய நாடக நூலான ‘பெண்களை மையப்படுத்திய கிளாசிக் நாடகங்கள்’, சிறார் இலக்கிய நூல்களான ‘சிறுவர் கதைப் புதையல்’ மற்றும் ‘சிறுவர் பாட்டுப் புதையல்’ என மொத்தம் 4 நூல்களை வெளியிட்டுள்ளார்.

 

சமகாலத்தில் காந்தி எந்த வகையில் தேவைப்படுகிறார் அல்லது சமகாலப் பிரச்சனைகளுக்கு காந்தி எந்த மாதிரியான தீர்வாக இருக்கிறார்?

இந்தக் கேள்வியை தேசிய அளவிற்கானது என்று எடுத்துக்கொண்டால், இப்போதைய நிலையில் காந்தி தேவைப்படவில்லை என்றே கூறிவிடலாம். ஏனெனில், இந்தியாவைக் கொள்ளையடிக்கும் தரகு முதலாளிகள், வலதுசாரி தீவிரவாதிகளுக்கான மேற்கோளாக காந்தி மாறிவிட்டார். அவரை உள்வாங்கி செரித்துவிட்டார்கள் என்றுகூட சொல்லலாம். அதற்குக் காரணம், தன் காலத்திலேயே அவர் எதிலும் தெளிவான நிலைப்பாடு எடுக்காதவராகவே இருந்திருக்கிறார். மிக முக்கியமான சூழலில், அவர் அரசியலைவிட்டு விலகிச் சென்றவராகவே விமர்சிக்கப்படுகிறார். இந்திய சமூக மற்றும் அரசியல் சூழலில், பல முக்கியமான அம்சங்களை அவர் குழப்பத்தில் தள்ளியவராக இருந்திருக்கிறார். அவர் உருவாக்கிய 'ஹரிஜன்' என்ற வார்த்தை கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

 

pb2.jpg

காந்தி காலத்திலும் அதற்கு முன்பும் அகிம்சையையும் சகோதரத்துவத்தையும் பலர் பின்பற்றியிருக்கிறார்கள் (புத்தர், குருநானக், பெரியார், அம்பேத்கர் உட்பட). இதில் காந்தியின் அகிம்சை எந்தவகையில் வேறுபட்டது?

உண்மைதான். ஆயுதமில்லா அரசியல்வழி போராட்டம் என்பதே அகிம்சைப் போராட்டம்தான். அந்தவகைப் போராட்டத்தை உலகளவில் பலர் பின்பற்றியிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, தனது போராட்டத்தைப் பெரியளவில் அரசியல்மயப்படுத்துவதில் வெற்றிபெற்றவராக காந்தியை குறிப்பிடலாம். பீகாரில் 'சம்பரான்' போராட்டத்தை இதன் தொடக்கமாகக் குறிப்பிடலாம். இந்தியா என்றதொரு நாட்டைக் கட்டியமைக்கும் பொருட்டு, மக்களைத் திரட்டும் பெரிய கருவியாக காந்தியடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்ற கருத்திற்கு நம்மால் வந்துசேர முடியும். நீங்கள் கேள்வியில் குறிப்பிட்ட நபர்களுக்கு கிடைத்த ஆதரவு வேறுவகையானது; அதேசமயம், காந்திக்கு கிடைத்த ஆதிக்கச் சக்திகளின் ஆதரவு வேறுவகையானது. இதற்குமேல் அவர் பயன்படமாட்டார் அல்லது விட்டுவைப்பது ஆபத்து என்ற சூழல் வருகையில், அவர் கொல்லப்படுகிறார். காந்தியின் அகிம்சை என்பது அரசியல் சாதுர்யத்தையும், அரசியல் அணிதிரட்டலையும் மையமாக வைத்ததோடு அல்லாது, ஆதிக்க சக்திகளின் ஆதரவையும் பெற்றது.

