Advertisment

கஜாவை துல்லியமாக கணித்த டெல்டா வெதர்மேன்! 

"வணக்கம் நான் செல்வக்குமார் பேசுறேன். இது செல்வக்குமார் வானிலை அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையைப் பார்க்கவும்"

Advertisment

இப்படி சற்று கனத்த குரலில் வாட்சப்பில் வலம் வரும் வானிலை அறிக்கை டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.

Advertisment

இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் மன்னார்குடி மேலவாசலில் வசிக்கும் ஆசிரியர் செல்வக்குமார். வேதாரண்யம் வட்டம் தகட்டூரைச் சேர்ந்த வானிலை ஆர்வலரான இவர் கஜா புயலை பதினைந்து தினங்களுக்கு முன்னதாகவே துல்லியமாக கணித்து நாகை வேதாரண்யம் இடையே 160 கிமீ வேகத்தில் காற்றுடன் கரையைக் கடக்கும் என்று அறிவித்திருந்தார்.

gaja storm - Delta Weather Man

அதன்படியே கஜா டெல்டாவை சின்னாபின்னமாக்கியது. இந்திய வானிலை ஆராய்ச்சித்துறையோ ஒரு வாரத்திற்கு முன்புவரை கஜா புயல் கடலூரில் கரையைக் கடக்கும் எனக் கூறிவந்த நிலையில் பதினைந்து தினங்களுக்கு முன்பே மிகத் துல்லியமாக வானிலையை கணித்த ஆசிரியர் செல்வக்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...

இவர் கஜாவை மட்டுமில்லாமல் 2008ல் டெல்டாவைத் தாக்கிய நிஷா புயலையும் வர்தா மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒக்கி‌ புயலையும் இதே போன்று முன்கூட்டியே கணித்து விவசாயிகளிடமும் மீனவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக டெல்டா மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறு வயது முதலே வானிலையில் ஆர்வம் கொண்ட செல்வக்குமார். பனிரெண்டாம் வகுப்பு முதல் வானிலையைத் தொடர்ந்து கண்காணித்தும் கணித்தும் வருகிறார். ஆங்கில நாளிதழ்களில் வெளியாகும் வானிலை குறித்த செயற்கைக் கோள் வரைபடங்களைத் தொடர்ச்சியாக சேகரித்தும் அதைக் கொண்டு கணித்தும் வந்த செல்வக்குமார் அதை அவரே உறுதிபடுத்தியும் வந்துள்ளார்.

gaja storm - Delta Weather Man

பல நேரங்களில் அவரின் கணிப்பு சரியாக அமைந்ததால் மேலும் காற்றின் வேகம், திசை மற்றும் நகர்வுகளை துல்லியமாக கணக்கிடுவதில் பயிற்சியும் வல்லமையும் பெற்றிருக்கிறார். இதற்கு எந்தவிதமான பட்டப்படிப்பும் அவர் படித்தது இல்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. வானிலை அறிவியல் கற்க ஆர்வம் இருந்தும், குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலால் ஆசிரியர் பயிற்சிக்கு சென்ற இவர் தொடர்ந்து வானிலை குறித்து ஆராய்ந்த வண்ணமே இருந்திருக்கிறார்.

ஆசிரியர் பயிற்சி முடிந்தபிறகு ஆந்திராவில் தனியார் இறால் குஞ்சு பொறிப்பகத்தில் பணியாற்றியபோது அங்கும் அந்த நிறுவனத்திற்கு தேவையான சமயத்தில் கடல் மற்றும் வானிலையை ஆராய்ந்து தகவல்களை அளித்துள்ளார். அந்த சமயத்தில் 1995ல் ஒடிசாவைத் தாக்கிய சூப்பர் சைக்ளோன், ஆந்திர கடல்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என அங்கிருந்த மீனவர்களை எச்சரித்துளார். அவர் கூறியது போலவே கடல் சீற்றம் மீனவர்களை இழுத்துச் சென்றுள்ளது அதனால் அந்தப் பகுதியில் இருந்த மீனவர்கள் இவரிடம் தொடர்ந்து வானிலையைக் கேட்டு வந்துள்ளனர்.

Delta Weather Man

பின்னர் ஆசிரியர் பணி கிடைத்து மன்னார்குடி வந்த செல்வக்குமார் விவசாயிகள் அதிகம் கூடும் இடமான தேநீர் கடையில் வானிலை வரைபடம் வரைந்து, மழை குறித்த முன்னறிவிப்பை வழங்கி வந்துள்ளார். கடந்த 2000ம் ஆம் ஆண்டு தொடங்கிய தேனீர் கடைகளில் வானிலை அறிவிப்பு ஒட்டும் பணியை தன் பகுதி விவசாயிகளுக்கு செய்யும் கடமையாக நினைத்து இன்று வரை தான் வசிக்கும் மன்னார்குடி, மேலவாசல், வேதாரண்யம், தகட்டூர் போன்ற இடங்களில் உள்ள தேநீர் கடைகளில் பிரதி எடுத்து ஒட்டி வருகிறார்.

2010க்கு பிறகு குறுஞ்செய்தியாக வானிலை அறிக்கையை 300பேருக்கு அனுப்பி வந்த இவர், பின்னர் வாட்ஸ் ஆப்பில் பேசி ஆடியோ வடிவில் அனுப்பி வந்தார். 180 வாட்ஸ் அப் குழுக்களில் வானிலை அறிவிப்பு செய்து வந்த இவர் ஒரு கட்டத்தில் அதிகப்படியான உபயோகத்தால் வாட்ஸ்ஆப் செயலிழக்கவே தற்போது 'நம்ம உழவன்' என்னும் செல்போன் செயலியை உருவாக்கி அதில் வானிலை அறிக்கையை கூறி வருகிறார். இவரது வானிலை அறிக்கையை திடமாக நம்பும் டெல்டா விவசாயிகள் அதைப் பின்பற்றியே அறுவடை உள்ளிட்ட விவசாயப் பணிகளை மேற்கொள்வதாக தேநீர் கடையில் நின்றுகொண்டிருந்த சிவசாமி என்ற விவசாயி தெரிவித்தார்.

மேலும் ஆசிரியரான இவர் தனது மாணவர்களுக்கும் வானிலை அறிவியலை சுய ஆர்வத்தால் ஒரு பாடமாக எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆங்கிலத்தில் ஃபேஸ்புக்கில் வெளியிடும் வானிலை அறிக்கையை படித்த மேல்தட்டு வர்க்கத்தினரால் மட்டுமே புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் முடிகிறது. அதுபோல் செய்திகளில் இடம்பெறும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை அறிக்கையும் விரிவானதாக இல்லை.ஆனால் செல்வக்குமாரின்‌ பத்து நிமிடங்களுக்கு மிகாமல் உள்ள பதிவு செய்யப்பட்ட ஆடியோ தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும் இவர் வானிலை அறிக்கையை தினமும் இரண்டு முறை ஆய்வு செய்து அளித்து வருகிறார்.

இப்படி வானிலை குறித்த தனது அறிவை கடுமையான பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி எளிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இலவச சேவையாக வழங்கி வரும் ஆசிரியர் செல்வக்குமாருக்கு அந்த வானம் வசப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். தான் வெளியூருக்கு செல்லும் போதுகூட எப்போது குடை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துசெய்து விடுவேன் என தன் வானிலை அறிவை குறுநகையுடன் கூறும் செல்வக்குமார் நிஜமாகவே டெல்டா வெதர்மேன் தான்.

Predictive Accurate Weather Man delta gaja storm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe