Skip to main content

’ஊருக்கே அரிசியும் உப்பும் போட்ட பூமி... இப்போ?’ கஜா பாதிப்பு களத்தில் இருந்து சிவசங்கர்

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
gaja sss1



தண்ணீர் தாகம் எடுத்தது. காரை நிறுத்தினோம். ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன் இறங்கினார். கடைக்கு சென்றார். ஏதோ பேசினார், பேச்சு நீண்டுக் கொண்டே போனது. தண்ணீர் பாட்டிலோடு வந்தார்.
 

"என்ன பேசினார், ஏன் நேரம் ஆகியது?", என்று கேட்டேன். 
 

அதற்கு முருகன், "இல்லண்ணா. வழக்கம் போல் 'கூலிங் வாட்டர் வேண்டாம்' என்றேன், அதற்கு கடைக்காரர், " பதினைந்து நாளா கரண்ட்டே இல்ல, அதனால் கூலிங் வாட்டரே இல்லிங்க" என்றார்.
 

அதை கேட்டவுடன், ஷாக் அடித்தது போல் இருந்தது. அதுவரை இருந்த உணர்வு நிலை மாறியது. அப்போது தான் உரைத்தது, பதினைந்து நாட்களாக மின்சாரம் இல்லை என்பது. இது தான் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி நிலை.
 

சில நாட்களுக்கு முன், வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தொடர்பு கொண்டார். "திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு புயல் நிவாரணப் பொருட்களை நீங்கள் அனுப்பியதை பார்த்தேன். உங்க அரியலூர் மாவட்டம் முழுதுக்கும் நாங்க தான் உப்பு சப்ளை பண்றோம். அதனால் பல பெரிய மளிகைக் கடைக்காரங்க கிட்ட உதவி கேட்டிருக்கிறேன். உங்க நண்பர்கள் உதவ முன்வந்தால், வேதாரண்யம் அனுப்புங்க. வேதாரண்யம் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு", என்றார்.
 

வேதாரண்யம் பாதிப்பு நாடே அறிந்தது. ஆனால், பதினைந்து நாட்கள் கழித்தும் அரசு உதவிகள் வந்து சேரவில்லை என்பது தான் மிக முக்கியமாக கவனிக்கப்பட விஷயம்.
 

ஆண்டிமடம் ஒன்றிய தி.மு.கழகம் சார்பாக அறுபது குடும்பங்களுக்கு தேவையான  அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்ப தயாரானார்கள். 
 

புயல் பாதித்த பகுதிகளில் பதினைந்து நாட்களுக்கு பிறகு என்ன நடந்துள்ளது என்று பார்க்கலாம் என்று கிளம்பினோம். அப்போது தான் முதல் அனுபவமே நிலைமையை சொல்லியது.
 

கும்பகோணத்தில் இருந்து செல்லும் போது, மன்னார்குடி பகுதியை தாண்டும் போதே போர்களத்தில் நுழைந்த எண்ணம். முதல் பாதிப்பாக மின் துறை தான் வெளுத்து வாங்கப்பட்டிருந்தது. 

 

gaja sss2


 

வழி நெடுக மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. வயர்கள் அறுந்து கிடந்தன. போக போக உயர்ந்த மரங்கள் சாய்ந்து கிடந்தன. சில இடங்களில் நெற் பயிரும் சாய்ந்து கிடந்தது, யானை ஏறி மிதித்தது போல.
 

குடிசை வீடுகள் மொத்தமாக சாய்க்கப்பட்டு கிடந்தன.  ஓட்டு வீடுகளில்  பாதிக்கும் மேற்பட்ட ஓடுகள் சேதம். கான்கிரீட் வீடுகளில் மேற்புறம் சிலர் ஷெட் அமைத்திருந்தனர். அவைகள் காற்றினால் கிழித்து எறியப்பட்டிருந்தன.
 

சாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் அறிவிப்பு பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவை தான் தமிழகத்தின் நெற் களஞ்சியத்தின் அவலத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன.
 

(தொடரும்...)
 

ssss23

 


 

 

 

 

 

 

 



 



 

Next Story

மலைப்பகுதியில் ‘விடியல் பயணத் திட்டம்’ தொடக்கம் 

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Dawn Trip begins in hills

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், “அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிருக்கான 'விடியல் பயணம்’ திட்டம் நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிருக்கான விடியல் பயணத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுகவினர், தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.

Next Story

“பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Beef can be transported in buses Minister Sivasankar

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலை என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி பக்கோடா விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அதோடு அரூருக்கும் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். அதன்படி அண்மையில் வழக்கம்போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோமீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்து வருவதாகப் பாஞ்சாலை பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி மோப்புப்பட்டி என்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலத்தை இறக்கி விட்டுள்ளார். பாஞ்சாலை அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கே இறக்கி விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலையை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலை நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி பஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Beef can be transported in buses Minister Sivasankar

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளிக்கையில், “அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.  500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.