 

pb3.jpg

இறுதி காலத்தில், தன்னுடைய பல செயற்பாடுகள் குறித்து காந்திக்கு குற்றவுணர்வு இருந்ததுபோல் தோன்றுகிறது. இச்சமூகத்தை இதுவரையில் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது போலான கருத்து அவர் மனதில் இருந்ததாக தோன்றுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இருந்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகளும் உண்டுதான். இறுதிகாலத்தில், பார்ப்பனர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளும், அரசியலிலிருந்து ஒதுங்கியதும் இதற்கு உதாரணங்களாய் காட்டப்பட முடியும். தான் தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுவிட்டோமா என்ற குற்றவுணர்வும்கூட அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். பிர்லா மாளிகையில் இருந்துகொண்டும், தரகு முதலாளிகள் கட்டிக்கொடுத்த ஆசிரமத்தில் இருந்துகொண்டும் அவர்களிடம் நிதிப்பெற்றும், அவர் எளிய மக்களுக்கான போராட்டங்களை அறிவித்ததையும், கடைசிவரை தான் கட்டுப்படுத்திய காங்கிரஸ் கட்சி சார்பாக, நாட்டிற்கான தெளிவான பொருளாதாரக் கொள்கையை வகுக்காமல் போனதையும் நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. மேலும், உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் மேற்கொண்ட பல முரண்பாடான செயல்பாடுகளும் நம் நினைவில் உள்ளன. ஏற்கமுடியாத சில சமரசங்களை அவர் செய்தார். இந்த நாடு வேறொரு பாதையில் பயணிப்பதைத் தடுக்கும் ஒரு கருவியாக அவர் இருந்திருக்கிறார் என்ற முடிவை நம்மால் எளிதில் எட்ட முடிகிறது. ஆனாலும், காந்தி மிகப்பெரிய பிம்பம்தான். பலரின் சிந்தனைகள் மற்றும் பார்வைகளைப் பொறுத்து அவர் மாறுபடுகிறார் என்றாலும், தர்க்கரீதியான முடிவுகளுக்கு நாம் வர வேண்டியுள்ளது. இன்றும்கூட, அவர் ஆதிக்கச் சக்திகளுக்குத் தேவைப்படும் அடையாளமாக இருக்கிறார். அதேசமயம், பாதிக்கப்படும் வெகுமக்களாலும் கொண்டாடப்படுகிறார். புரிதல் குறைபாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.

 

pb4.jpg

சொ. பிரசன்ன பாரதி

 

இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் காந்தி எதிர்மறையான பிம்பமாகவோ, 'பழைய ஆள்' பிம்பமாகவோதான் இருக்கிறார். வன்முறையைக் கொண்டாடுகிற இன்றைய, அடுத்த தலைமுறைக்கு எப்படி காந்தியை கொண்டு சேர்ப்பீர்கள்?

விஷயம் எதுவும் புரியாமல், காந்தியை விமர்சிப்பது ஒரு ஃபேஷனாக உள்ளது. சிலர் தங்களின் மேதாவித்தனத்திற்கான அடையாளமாகவும் காந்தி மீதான விமர்சனத்தை மேற்கொள்கின்றனர். இன்றைய நிலையில், காந்தியை பற்றி விமர்சித்தால் எதிர்ப்பதற்கு ஆளில்லை என்ற எண்ணமும் அதற்குக் காரணமாக இருக்கலாம். வன்முறையைக் கொண்டாடுகின்ற இளைய தலைமுறையினரின் பின்னணி மற்றும் அவர்களுக்கான தூண்டுகோல்கள் என்பவை மாறுபட்டவையாக உள்ளன. தேசிய அளவில் காந்தி அகிம்சையின் அடையாளமாக மேலோட்டமாக தோன்றலாம்தான். ஆனால், முறையானத் தீர்வை அது தராது. ஏனெனில், காந்தியின் அகிம்சைப் போராட்டங்கள் (பூனா ஒப்பந்தம் தொடர்பான உண்ணாவிரதம் உள்ளிட்ட) உள்ளீட்டளவில் வன்முறையைக் கொண்டவையாக இருந்திருக்கின்றன என்ற விமர்சனத்தை நாம் புறந்தள்ளிவிடலாகாது. இந்தியா என்பது பலவித தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதால், ஒவ்வொரு இனத்திற்குமான பிரத்யேகப் பிரச்சினையை ஆராய்ந்து, அதற்கேற்ற கருத்துகளின் வழியில்தான் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும். தமிழ்நாட்டு அளவில் பெரியார் என்ற அருமருந்து மிகச்சிறந்தது. இன்னொன்று, உலகிலேயே வேறெங்கும் இல்லாத சாதி என்ற கேடு இந்தியாவில் உள்ளது. எனவே, அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களை பொது அடையாளமாக முன்னிறுத்த முடியாத அவலமும் உள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !